நேபாளத்தில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுட்டுக்கொலை
நேபாளத்தில் வியாழக்கிழமை நடைபெற இருக்கும் அரசியல் நிர்ணய சபைத் தேர்தலுக்காக, மாவோயிஸ்டுகளுக்கு அதிக ஆதரவு இருக்கும் ரோல்பா பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடியில் புதன்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் போலீஸôர்.
காத்மாண்டு, ஏப். 9: நேபாளத்தில் காங்கிரஸ் கட்சி மற்றும் ஐக்கிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (யு.எம்.எல்) கட்சி ஆதரவாளர்களிடையே செவ்வாய்க்கிழமை நடந்த மோதலில் யு.எம்.எல் கட்சி வேட்பாளர் ரிஷி பிரசாத் சர்மா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வன்முறையில் 5 பேர் காயமடைந்தனர். சர்மா போட்டியிட்ட சுர்கட் -1 தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. வன்முறை நடந்த இரு கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, சர்மா கொலையில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என் அக் கட்சி கூறியுள்ளது.
7 மாவோயிஸ்டுகள் பலி: இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 33 பேரை மாவோயிஸ்ட் இயக்கத்தினர் பிடித்துச் சென்றனர். அவர்களை விடுவிப்பதற்காக போலீஸôர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் பலியாகினர்.
அரசியல் நிர்ணய சபைத் தேர்தலுக்கான பிரசாரம் 6-ம் தேதி மாலையுடன் முடிவடைந்துவிட்டது. ஆனால், 6-ம் தேதிக்குப் பிறகும் வடக்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாகக் கூறி அந்தக் கட்சியைச் சேர்ந்த 33 பேரை மாவோயிஸ்ட் இளைஞர் அணியினர் பிடித்துச் சென்றனர்.
அவர்களை விடுவிப்பதற்காக போலீஸôர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் மாவோயிஸ்டுகள் 5 பேர் பலியாகினர்.
எனினும், படுகாயம் அடைந்த மேலும் 2 பேர் பின்னர் இறந்து விட்டதாக மாவோயிஸ்ட் தலைவர் சாகர் கூறினார்.
அந்தப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமருடன் பிரசண்டா சந்திப்பு: இதற்கிடையே, பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவை மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
பதில் தாக்குதல் நடத்த வேண்டாம் என தமது கட்சியினரைக் கேட்டுக்கொண்ட அவர், அமைதியான முறையில் தேர்தல் நடப்பது ஒன்றே இப்போதைக்கு முக்கியம் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment