வங்கி லாக்கரில் வைத்திருந்த
ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம் நகையை தின்றது கரையான்
பாட்னா, ஏப்.5-
வங்கி லாக்கரில் வியாபாரி வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள பணம், நகை, சேமிப்பு பத்திரங்களை கரையான் தின்றுவிட்டது.
பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் துவாரிகா பிரசாத். நெய் வியாபாரம் செய்யும் இவர் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியாவின் நய டோலா கிளையின் லாக்கரில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் நகை, பணம் வைத்திருந்தார். ரூ.4.5 லட்சம் ரொக்கமும், ரூ.2.5 லட்சம் மதிப்பில் நிரந்தர வைப்புநிதி, தேசிய சிறுசேமிப்பு பத்திரம், கிசான் விகாஸ் பத்திரம் ஆகியவற்றை வைத்திருந்தார். கடந்த 9 மாதமாக இவர் பாங்க் பக்கமே செல்லவில்லை.
சமீபத்தில் இவர் வங்கிக்கு சென்று தனது லாக்கரை திறந்துள்ளார். அதில் இருந்த பணம், சேமிப்பு பத்திரம் ஆகியவற்றை கரையான்கள் முழுவதுமாக அரித்திருந்தது. நகைகளை கூட கரையான்கள் விடவில்லை. அவைகள் பளபளப்பை இழந்து பல இடங்களில் ஓட்டையாக காணப்பட்டன. அதை பார்த்து அதிர்ந்த துவாரிகா பிரசாத் வங்கி மேனேஜரிடம் சென்று முறையிட்டார்.
அவர் அங்கிருந்த நோட்டீஸ் ஒன்றை காட்டினார். அதில் லாக்கர் இருக்கும் பகுதியில் கரையான்கள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் தங்களின் முக்கிய ஆவணங்களை எடுத்துக் கொள்ளும்படி அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. கரையான் இருப்பதாக வாடிக்கையாளர்கள் சிலர் கூறியதையடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் இந்த அறிவிப்பை பாங்க் நிர்வாகம் ஒட்டியுள்ளது. ஒன்பது மாதமாக பாங்க் பக்கமே செல்லாததால், இதுபற்றி தனக்கு எதுவும் தெரியாது என அப்பாவியாக கூறினார் பிரசாத். தனக்கு ஏதாவது நஷ்ட ஈடு வழங்கும்படி, பாங்க் மேனேஜரிடம் பிரசாத் கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment