Saturday, July 24, 2010

23 வயது ஜைன இளம் பெண் துறவறம்



சென்னையில் இன்று கோலாகல விழா 

சென்னை : இருபத்து மூன்று வயது ஜைன இளம் பெண் துறவறம் பூணுகிறார். இதற்கான, "வார்சிதான் பரோகரா' எனும் தானம் வழங்கும் நிகழ்ச்சியும், ஊர்வலமும் இன்று நடக்கிறது.


இதுகுறித்து முன்னாள் டி.ஜி.பி., ஸ்ரீபால் மற்றும் ஜைன மத பெரியவர்கள் கூறியதாவது: சென்னை சவுகார்பேட்டை, சமுத்திர முதலி தெருவைச் சேர்ந்தவர் தாராசந்த். இவரது மனைவி விமலாகாதியா. இவர்களுக்கு நான்கு மகள், ஒரு மகன். இதில் இளைய மகள் ரேகா (21), ஏற்கனவே மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஜைன துறவியாக தீட்சை பெற்றார். ரேகாவின் அக்கா தீபா (23). பி.காம்., பட்டதாரியான இவர் தங்கையை தொடர்ந்து தற்போது துறவறம் பூணுகிறார். இதற்கான தீட்சை நாளை (21ம் தேதி) காலை எட்டரை மணியளவில், ஜைன மதத்துறவிகள் முன்னிலையில் நடக்கிறது. திருமணம் போல் துறவறம் பூணும் நிகழ்ச்சியும், ஜைன மதத்தில் வெகு விமரிசையாக நடத்தப்படும். இதற்காக துறவு பூணுபவர்களுக்கு பிடித்த உணவு வகைகள், உடைகள், நகைகள் கொடுத்து மகிழ்விப்பர்.


ஜைனத்தில் சன்னியாசம் ஏற்கும் நிகழ்ச்சி, "கிரத்பான்' என அழைக்கப்படுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியாக, "சித்சக்ர மகாஜன் பூஜா' கடந்த 17ம் தேதி தங்க சாலையில் நடந்தது. அடுத்த நாள் கவுதாம் சுவாமி மகா பூஜை எனப்படும் ஜைன தத்துவப் பாடல்களை பாடி பூஜை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று (19ம் தேதி) பாட்டிலா பூஜை நிகழ்ச்சி நடந்தது. இன்று (20ம் தேதி), "வார்சிதான் பரோகரா' எனும் தானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது அரிசி, பாட புத்தகம், இனிப்பு மற்றும் உணவு வகைகளை தானமாக வழங்குவர். நாளை (21ம் தேதி) காலை எட்டரை மணியளவில், 40 ஜைன துறவிகள் முன்னிலையில், ஆயிரக்கணக்கானோர் மத்தியில், முழு துறவியாக தீபா தீட்சை பெறுகிறார். அப்போது தீபா, தனது சிகையை தானே பிடுங்கி எறிவார். இனி வெள்ளுடை மட்டுமே தரிப்பார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


துறவு குறித்து தீபா கூறியதாவது: நான் முழு மனதுடன் துறவறம் பூணுகிறேன். இதற்காக கடந்த 3 ஆண்டுகள் பயிற்சி பெற்றிருக்கிறேன். துறவிகளுடன் இருந்து அவர்களின் வாழ்க்கையை பழகி இருக்கிறேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எந்த உயிரையும் கொல்லாதீர்கள். யாருக்கும் எந்த தீங்கும் செய்யாமல் மகிழ்ச்சியாக வாழுங்கள். இது இளைய தலைமுறைக்கு என் வேண்டுகோள். இவ்வாறு தீபா தெரிவித்தார்


source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails