Wednesday, July 14, 2010

காதலர்களுக்கு இனிப்பான செய்தி

காதலர்களை பாதுகாக்க, "காதல் கமாண்டோ' : டில்லியில் புதுமை


 


புதுடில்லி : காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், தற்போது குடும்ப கவுரத்தை பாதுகாப்பதற்காக காதலர்களை கொலை செய்யும் கவுரவக் கொலை நடைபெற்று வருகிறது. படித்தவர்கள், பாமரர்கள், நகரம், கிராமம் என்று பாகுபாடு இல்லாமல் இத்தகைய சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன.


இந்தியாவில், ஆண்டுக்கு 1,000 கவுரவக் கொலை நடப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கிராம பஞ்சாயத்துக்கள் ஆதரவுடன் நடைபெறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் நமது நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காதலர்களை பாதுகாப்பதற்காக, டில்லியின் வட மத்திய பகுதியில், கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது. காதலர்கள், குடும்பத்தையும், உறவினர்களையும் எதிர்த்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு இந்த அமைப்பு சட்டரீதியான பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்கும். வழக்கறிஞர்கள், ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேர் இணைந்து, இந்த அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர். இதற்கு, "காதல் கமாண்டோ' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு காதலர்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு, தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து தெரிவிக்கலாம். எந்த வகையான உதவி காதலர்களுக்கு தேவைப்படுகிறதென்பதை கண்டறிந்து, வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்து, சட்டரீதியான உதவிகளோ, பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகளோ செய்வர். காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதற்கும் கவுன்சிலிங் கொடுத்து பிரச்னையை தீர்த்து வைப்பர். காதலர்கள் திருமணம் செய்து கொள்வதற்கு, அய்யர் ஏற்பாடு செய்வது முதல் திருமணத்தை பதிவு செய்வது போன்று உதவிகளும் இதில் அடக்கம்.


இதுகுறித்து அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சஞ்சய் கூறியதாவது: கவுரவம் என்ற பெயரில், கிராமங்களில் நடக்கும் கட்டப் பஞ்சாயத்துக்கள், காதலர்களின் உயிருக்கு உலை வைக்கின்றன. இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு என்றாலும், சட்டத்தை மக்களே தாங்களே கையில் எடுத்து கொள்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியா மட்டுமல்லாது, வெளிநாடுகளில் கூட இத்தகைய கவுரவக் கொலைகள் நடப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும், காதலர்களின் பாதுகாப்புக்காகவும் இந்த அமைப்பை தொடங்கி உள்ளோம். இதன் மூலம் காதலர்களுக்கும், காதலித்து மணந்து கொண்டவர்களுக்கும் உரிய பாதுகாப்பையும், உதவிகளையும் வழங்குவோம். எங்களின் இந்த அமைப்பில், நடிகர்களும், காவல்துறை அதிகாரிகளும் கூட உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவ்வாறு சஞ்சய் கூறினார்.



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails