Tuesday, July 27, 2010
குறைகிறது தூக்கம்... புலம்புகிறார்கள் இந்தியர்கள்!
* நீங்கள் அதிக நேரம் வேலை செய்பவரா?
* அதிகம் உடல் எடை கொண்டவரா?
* எதற்கெடுத்தாலும் டென்ஷன் ஆகுபவரா?
- அப்படியென்றால், உங்களுக்கு `ஓ.எஸ்.ஏ.' குறைபாடு இருக்கலாம். `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியா' என்பதன் சுருக்கம்தான் ஓ.எஸ்.ஏ. இதனால், உறக்கத்தின்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு, தூக்கமின்மை உண்டாகும்.
பொதுவாக நகரவாசிகள்தான் மேற்படி கேள்விகளுக்கு `ஆம்' என்று பதில் சொல்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், இவர்கள்தான் அதிக அளவில் இந்த இரவுநேர நோய் பாதிப்புக்கு ஆளாகுகிறார்கள். இந்த நோய் பாதிப்பு தொடரும் பட்சத்தில் நிம்மதியை இழந்து பல்வேறு நோய் பாதிப்புகளுக்கும் ஆளாகிவிடுகிறார்கள் என்கிறது, சமீபத்தில் இந்தியாவில் நடத்தப்பட்ட ஆய்வு. 35 முதல் 65 வயதுள்ள சுமார் 6 ஆயிரம் பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வில், நகர்ப்புறங்களில் வாழும் 93 சதவீதம் பேர் இரவுநேர தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்கள். இவர்களில் 28 சதவீதத்தினர் 5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள். 71 சதவீதத்தினர் இரவில் மூன்று முறை விழித்து தூக்கம் வராமல் தவிக்கிறார்கள்.
நிம்மதியான தூக்கம் தொடர்பாக நடத்தப்பட்ட அந்த ஆய்வில் குறட்டை விடுபவர்கள் பற்றிய முக்கிய தகவல்களும் கிடைத்தன.
இந்தியாவைப் பொறுத்தவரை குறட்டை விடுபவர்களில் 38 சதவீதத்தினர் அதிக உடல் பருமன் கொண்டவர்கள். மற்றவர்கள்... அளவுக்கு அதிகமாக புகை பிடிக்கும் பழக்கம் கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதயம் தொடர்பான பிரச்சினை உள்ளவர்கள் ஆவார்கள்.
ஓ.எஸ்.ஏ. பாதிப்பை உடனடியாக கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், அது உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார்கள் டாக்டர்கள்.
சரி... ஓ.எஸ்.ஏ. என்பது என்ன?
நமது சுவாசப்பாதையில் தடை இல்லாமல் இருந்தால்தான் நுரையீரலுக்கு காற்று எளிதில் செல்லவும், வெளியேறவும் வசதியாக இருக்கும். அதில் தடை ஏற்படும்போது ஓ.எஸ்.ஏ. பாதிப்பு ஏற்படுகிறது. அதாவது, சுவாசப் பாதை பாதிக்கப்பட்டு, நுரையீரலுக்கு காற்று செல்வதில் தடை ஏற்படுகிறது.
பொதுவாக நாம் தூங்கும்போது நாக்கு, தடிமனான கழுத்து திசுக்கள், சதைகள் சுவாசப் பாதையை அடைக்கின்றன. அதனால், பல விநாடிகளுக்கு சுவாசம் நின்றுவிடுகிறது. தொடர்ந்து, உடல் காற்று வராமல் தடுமாறுகிறது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. மூச்சு விட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு, உறக்க நிலையில் உள்ளவர்கள் எழுந்து விடுகிறார்கள்.
அவர்கள் மீண்டும் மூச்சுவிடும்போது ஆக்சிஜன் அளவு அதிகரித்து, ஆழ்ந்த உறக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் இந்த செயல்பாடு மீண்டும் மீண்டும் நடக்கிறது.
ஆனால், ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருக்கும்போது 8 மணி நேர சராசரி தூக்கத்தின் அளவு குறைந்துபோய் விடுகிறது. `இரவில் தூங்கும்போது அடிக்கடி தடை ஏற்படும். நம்மை அறியாமலேயே விழித்துக்கொண்டு தூக்கம் வராமல் தவிப்போம். மனமும் அமைதியாக இல்லாமல் எதையோ தேடி அலை பாய்ந்து கொண்டிருக்கும். மறுநாளும் அதன் தாக்கம் தொடரும். அதாவது, மறுநாள் களைப்பும், தூக்கக் கலக்கமுமாக இருக்கும்...' என்று விளக்கம் கொடுக்கிறார்கள் மருத்துவர்கள்.
இந்தியாவில் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து தவிக்கிறார்களாம்.
