ஜம்மு - காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத அமைப்பினர் கேரள மாநிலம், திருச்சூரில் இருந்து இளைஞர்களை தேர்வு செய்து, ஆயுதப்பயிற்சி அளித்து வருவதாக திடுக் தகவல்கள் வெளியாகியுள்ளன. திருச்சூரில் நடந்த தமிழக - கேரள போலீஸ் உயரதிகாரிகள் கலந்தாய்வு கூட்டத்தில், இது குறித்த ரகசிய தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
கடந்த 1990களில் டில்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் நடந்த குண்டுவெடிப்பு பயங்கரவாத சதிச்செயல்களை தொடர்ந்து, "சிமி' (ஸ்டூடன்ட்ஸ் இஸ்லாமிக் மூவ்மென்ட் ஆப் இந்தியா) என்ற அமைப்பு, சட்டவிரோத செயல்கள் தடைச்சட்டத்தின்படி (முன்னெச்சரிக்கை சட்டம் 1967, செக்ஷன் 3ன்படி) தடை செய்யப்பட்டது. இந்த அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மத்திய அரசின் நடவடிக்கை மற்றும் தீவிர கண்காணிப்பின் காரணமாக, "சிமி' யின் செயல்பாடுகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. எனினும், வெளியில் முகம் காட்டாமல் திரைமறைவில் ரகசியமாக செயல்பட்டு வந்த தலைமை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் வேறு சில அமைப்புகளுக்கு தாவினர். சிலர், வேறு பெயரில் புதிய அமைப்புகளை துவக்கி, ஜனநாயக வழிமுறைகளின்படி செயல்படுவதாக கூறி வருகின்றனர்.
"சிமி' அமைப்பினரின் கடந்த கால செயல்பாடுகளை நன்கு ஆராய்ந்தறிந்த மத்திய, மாநில புலனாய்வு ஏஜன்சிகள், தற்போதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, ஒற்றுத்தகவல்களை ரகசியமாக சேகரித்து, உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இரு ஆண்டுகளுக்கு முன் எல்லை பாதுகாப்பு படையினர், ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இதன் மூலம், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களில் கேரள இளைஞர்களை, பயங்கரவாத அமைப்பினர் ஈடுபடுத்தி வருவது அம்பலமானது.மேலும், கேரள மாநிலத்திலிருந்து இளைஞர்களை தேர்வு செய்து ஆயுதப்பயிற்சி அளித்து தாக்குதல் நடத்தி வருவதும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வு ஏஜன்சியின் பார்வை கேரள மாநிலம், திருச்சூர் பக்கம் திரும்பியது. அந்த மாநில போலீசாரும், புலனாய்வு ஏஜன்சிகளும் உஷார் படுத்தப்பட்டன. திருச்சூரை மையமாக கொண்டு செயல்படும் சந்தேகத்துக்குரிய சில அமைப்புகள் தீவிர கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக - கேரள மாநில பாதுகாப்பு மற்றும் உளவு தகவல் சேகரிப்பு தொடர்பான இரு மாநில போலீஸ் உயரதிகாரிகளின் கலந்தாய்வு கூட்டம், சமீபத்தில் திருச்சூரில் நடந்தது.இக்கூட்டத்தில் பங்கேற்ற கோவை - திருச்சூர் போலீஸ் உயரதிகாரிகள், இரு மாநில எல்லைக்குள்ளும் செயல்படும் "மாபியா கேங்' மற்றும் மத அடிப்படைவாத அமைப்புகள் குறித்த தகவல்களை பரிமாறிக்கொண்டனர். அப்போது, மத்திய அரசால் தடை செய்யப்பட்ட "சிமி' அமைப்பு தொடர்பாகவும் விரிவான முறையில் பேசப்பட்டன.
திருச்சூர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் பேசுகையில், " திருச்சூரில் "சிமி'யின் ரகசிய செயல்பாடுகள் தொடர்பான உறுதிப்படுத்தத்தக்க தகவல் ஏதுமில்லை' என்றார். அதே வேளையில், "ஜம்மு - காஷ்மீரில் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு கேரளாவில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக உளவுத் தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். சந்தேகத்துக்குரிய அமைப்புகள், அதன் தலைவர்கள், உறுப்பினர்கள், நிதியுதவி அளிக்கும் நபர்களை தொடர்ச்சியாக கண்காணிக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது' என்றார். அதே போன்று, தமிழக எல்லைக்குள் குறிப்பாக, கோவையில் செயல்படும் பயங்கரவாத ஆதரவு அமைப்புகள் தொடர்பான ரகசிய தகவல்கள், திருச்சூர் போலீசாருக்கு அளிக்கப்பட்டன.
இது குறித்து, திருச்சூர் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "இரு மாநில போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்தகவல் பரிமாற்றம் தொடர்பாக பல்வேறு விஷயங்கள் இடம்பெற்றன. மத அடிப்படைவாத அமைப்புகளின் செயல்பாடுகள் மட்டுமின்றி, சந்தன மரம் கடத்துவோர், எரிசாராயம் கடத்துவோர், வனக் கொள்ளையர் குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன. தமிழகம் - கேரளா எல்லைப்பகுதிகளை பாதுகாப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன. பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கிரிமினல்களின் நடமாட்டத்தை கண்டறிந்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த கலந்தாய்வு கூட்டம் அமைந்தது' என்றார்
source:dinamalar
--http://thamilislam.tk
No comments:
Post a Comment