தமிழகத்தில் இன்று முதல்
தபால் நிலையங்களில் விமான டிக்கெட் விற்பனை
சென்னை, ஏப். 11-
தமிழ்நாட்டில் 247 தபால் அலுவலகங்கள் மூலமாக ஏர் டெக்கான் விமான டிக்கெட்கள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், இதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு தலைமை அஞ்சல் துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார், ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஏர் டெக்கான் டிக்கெட் விற்பனை சேவை இன்று முதல் தொடங்குகிறது.
ஒப்பந்தத்திற்கு பிறகு ஏர் டெக்கான் விமான சேவை நிறுவனத்தின் தலைவர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத் கூறியதாவது:
இந்தியாவில் சாதாரண மக்கள் விமான சேவையை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஏர் டெக்கான் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள சாமானியருக்கும் ஏர் டெக்கான் விமான பயணச் சீட்டு கிடைப்பதற்காக தபால் துறையுடன் இணைந்து செயல்படுகிறோம்.
முதல்கட்டமாக கர்நாடகா தபால் வட்டத்தில் உள்ள 500 தபால் அலுவலகங்கள் மூலமாக ஏர் டெக்கான் விமான பயண டிக்கெட்கள் விற்று வருகிறோம். அதற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, நாளை முதல் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் உள்ள 247 தபால் அலுவலகங்களிலும் விமான பயணச் சீட்டுகள் விற்பனையை தொடங்கியுள்ளோம்.
இந்தியாவில் தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் ஆகியவை பெரு நகரங்களிலேயே அமைக்கப்படுகின்றன. இந்தியா என்பது சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா மட்டுமல்ல. ஒவ்வொரு கிராமத்தையும் உள்ளடக்கியது. அந்த கிராமங்களும் முன்னேறினால் தான் நாடு முன்னேறியதாக அர்த்தம்.
இந்தியாவில் 500 விமான ஓடு தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளது. இவற்றை சீரமைத்து விமான சேவை வழங்கினால் எல்லா இடங்களுக்கும் விமானத்தில் செல்லும் நிலை ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் தலைமை அஞ்சல் துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார் பேசும்போது, ''தமிழகத்தில் ஏர் டெக்கான் விமான டிக்கெட்கள் விற்பனை செய்ய உள்ள 247 தபால் அலுவலகங்கள் இன்டர்நெட் மூலமாக இணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தபால் அலுவலகத்திலும் தலா 2 ஊழியருக்கு விமான டிக்கெட் விற்பனை செய்வது குறித்து ஏர் டெக்கான் பயிற்சி அளித்துள்ளது. டிக்கெட் விற்பனைக்காக கூட்டுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை. வழக்கம் போல் சேவை வரி, கல்வி வரி மட்டும் உண்டு. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, டிக்கெட் விற்பனைக்கான அஞ்சல் அலுவலகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதன் மூலம் தபால் துறைக்கு 5 சதவீதம் வருமானம் கிடைக்கும்'' என்றார்.
நிகழ்ச்சியில் அஞ்சல் துறை தலைவர்கள் மூர்த்தி, ராமச்சந்திரன், பொதுமேலாளர் முருகையன், இயக்குனர் டி.எஸ்.வி.ஆர்.மூர்த்தி பங்கேற்றனர்.
No comments:
Post a Comment