Tuesday, July 20, 2010

அமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம்

 


புதுடில்லி : இந்திய ரூபாய்க்கான புதிய சின்னம், அரசால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா உட்பட முன்னணி நாடுகளைப் போல இனி நமது கரன்சிக்கு என்று இதன் மூலம் பிரத்யேக அடையாளம் அமையும்; அடுத்த சில மாதங்களில் இது நடைமுறைக்கும் வரும் என, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.


பொருளாதாரத் துறையில் இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. மேலும், உலக பொருளாதாரம் மற்றும் வர்த்தகத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. ஆனால், டாலருக்கு நிகராக மாற்று செலாவணியாக யூரோ போல அல்லது பவுண்ட் - ஸ்டெர்லிங் போல வரும் முன், ரூபாய்க்கு என்று தனியாக சின்னம் அவசியமாகிறது. மேலும் பாகிஸ்தான், இலங்கை மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளின் கரன்சியும், "ரூப்யா' என்றழைக்கப்படுகிறது. ஆகவே, டாலருக்கு, பவுண்டிற்கு, ஜப்பான் யென்னிற்கு தனிச்சின்னம் போல இந்திய ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, கடந்த பட்ஜெட்டில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், இந்திய கலாசாரத்தை பறை சாற்றும் வகையிலும், சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையிலும் புதிய சின்னம் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.


போட்டி: இதையடுத்து, புதிய சின்னத்தை வடிவமைக்க மத்திய நிதி அமைச்சகம் போட்டி ஒன்றை அறிவித்தது. அதன்படி புதிய சின்னம், சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் பொதுவான கீ-போர்டில் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். இந்திய தேசிய மொழிகளின் எழுத்துருவை பெற்றிருக்க வேண்டும்; பார்த்தவுடன் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைப்பு இருக்க வேண்டும் என நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டது. மேலும், போட்டியின் முடிவில் தேர்ந்தேடுக்கப்படும் சின்னத்தை வடிவமைத்தவருக்கு, இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் இருந்து மத்திய நிதி அமைச்சகத்துக்கு 3,000 புதிய சின்னங்கள் வந்து குவிந்தன. அதிலிருந்து புதிய சின்னத்தை தேர்வு செய்ய மத்திய நிதி அமைச்சகம், ஐந்து பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்தது. இக்குழுவினர், புதிய சின்னங்களை பல்வேறு கோணங்களில் ஆய்வு செய்து, இறுதியில் ஐந்து சின்னங்களை தேர்வு செய்தனர். பின், அந்த ஐந்து சின்னங்களில் ஒன்றை தேர்வு செய்து ஒப்புதல் அளிக்க மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பினர். புதிய சின்னத்தை தேர்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவை குழு நேற்று கூடி ஆலோசனை நடத்தியது.


கூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் பேசிய மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது: உயர்மட்டக் குழு பரிந்துரைத்த ஐந்து சின்னங்களில், மும்பை ஐ.ஐ.டி., மாணவர் உதயகுமார் உருவாக்கிய சின்னத்தை இந்திய ரூபாய்க்கான புதிய சின்னமாக அறிவிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அவருக்கு இரண்டரை லட்ச ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும். புதிய சின்னம் தேவநாகிரி, "ரா' மற்றும் ரோமன் "ஆர்' ஆகிய இரண்டு எழுத்துருவையும் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களில் புதிய சின்னம் இடம் பெறும். அடுத்த ஆறு மாதங்களில், நாடு முழுவதும் புதிய சின்னம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தவிர, அடுத்த 18 முதல் 24 மாதங்களில், சர்வதேச அளவில் இந்திய ரூபாய்க்கான புதிய சின்னத்தை நடைமுறைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கம்ப்யூட்டர் கீ-போர்டில் புதிய சின்னத்தை பயன்படுத்தும் வகையில் பிரத்யேக வசதி உருவாக்கப்படும். காகிதங்களில் பிரின்ட் அவுட் எடுக்க வசதியாக சாப்ட்வேர்களிலும் புதிய சின்னம் பதிவு செய்யப்படும். நாணய மதிப்பிற்கு தனிச்சின்னம் கொண்ட ஐந்தாவது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும். அமெரிக்காவின் டாலர், பிரிட்டனின் பவுண்ட் - ஸ்டெர்லிங், ஐரோப்பிய நாடுகளின் யூரோ, ஜப்பான் நாட்டின் யென் ஆகியவை ஏற்கனவே சர்வதேச அளவில் நடைமுறையில் உள்ளன. இவ்வாறு அம்பிகா சோனி கூறினார்.


கவுரவத்தைக் காட்டும் சின்னம்: கவுரவம் மிக்க சின்னத்தை டிசைன் செய்த உதயகுமார், கவுகாத்தி ஐ.ஐ.டி.,யில் டிசைன் பிரிவு துணைப் பேராசிரியராக இன்று முதல் பணியில் சேர்கிறார். தான் வடிவமைத்த டிசைன் தேர்வானது குறித்து பெருமிதம் கொண்டார். அவர் அளித்த பேட்டி: கிட்டத்தட்ட பலரும் இதே போல டிசைன் அனுப்பியிருந்தனர். ஆனால், ரோமானிய எழுத்தான "ஆர்' என்பதின் மேல்பகுதியில் படுக்கைக் கோடு போல அமைக்கப்பட்டிருப்பது, இந்திய நாட்டின் தேசியக் கொடி பறந்து கவுரவம் தருவது போன்ற தோற்றம், நாட்டின் பெருமையை உயர்த்தும் என்ற நோக்கில் வடிவமைத்திருக்கிறேன். அதோடு, தேவநாகரி எழுத்தும் இதில் இருப்பது சிறப்பு. இரு படுக்கைக் கோடுகள் கொண்ட அமைப்பு தேசியக் கொடியை நினைவுபடுத்தும்.இவ்வாறு உதயகுமார் கூறினார். தேசிய சின்னம் தயாரித்ததுடன், துணைப் பேராசிரியர் பதவியும் ஒரே நாளில் கிடைத்திருப்பது, அவருக்கு இரட்டை சந்தோஷம் தரும் விஷயம்.


source:dinamaalr

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails