குழந்தை பெற்றெடுத்தார் இரண்டரை அடி உயர பெண்
போலியோ பாதிக்கப்பட்டவர் கணவர்
போபால், ஏப்.11: இரண்டரை அடி உயரமுள்ள பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ். போலியோ நோய் தாக்கியதால் இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டவர். இதனால், அவரால் நடந்து செல்ல முடியாது. தவழ்ந்துதான் செல்வார். அவரது மனைவி மீனா (18), உயரம் குறைவானவர். அவரது உயரமே இரண்டரை அடிதான். கணவன், மனைவி இருவராலும் வேலைக்கு போக முடியாது என்பதால், அவர்கள் மீனாவின் வீட்டிலேயே தங்கி இருக்கிறார்கள். மீனாவின் பெற்றோர் கூலி வேலை செய்து மகளையும், மருமகனையும் காப்பாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மீனா கர்ப்பம் அடைந்தார். மிகவும் குள்ளமான பெண் என்பதால், அவருக்கு பிரசவம் பார்க்க உள்ளூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் மறுத்துவிட்டனர். இதனால், சிந்த்வாராவில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு மீனா சென்றார். ஒவ்வொரு மாதமும் டாக்டர்கள் பரிசோதனை செய்து மருந்து மாத்திரைகள் கொடுத்தனர்.
கர்ப்பபையில் குழந்தை வளர வளர மீனாவுக்கு இனம்புரியாத பயமும் அதிகரித்தது. தனக்கு பிறக்கும் குழந்தையும் தன்னைப் போல உயரம் குறைவானதாக இருக்குமோ என்று மீனா பயந்தார். ஆனால், அவரது கர்ப்பபையில் வளரும் குழந்தையின் உயரம், சாதாரண குழந்தையின் உயரத்தை போலவே இருப்பதாக ஸ்கேன் செய்து பார்த்த டாக்டர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறினர். 6 மாதத்துக்கு மேல், கருவில் இருந்த குழந்தையை சுமக்க மீனா சிரமப்பட்டார்.
ஏப்ரல் மாத இறுதியில் மீனாவுக்கு குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், கடந்த 4ம் தேதி மருத்துவ சோதனைக்காக மீனா சிந்த்வாரா அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது, கருவில் இருந்த குழந்தையின் எடை 2 கிலோவை தாண்டியதை டாக்டர்கள் கண்டறிந்தனர். பிரசவத்துக்கு இன்னும் 3 வாரங்கள் இருக்கும் நிலையில் அதுவரை குழந்தையை தாங்கக் கூடிய நிலையில் மீனாவின் உடல்நிலை நிலை இல்லை. இதனால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்தனர். இதன்படி, சிசேரியன் அறுவை சிகிச்சையில் மீனாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. தாயும், குழந்தையும் நலமாக உள்ளனர். அந்த குழந்தைக்கு மீனா தாய் பால் ஊட்டுகிறார். இன்னும் சில நாட்களில் மீனாவும், குழந்தையும் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள் என்று டாக்டர்கள் கூறி உள்ளனர்.
இரண்டரை அடி உயரம் உள்ள குள்ளமான பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது சிந்த்வாரா மருத்துவமனையில் இதுதான் முதல் முறை.
No comments:
Post a Comment