Tuesday, July 13, 2010

"சிடி'க்களில் இருந்ததை பார்த்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கேரளாவில் பயங்கரவாத செயல்கள் தொடர்ந்து அதிகரிப்பு 

 


ஆலப்புழா : கேரளாவில் பெருகி வரும் பயங்கரவாத செயல்களை தடுக்க, பயங்கரவாத தடுப்பு சிறப்பு பிரிவு அமைக்கப்படுகிறது. இதுகுறித்து இரு மாதங்களுக்கு முன், மாநில டி.ஜி.பி., அனுப்பிய அறிக்கையை அரசு ஏற்றுக் கொண்டது.கேரளாவில், பயங்கரவாத செயல்கள் பெருகி வருகின்றன.


இதில் குறிப்பாக, கோழிக்கோட்டில் வெடிகுண்டு சம்பவம், தமிழக விரைவு போக்குவரத்துக் கழக பஸ், எர்ணாகுளத்தில் எரிப்பு என, தற்போது கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டி வீசும் அளவுக்கு நிலைமை மோசமாகி வருகிறது.சில தினங்களுக்கு முன், கேரளாவில் உள்ள இரு வேறு இடங்களில், பஸ், ரயிலில் வெடிகுண்டு பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள், போலீசாரிடம் தெரிவித்தனர். அவற்றை அங்கு வைத்தவர் யார் என்பது குறித்து, போலீசாருக்கு எவ்வித துப்பும் கிடைக்கவில்லை.
பயங்கரவாத செயல்கள் மாநிலத்தில் அதிகரிக்கும் நிலையில், இதற்காக உருவாக்கப்பட்டுள்ள இணை விசாரணை குழு  மற்றும் மாநிலத்தில் பயங்கரவாத செயல்களை  தேசிய விசாரணை ஆணையம் (என்.ஐ.ஏ.,) விசாரிக்க வேண்டிய நிலையை கருத்தில் கொண்டு, புதிய சிறப்பு பிரிவு அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.புதிய சிறப்பு பிரிவு அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ், மூன்று மாதங்களுக்கு முன், அரசுக்கு ஆலோசனை அறிக்கை அளித்தார்.


பரிசீலித்த மாநில உள்ளாட்சித் துறை, அவரது அறிக்கையை ஏற்க முடிவு செய்துள்ளது.இதுகுறித்து உள்ளாட்சித்துறை, மாநில நிதித் துறையிடம் அனுமதி கோரி உள்ளது. இச்சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டால், அதன் வசம் விசாரணை, புலனாய்வு மற்றும் நடவடிக்கையை (ஆபரேஷன்) ஒப்படைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பிரிவில், கமாண்டோ படையினர் தவிர தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்திய ரிசர்வ் பட்டாலியன் படையினரையும் உட்படுத்த, மாநில போலீஸ் டி.ஜி.பி., அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் பரிந்துரைத்துள்ளார்.இச்சிறப்பு பிரிவுக்காக அலுவலகம் துவங்கவும், வாகனங்கள், அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் வாங்கவும், அரசுக்கு அவர் பரிந்துரைத்தார்.  இவ்விஷயத்தில் அரசு காலதாமதப்படுத்தி விட்டதாக, புகார் எழுந்துள்ளது.


கேரளாவில் பயங்கரவாத செயல்பாடுகள் குறித்து விசாரிக்க, மாநில அரசு நியமித்த இணை விசாரணை குழு செயல்படாமல் முடங்கி கிடப்பதாகவும், இதையடுத்து தான் தற்போது புதிய சிறப்பு பிரிவு துவங்க டி.ஜி.பி., சிபாரிசு செய்துள்ளதாகவும் கருத்து நிலவி வருகிறது.இணை விசாரணை குழுவில் செயல்பட்ட சிறப்பான அதிகாரிகளை என்.ஐ.ஏ., வசம் சென்று விட்டது. மேலும், இக்குழுவின் ஐ.ஜி.,யாக செயல்பட்ட வினோத்குமார், பதவி உயர்வு பெற்று, ஐதராபாத் போலீஸ் அகடமிக்குச் சென்று விட்டார்.இதையடுத்து தான், மாநில இணை விசாரணைக் குழு (ஜெ.ஐ.டி.,) முடங்கிப் போனதாகவும் கருத்து நிலவுகிறது. மேலும், கேரளாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத செயல்களை தடுக்க, போதுமான பயிற்சி பெற்ற போலீசார் களத்தில் இல்லை.


கல்லூரி ஆசிரியர் ஜோசப் கை வெட்டப்பட்ட சம்பவத்தில், அவர் பிரச்னைக்குரிய வினாத்தாள் தயாரித்தபோதே, போலீசார் எச்சரிக்கையுடன் செயல்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. தற்போது இப்பிரச்னையில், போலி சிம் கார்டுகள் தயாரித்து வழங்கிய வழக்கும் சேர்ந்து கொண்டுள்ளது."தற்போது புதியதாக உருவாக்கப்படும், பயங்கரவாத சிறப்பு பிரிவு குறித்து, இரண்டொரு நாளில் முடிவெடுக்கப்படும்' என, மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர் கோடியேறி பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.போலீஸ் துறையில் சிறப்பாக செயல்படும் அதிகாரி தான் நியமிக்கப்படுவர். எந்த ரேங்கில் உள்ள அதிகாரி என்பது குறித்து, இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.


இதுகுறித்து, திருவனந்தபுரத்தில் முதல்வர் தலைமையில், அவசர ஆலோசனைக் கூட்டம் நடக்கும்.அதில், பயங்கரவாத சிறப்பு பிரிவு குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும். இக்கூட்டத்தில் மாநில போலீஸ் டி.ஜி.பி., உட்பட பலர் கலந்து கொள்வர் என, அமைச்சர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


ரெய்டில் சிக்கியது என்ன?கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், போலீசாருக்கும், மாநில அரசுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள், ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதில் முக்கியமாக, ஆசிரியரை தாக்கியதாக சமீபத்தில் பிரபலமாகி வரும் முன்னணி அமைப்பைச் சேர்ந்தவர்கள் தான் காரணம் என போலீசார் கருதுகின்றனர். இந்த அமைப்பைச் சேர்ந்த பலரது வீடுகளில் போலீசார், "ரெய்டு' நடத்தினர்.நூறுக்கும் மேற்பட்ட வீடுகள், அலுவலகங்களில் நடந்த, "ரெய்டில்'  பல்வேறு ரகசிய தகவல்களை உள்ளடக்கிய ஆவணங்கள், டைரி, "சிடி'க்கள் சிக்கின.அதில், இவ்வமைப்புக்கு ஆட்களை திரட்ட தலா 60 ஆயிரம் ரூபாய் கொடுத்தது முதல், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள சோட்டானிக்கரா பகவதி அம்மன் கோவில் பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என, பல்வேறு தகவல்களும், அதுகுறித ஆவணங்களும் இடம் பெற்றிருந்தன.


நாட்டின் ராணுவத்துறை சம்பந்தமாக, பல்வேறு ரகசிய தகவல்களும், "சிடி'க்களில் இருந்ததை பார்த்து, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவற்றில் இந்திய ராணுவத்தினரின் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்தும், ஆலோசனைகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இவ்வமைப்பு செயல்படும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவற்றிற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் லட்கணக்கான ரூபாய் குறித்தும், பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.இவ்வழக்கில், புது முன்னணி அமைப்பைச்  சேர்ந்த 17 பேரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். இதில், கல்லூரி ஆசிரியரின் கையை வெட்டிய கும்பலைச் சேர்ந்தவர்களும் அடக்கம். மேலும், போலி முகவரி கொடுத்து, போலி சிம் கார்டுகள் தயாரித்த மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.


போதுமான ஆதாரங்களை பெறாமல், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களுக்கு, போலி முகவரியில் சிம்கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில், கோதமங்கலம் தனியார் மொபைல் கடை உரிமையாளர் அஜாஸ் (27), ரகசிய மொபைல் கம்பெனி பிரதிநிதிகள் சிஜூ (23) மற்றும் ராஜன் கே.ஜோளி ((25) ஆகியோர், கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் சம்பந்தப்பட்டு, தலைமறைவாகியுள்ள கொல்லம் அடுத்த வர்கலாவில் பதுங்கியிருந்த, மூவாற்றுப்புழா பகுதியைச் சேர்ந்த சூல்பிகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவருக்கு தான் மேற்கண்ட மூவரும், போலி சிம் கார்டுகள் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.இவ்வழக்கு தொடர்பாக பலரை போலீசார் தேடி வரும் நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில், பல தகவல்கள் கிடைத்தன.


இதையடுத்து போலீசார், நேற்று முன்தினம், இடுக்கி மாவட்டம் அடிமாலி கிராமத்திலும்,  தமிழக - கேரள எல்லையை ஒட்டி குமிளி பகுதியில் சிலரது வீடுகளிலும், "ரெய்டு' நடத்தினர்.அதில், பல முக்கிய ஆவணங்களும், தகவல்களும் கிடைத்துள்ளதாக பத்தனம்திட்டாவில், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஜேக்கப் புன்னூஸ் தெரிவித்தார்.இக்குற்றச் செயல் யாரால், எதற்காக செய்யப்பட்டது என்பது குறித்து, தனிப்படை போலீசார் விசாரித்து வருவதாகவும், இவ்வழக்கில் சம்பந்தப்பட்டது எந்த அமைப்பு, அதன் பெயர் போன்ற விவரங்களை தெரிவிப்பது சரியல்ல என, அவர் மறுத்து விட்டார்.


ராணுவ புலனாய்வுப் பிரிவு விசாரணை : தொடுபுழா நியுமேன் கல்லூரி ஆசிரியர் டி.ஜெ.ஜோசப் என்பவரை தாக்கி, அவரது வலதுகையை வெட்டி எறிந்த சம்பவம் குறித்து விசாரித்த மாநில போலீசாருக்கு, பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதில், முக்கியமாக ராணுவத்தினரின் செயல்பாடுகள் மற்றும் அவர்களது  நடவடிக்கைகளை தடுப்பது குறித்தான, "சிடி'க்கள், குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களது வீடுகளில், "ரெய்டின்' போது சிக்கியது."இக்குறிப்பிட்ட, "சிடி'க்கள் குறித்து ராணுவ புலனாய்வுத் துறை விசாரிக்க வேண்டும்' என, போலீஸ் டி.ஜி.பி., கோரினார். இதையடுத்து நேற்று, கொச்சி வந்த ராணுவ புலனாய்வுத் துறை அதிகாரிகள், கொச்சி நகர போலீஸ் கமிஷனர் மனோஜ் ஆபரகாமை சந்தித்தனர்.மாநில போலீசார் நடத்திய, "ரெய்டு' மற்றும்  கைப்பற்றிய சில குறிப்பிட்ட, "சிடி'க்கள் குறித்தும் விசாரித்தனர். அதில், குறிப்பாக ராணுவத்தினர் குறித்தும், தலிபான் அமைப்பினர் வழங்கும் தண்டனைகள் மற்றும் தேச விரோத நடவடிக்கைகள் ஆகியவை அடங்கிய, "சிடி'க்களை ஆய்வு செய்து விசாரித்து அறிந்தனர்.



source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails