திருப்பதி: திருப்பதி மலைப் பாதையில், 2 வயதுக் குழ்நதையை சிறுத்தை ஒன்று கவ்விக் கொண்டு ஓட முயன்றபோது, குழந்தையின் தந்தை மிகவும் துணிச்சலுடன் சிறுத்தையிடமிருந்து தனது குழந்தையை மீட்டார்.
ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்தவர் சோபன்பாபு (35). இவருக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையும், கோகிலா என்ற 2 வயது பெண் குழந்தையும் உள்ளனர். இவர் நேற்று மாலை தன்னுடைய மனைவி, மாமியார் மற்றும் 2 பெண் குழந்தைகளுடன் காளஹஸ்தியில் இருந்து திருப்பதிக்கு வந்தார்.
அலிபிரியில் இருந்து திருமலைக்கு கால்நடையாக சென்றனர். முதலாவது மலைப்பாதை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தனது இரு கைகளிலும் இரு குழந்தைகளைப் பிடித்து நடக்க வைத்தபடி வந்து கொண்டிருந்தார் சோபன்பாபு.
இரவு ஏழரை மணியளவில் அவர்கள் 7வது மைல் அருகே வந்தனர். அப்போது மலைப்பாதை வேலிக்கம்பிக்கு அருகே விற்றுக் கொண்டிருந்த வேர்க்கடலையை மகள் கோகிலா கேட்டதால் வாங்கிக் கொடுத்தார் சோபன்பாபு. பின்னர் பர்ஸிலிருந்து பணத்தை எடுப்பதற்காக கோகிலாவின் கையை விலக்கி பணத்தை எடுத்துக் கொண்டிருந்தார்.
அந்தசமயத்தில் திடீரென வேலிக்கு அப்பாலிருந்து ஒரு சிறுத்தை திடீரென வெளியே பாய்ந்தோடி வந்தது. சிறுமி கோகிலாவை அப்படியே வயிற்றில் கவ்விய சிறுத்தை மீண்டும் வேலியைத் தாண்டி ஓட எத்தனித்தது.
இதைப் பார்த்து பதறிப் போன சோபன் பாபு, மகா துணிச்சலுடன் தனது இன்னொரு மகளின் பிடியை உதறி விட்டு விட்டு கோகிலாவின் கால்களைப் பிடித்து வேகமாக இழுத்தார். அவரது கதறல் குரலைக் கேட்ட அப்பகுதி வியாபாரிகளும், பக்தர்களும் திரண்டு வந்து சத்தமாக குரல் கொடுக்கவே பயந்து போன சிறுத்தை, குழந்தையை கீழே போட்டு விட்டு ஓடி விட்டது.
கண் இமைக்கும் நேரத்திற்குள் நடந்து விட்ட இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையின் வயிற்றில் சிறுத்தையின் பற்கள் பதிந்திருந்தன. உடனடியாக குழந்தையை திருப்பதி ரூயா மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரத்த வாடை பார்த்து விட்டதால் மறுபடியும் சிறுத்தை வரலாம் என்ற அச்சத்தால் மலை மீதிருந்த பக்தர்கள் கீழே இறங்க வேண்டாம் எனவும், கீழிருந்து மலைப் பாதை வழியாக யாரும் வர வேண்டாம் எனவும் கோவில் நிர்வாகம் எச்சரிக்கை தகவல் விடுத்தது.
ஏற்கனவே சிறுத்தை நடமாட்டம் இங்கு இருந்திருக்கிறது. அப்போது புகை போட்டும், நெருப்பை மூட்டியும் சிறுத்தையை விரட்டி வந்துள்ளனர்.
ஆனால் தற்போதுதான் முதல் முறையாக மனிதர்கள் மீது சிறுத்தை தாக்குதல் நடத்தியிருக்கிறது.
கடவுள்தான் தனது குழந்தையை காப்பாற்றியதாக அதிர்ச்சி இன்னும் விலகாத நிலையில் இருந்த சோபன்பாபு கூறினார்
No comments:
Post a Comment