உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு
27% இடஒதுக்கீடு செல்லும்
புதுடெல்லி, ஏப்.11: மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எனினும், பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தவர்களுக்கும் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் குழந்தைகளுக்கும் இடஒதுக்கீடு சலுகை வழங்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பையடுத்து, இந்த கல்வியாண்டிலேயே 27 சதவீத இடஒதுக்கீடு அமலுக்கு வருகிறது.
ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசின் உதவி பெறும் எல்லா உயர் கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
Ôஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தால் சமுதாயத்தில் பிளவு ஏற்படும். 1931ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீடு செய்வதை ஏற்க முடியாது. இடஒதுக்கீட்டின் பலன்கள் கிடைக்கக் கூடாதுÕ என்று அவர்கள் சார்பில் வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இந்த சட்டத்துக்கு 2007 மார்ச் 29ல் இடைக்கால தடை விதித்தது. இடைக்கால தடையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல் முறையீடு மனுவை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
5 நீதிபதிகள் பெஞ்ச்: இந்தவழக்கில் எழுப்பப்பட்டுள்ள பிரச்னையின் முக்கியத்துவம் கருதி வழக்கை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டதை அடுத்து, 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே.தாக்கூர், ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் தல்வீர் பண்டாரி ஆகியோர் இந்த பெஞ்சில் இடம் பெற்றனர். ஓராண்டாக விசாரணை நடந்தது. இந்த பரபரப்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பு விவரம் வருமாறு:
? பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிப்பதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்து கொண்டு வந்த சட்டம் செல்லும். இது அரசியல் சட்டத்தின் அடிப்படையை மீறியதாக இல்லை.
? சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இந்த இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது சரிதான்.
? தனியார் மற்றும் அரசு உதவி பெறாத பிற கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு அளிப்பதை பரிசீலிக்கலாம் என்று 4 நீதிபதிகள் கூறியுள்ளனர். இவ்வாறு தனியார் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு அளிக்க உத்தரவிடுவது அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படைக்கு எதிரானது என்று நீதிபதி தல்வீர் பண்டாரி மட்டும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தார்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை நீங்கிவிட்டது. 2008-09ம் கல்வியாண்டில் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், உள்ளிட்ட எல்லா கல்வி நிலையங்களிலும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தலாம்.
இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டோருக்கு (எஸ்.சி.) 15 சதவீதமும் பழங்குடியினருக்கு (எஸ்.டி.) பிரிவினருக்கு 7.5 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.
இனிமேல் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். இதன்மூலம் மொத்தம் 49.5 சதவீத இடங்கள் இந்த இடஒதுக்கீடுகள் மூலம் நிரப்பப்படும்.
No comments:
Post a Comment