தனது அலுவலகத்தில் 8 மணி நேரத்தையும் தாண்டி 10 முதல் 12 மணி நேரம் வரை வேலை பார்க்கும் அசோக் ஒரு மணி நேரம் ரெயிலில் பயணம் செய்து, சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தை நடந்து சென்றால்தான் வீட்டை அடைய முடியும். ரெயிலில் பயணித்தது அவருக்கு நன்றாக நினைவிருக்கும். அதற்கு பிறகு வீட்டுக்கு வந்த நினைவுகள் அவருக்கு குழப்பமாக இருக்கும். சாலையை எந்தெந்த இடங்களில் `கிராஸ்' செய்து வீட்டிற்கு வந்தோம் என்பதுகூட அவருக்கு நினைவில் இருக்காது. இதுவும் ஓ.எஸ்.ஏ. நோய் பாதிப்புதான்.
இந்த நோய் பாதிப்பு ஒருவரிடம் உள்ளதா என்பதை அவரால் கண்டுபிடித்துவிட முடியாது. அவருக்கு அருகில் தூங்குபவர், அவரது இரவு நேர நடவடிக்கைகள் குறித்து சுட்டிக்காட்டினால் மாத்திரமே அதை உணர்ந்து கொள்ள முடியும். ஒருவேளை, அந்த நோய் பாதிப்பு இருந்தால் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம்.
சிலர் பிறவிக் குறைபாடு, புதிதாக எடுத்துக்கொள்ளும் உணவுகள், புகையிலை பயன்படுத்தும் வழக்கம், உடற்பயிற்சி செய்யாமை... என்று நீளும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினாலும் ஓ.எஸ்.ஏ. பாதிப்பை சந்திக்கலாம். ஆனாலும், உடல் பருமன் அதிகம் இருக்கும்போதுதான் இதன் தீவிரம் இன்னும் அதிகமாகிறது.
ஆண்கள் உடல் பருமன் பாதிப்புக்கு ஆளாகும்போது, அவர்களது வயிற்றுக்கு மேல் பகுதியில் எக்குதப்பாக சதை போடுகிறது. அதனால், அவர்கள் உடல் சதை போடுவதை தவிர்த்துவிட வேண்டும். இதேபோல், கர்ப்பிணிப் பெண்களுக்கும் ஓ.எஸ்.ஏ. பாதிப்பு ஏற்படலாம்.
ஒருவருக்கு ஓ.எஸ்.ஏ. பாதிப்பு இருந்து, அதை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தைக்கூட ஏற்படுத்திவிடும். அத்துடன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்பு சக்தி குறைவு, அன்றாட செயல்களில் தடை போன்ற பாதிப்புகளும் ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
இதற்கு முழுமையான தீர்வு 8 மணி நேரம் தூக்கம்தான். நீங்கள் 8 மணி நேரம் தூங்காதவர் என்றால், இன்றே அதற்கான காரணத்தை ஆராயுங்கள். குறைபாடுகள் தெரிந்தால் உடனேயே சிகிச்சையை ஆரம்பித்து விடுங்கள்.
***
சுகமான தூக்கத்திற்கு 10 டிப்ஸ்
* அலுவலக பிரச்சினைகளை அலுவலகத்தோடு விட்டுவிடுங்கள்.
* வீட்டில் ஆரோக்கியமான சிந்தனைகள் மட்டுமே தோன்றட்டும்.
* உறக்கத்திற்கு முன்பாக மனதை அமைதிப்படுத்துங்கள். முடிந்தால் தியானம் செய்யுங்கள்.
* படுக்கையில் அமர்ந்த பிறகு சிக்கலான பிரச்சினைகளில் மனதை செலுத்த வேண்டாம்.
* இயற்கை உபாதை காரணமாக இரவில் விழிப்பு தட்டி எழுந்தால், அந்த காரியத்தை முடித்ததும் படுத்துவிடுங்கள். அப்போது, அடுத்தவருடனான பேச்சு, விவாதம் வேண்டாம்.
* சுத்தமான காற்றோட்டம், தூய்மையான படுக்கை, இட நெருக்கடியற்ற படுக்கையறை, மணம் தரும் வாசனைத் திரவியங்கள், முழுவதுமாக இருட்டாக அல்லாமல் மிக மெல்லிதான வெளிச்சம், இவற்றோடு தெளிந்த மனம் - இவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.
* நீங்கள் படுக்கும் படுக்கை உங்களுக்கு சவுகரியத்தை தருவதாக இருக்க வேண்டும்.
* அணியும் ஆடை பருத்தி ஆடையாக, இறுக்கமாக இல்லாமல் இருத்தல் அவசியம்.
* வசதி உள்ளவர்கள் ஸ்லீம் லேப், ஸ்லீப் மெஷின் போன்றவற்றை பயன்படுத்தலாம். மூக்கின் பக்கவாட்டு பகுதியை தூக்கி மூச்சுவிடுவதை சுலபமாக்கும் மூக்கு பட்டை, தொண்டை சதையை இறுக்கி, மூக்கு துவாரத்தை ஈரமாக வைத்திருக்கும் குறட்டை தெளிப்பான் போன்றவையும் உங்களுக்கு உதவலாம்.
* முடிந்தவரை 8 மணி நேரம் தூங்குங்கள். தூக்கத்தின் அளவு குறைய குறைய ஆபத்துதான்.
***
source:dailythanthi
--
http://thamilislam.tk
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment