Friday, July 2, 2010

1,330 குறள் சொல்லும் பனியன் தொழிலாளி திருவள்ளுவர் வேடமிட்டு பங்கேற்பு

 

அவிநாசி : திருக்குறளை எந்த முறையில் கேட்டாலும் "படக்' கென்று பதில் சொல்லும் பனியன் தொழிலாளி ரங்கராஜன், திருவள்ளுவர் வேடமிட்டு, செம்மொழி மாநாட்டில் பங்கேற்றார்.


அவிநாசி அருகே அம்மாபாளையம், பாரதி நகரைச் சேர்ந்தவர் ரங்கராஜன். 10வது வரை படித்துள்ள இவர், திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். திருக்குறள் மீது கொண்ட அளவு கடந்த பற்றால், கடந்த ஆறு ஆண்டுகளாக திருக்குறளை "கரைத்து' குடித்து விட்டார். மொத்தமுள்ள 1,330 குறளில், எந்த வகையில் கேள்வி கேட்டாலும், அதற்கான பதில் ரங்கராஜனிடமிருந்து "படக்' கென்று வருகிறது.அவிநாசி, அம்மாபாளையம், திருமுருகன்பூண்டி வட்டாரத்தில் பகுதிநேரமாக குழந்தைகளுக்கு, ரங்கராஜன் திருக்குறள் சொல்லிக் கொடுத்து வருகிறார். தற்போது கோவையில் நடக்கும் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க திருவள்ளுவர் போல வேடமிட்டு, கைகளில் ஓலைச்சுவடியும், எழுத்தாணியுமாக நேற்று கோவை புறப்பட்டார்.


திருக்குறள் மீதான ஆர்வம் குறித்து, ரங்கராஜன் கூறியதாவது:ஆறு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியைச் சேர்ந்த தலைமையாசிரியர் அருணாசலம் மற்றும் நண்பர்கள் அளித்த ஊக்கம் காரணமாக திருக்குறளை படிக்க ஆரம்பித்தேன். ஆறு மாதத்தில் அனைத்து குறள்கள், அதற்கான பொருளை மனப்பாடம் செய்தேன். எந்த எண், பொருள், தலை கீழாக, உதடு ஒட்டும், ஒட்டாத குறள், மலர்களின் பெயர் உள்ள குறள், உடல் உறுப்புகள் வரும் குறள், ஒன்று முதல் பத்து வரை எண் சொற்கள் உள்ள குறள் இவ்வாறு 35 வகையான கேள்விகளை கேட்டால், உடனே பதில் கூறுவேன்.பல மேடைகளில் பரிசுகள் பெற்றிருந்தாலும், பெருமை வாய்ந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் திருவள்ளுவர் வேடமிட்டு பங்கேற்க லட்சியம் வைத்திருந்தேன். அதை தற்போது நிறைவேற்றியுள்ளேன். செம்மொழி மாநாட்டில் எப்படியாவது முதல்வரை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பதே எனது ஆசை.இவ்வாறு ரங்கராஜன் கூறினார்.


source:dinamalar
--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails