கொச்சி: கேரளத்தில் கல்லூரி வினாத் தாளில் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் கேள்வியை சேர்த்த பேராசிரியரின் வலது கை வெட்டப்பட்டது.
இடுக்கி மாவட்டம் தொடுப்புழாவில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் ஜோசப், கடந்த ஏப்ரலில் அக் கல்லூரியில் நடைபெற்ற பி.காம் 2ம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுக்கு வினாத்தாளை உருவாக்கினார்.
அதில் முகம்மது நபி தொடர்பாக ஒரு கேள்வி இடம் பெற்றது. இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் அமைந்த இந்தக் கேள்வித் தாள் காரணமாக ஜோசப்புக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன.
இதையடுத்து ஜோசப்பின் செயலுக்காக அந்தக் கல்லூரி நிர்வாகம் மன்னிப்பு கேட்டது. மேலும் ஜோசப்பை கல்லூரியை விட்டும் தாற்காலிகமாக நீக்கியது.
இதற்கிடையே ஜோசப்புக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்நிலையில் ஜோசப், அவரது தாயார், சகோதரி ஆகியோர் நேற்று தேவாலயத்தில் பிரார்த்தனை முடிந்து காரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது காரை ஒரு கும்பல் வழிமறித்து அரிவாளால் அவர்களைத் தாக்கிவிட்டு தப்பியோடியது.
இதில் ஜோசப்பின் வலது கை துண்டானது. கால்களிலும் வெட்டு விழுந்தது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment