அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேராதீர்கள் ? மாணவர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்
சென்னை, ஏப். 11-
அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்ற ஆசிரியர் பயிற்சி பள்ளியில் மாணவ, மாணவிகள் சேரவேண்டாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கேட்டுக்கொண்டார்.
சட்டசபையில் நேற்று இது தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
ஞானசேகரன் (காங்): வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் உள்ள ஜெபிஎஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக கூறி அப்பள்ளியில் படித்த மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அரசு அனுமதி பெறாத ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் அதிகம் உள்ளது. இதில் சேர்ந்துள்ள மாணவ, மாணவிகள் தேர்வு எழுதமுடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
அமைச்சர் தங்கம் தென்னரசு:
ஜெபிஎஸ் ஆசிரியர் பயிற்சி பள்ளி அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என்று ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு இருந்தோம். பத்திரிகைகளிலும் இதுகுறித்து விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. அப்பள்ளியில் படித்த 172 மாணவிகளும் 9 மாணவர்களும் ஏமாந்து உள்ளனர். அவர்கள் கலெக்டர் அலுவலகத்தையும் முற்றுகையிட்டுள்ளனர். அனுமதி பெறாமல் ஆசிரியர் பயிற்சி பள்ளி நடத்தியதற்காக அவர்கள் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி நிர்வாகி தலைமறைவாகிவிட்டார். அவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 1995-ம் ஆண்டுக்கு பிறகு மழலையர் ஆசிரியர் பள்ளிக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மோசடியாக மாணவர்களை சேர்த்துக்கொண்டு அவர்களை பகடைகாயாகப் பயன்படுத்தி தேர்வு எழுத அனுமதி கேட்க வைக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் செய்தால் தவறு தொடர்ந்த கொண்டுதான் இருக்கும்.
எனவே மாணவ, மாணவிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளியில் சேரும்போது அங்கீகாரம் பெறப்பட்டு நடத்தப்படுகின்ற பள்ளியா என்று பார்க்க வேண்டும். எத்தனை மாணவ, மாணவிகள் படிக்க அனுமதி பெற்று உள்ளனர் என்று தெரிந்து கொள்ள வேண்டும். அனுமதி பெறாமல் நடத்தப்படுகின்ற பள்ளியில் சேர்ந்து ஏமாந்து விடாதீர்கள்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
No comments:
Post a Comment