Monday, July 12, 2010

சமையல் செய்முறை

ஆப்பிள் பாதுஷா

தேவையானவை: ஆப்பிள்பழத் துண்டுகள், சர்க்கரை - தலா கால் கப், செர்ரிப்பழம் - 10 (சிறு துண்டுகளாக நறுக்கவும்), மைதா மாவு - ஒரு கப், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை - தலா ஒரு டீஸ்பூன், டால்டா - 5 டீஸ்பூன், தேங்காய் துருவல், நெய் - தலா ஒரு டேபிள் ஸ்பூன், கேசரி பவுடர், எண்ணெய் - தேவையான அளவு, பாதாம் பருப்பு - சிறிதளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு, தேவையான தண்ணீர் விட்டு கேசரி பவுடர் சேர்த்து கம்பிப் பாகு பதத்தில் காய்ச்சவும். கடாயில் டால்டாவை விட்டு, மைதா மாவு, தேங்காய் துருவல், முந்திரிப் பருப்பு, உலர்ந்த திராட்சை, நறுக்கிய ஆப்பிள், செர்ரி பழத்துண்டுகள் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இதை அப்படியே சர்க்கரை பாகில் கொட்டி நெய் சேர்த்து கரண்டிக் காம்பினால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், மாவை விரும்பிய அளவில் வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். ஒவ்வொரு பாதுஷா மீதும் பாதாம் பருப்பை வைத்து அலங்கரிக்கவும்.

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பிச் சாப்பிடும் சுவையான ஸ்வீட் இது!

எஸ்.கோமதி, பத்தமடை

கோபா பெப்பர் பிஸ்கட்

தேவையானவை: மைதா மாவு, கடலை மாவு, வறுத்த வேர்க்கடலைப் பொடி - தலா ஒரு கப், மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், நெய் - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை: மைதா மாவை சலித்து... மிளகு, சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடலை மாவில் மிளகாய்த்தூள், வேர்க்கடலைப் பொடி, உப்பு சேர்த்துக் கலக்கவும். இந்த இரண்டு மாவுக் கலவையையும் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் தனித்தனியாக பிசைந்து கொள்ளவும். இரண்டையும் தனித்தனியே சிறு சிறு அப்பளங்களாக இடவும். இரண்டு மைதா அப்பளத்தின் நடுவே ஒரு கடலை மாவு அப்பளத்தை வைத்து குழவியால் பெரிதாக இட்டு, ரவுண்டாகவோ, முக்கோண வடிவத்திலோ 'கட்' செய்து, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். கரகர ஸ்நாக்ஸ் ரெடி!

- வரலஷ்மி முத்துசாமி, சென்னை-37

பொரி அரிசி புட்டு

தேவையானவை: அரிசி மாவு (அரிசியைப் பொரித்து அரைக்கவும்), வெல்லம் - தலா ஒரு கப், நெய் - சிறிதளவு, தேங்காய் துருவல் - அரை மூடி, முந்திரிப் பருப்பு - 5, ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.

செய்முறை: வெல்லத்தை தண்ணீர் சேர்த்து காய்ச்சி வடிகட்டவும். நெய்யில் முந்திரியை வறுத்துக் கொள்ளவும். காய்ச்சி வடிகட்டிய வெல்லக் கரைசலில் அரிசி மாவைக் கலந்து கரைத்து, அடுப்பில் 'சிம்'மில் வைத்து, சிறிது நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிளறவும். நன்றாக வெந்தவுடன் துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள், முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கவும்.

- எஸ்.லதா சரவணன், திருச்சி-1

வாசகிகளின் குறிப்புகளைத் தேர்ந்தெடுத்து, சமைத்து, ருசித்து சர்டிஃபிகேட் தந்திருப்பவர் 'சுவையரசி' சாந்தி விஜயகிருஷ்ணன். அவருடைய கமென்ட்ஸ்...

கோபா பெப்பர் பிஸ்கட்: காரசார பூரிபோல் இருக்கிறது. இரண்டு மாவுக் கலவையையும் பிசைவதற்கு முன்பு, காய்ச்சிய எண்ணெயை விட்டு, பிறகு பிசைந்தால் பிஸ்கட் நல்ல கரகரப்பாக இருக்கும்.

ஆப்பிள் பாதுஷா: கேசரி பவுடர் சேர்ப்பதால் கலர் மாறி விடுகிறது. கலர் சேர்க்கவேண்டிய அவசியம் இல்லை.

பொரி அரிசி புட்டு: வெல்லத்துக்குப் பதிலாக, சர்க்கரை சேர்த்தும் செய்யலாம்


source:vikatan


--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails