டோக்கியோ :"டிவி' ரிமோட்டை அமுக்கி, அமுக்கி அலுத்து விட்டீர்களா? இனி அதனுடன் சண்டை போட அவசியம் இல்லை. ரிமோட் வேலையை செய்யும் ரோபோவை, ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவிடம் நீங்கள் பார்க்க விரும்பும் சேனல் பற்றி சொன்னால் போதும், அதுவே அந்த சானலுக்கு மாற்றிவிடும்.
குழந்தை போன்ற தோற்றத்தை கொண்ட இந்த ரோபோ, 21 செ.மீ., உயரம் இருக்கும். ஜப்பானின் தோஷிபா நிறுவனம் இதை உருவாக்கியுள்ளது. நீங்கள் தொலைக்காட்சியை "ஆன்' செய்த உடன், "இப்போது என்ன சேனல் வேண்டும்?' என, பெரிய கண்களையும், மொட்டை தலையையும் கொண்ட அந்த ரோபோ கேட்கும். நீங்கள் சொல்வதைக் கேட்டு, "ரிமோட்' கன்ட்ரோலின் பணியை செய்யும்.
இந்த ரோபோக்கள் மூலம், "டிவி'க்களை மட்டுமின்றி, இதர வீட்டு உபயோகப் பொருட்களையும் இயக்கலாம். வீட்டு உபயோகப் பொருட்களின் சிக்கலான செயல்பாடுகளை விட்டொழிக்க நினைக்கும் முதியவர்களுக்கு, இவை உபயோகமாக இருக்கும். குறிப்பாக, 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் தங்களின் பேரக்குழந்தைகளிடம் பேசுவதுபோல, இந்த ரோபோக்களிடம் பேசி அவற்றை செயல்பட வைக்கலாம்.
No comments:
Post a Comment