குன்னூர் : "ஒரு வினாடிக்கு ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் அழிக்கப்படுகின்றன,' என ஓசோன் தின கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஓசோன் தினம் மற்றும் பல்லுயிர்ச் சூழல் ஆண்டு சிறப்பு கருத்தரங்கு குன்னூர் பிராவிடன்ஸ் மகளிர் கல்லூரியில் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் அருட்சகோதரி. மரியகொரட்டி மார்ட்டிஸ் தலைமை வகித்தார். துணை முதல்வர் அருட்சகோதரி.ஷீலா வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் பெள்ளி, செயலர் ராஜூ கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
கடந்த 1980களில் அன்டார்டிகா பகுதியில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழுந்திருப்பதை விஞ்ஞானிகள் முதன் முதலில் கண்டறிந்தனர். இதன் வழியாக ஊடுருவி பூமிக்கு வரும் சூரிய ஒளியின் புற ஊதா கதிர்களால் மனிதர்களுக்கு தோல் புற்று நோய் உட்பட பல நோய்கள் ஏற்பட்டன. ஏர்கண்டிஷன் கருவியில் இருந்து வெளியேறும் குளேரோபுளோரோ கார்பன் தான் ஓசோன் படலத்தில் ஓட்டை விழ காரணம் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.கடந்த 1984ல் மான்ட்ரீயல் நகரில் நடத்தப்பட்ட உலக சுற்றுச்சூழல் மாநாட்டில் 158 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று குளோரா புளோரா கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். சுற்றுச்சூழலுக்கு உகந்த குளிர்சாதனப் பெட்டிகள் தயாரிக்கப்பட்டதன் விளைவாக ஓசோன் ஓட்டை பெருமளவு அடைக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.ஓசோன் பிரச்னையில் இருந்து தப்பித்த பூமி, இன்று புவி வெப்ப பிரச்னையில் சிக்கி தவிக்கிறது. பூமி தன்னுடைய 460 கோடி ஆண்டு வரலாற்றில் இதுவரை ஐந்து முறை மிகப்பெரிய பேரழிவுகளை சந்தித்துள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். தற்போது ஆறாவது முறையாக மிகப்பெரிய பேரழிவை சந்திக்க பூமி தன்னை தயார்படுத்தி கொண்டிருக்கிறது; அதற்கான அறிகுறிகள் தற்போது தெரியத் துவங்கியுள்ளன.
தற்போது பூமியிலுள்ள உயிரினங்கள் 1,000 மடங்கு வேகத்தில் அழிந்து வருகிறது; அடுத்த நூற்றாண்டில் 10 ஆயிரம் மடங்கு வேகத்தில் அழியும். ஐ. நா,. சபையின் இயற்கை பாதுகாப்பு குழு அறிக்கை படி, உலகில் உள்ள பறவை, பாலூட்டி, மெல்லுடல் வகை உயிரினங்கள், கடல் ஆமைகள் என பரவலாக உள்ள உயிரினங்களில் குறிப்பிட்ட சில வகை உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.மேலும், 75 சதவீத உணவுத் தாவரங்கள், 25 சதவீத மீன் இனங்கள், 30 சதவீத கடல் பஞ்சுகள் தவிர ஒரு வினாடிக்கு ஒரு கால்பந்து மைதான அளவுள்ள காடுகள் உட்பட இயற்கை வளங்கள் மிக வேகமாக அழிந்து வருகின்றன. 3,000 வகையான உணவுத் தாவரங்களில் தற்போது 150 வகை மட்டுமே பயிரிடப்படுகிறது. 8 அடி அகலமுள்ள உலகின் மிகப்பெரிய பூக்கள், இரும்பு கம்பியை விட பலமுள்ள வலை பின்னும் ஒரு வகை சிலந்தி என பல கீஸ்டோன் உயிரினங்களும் அழிவை எதிர்கொண்டு வருகின்றன. இயற்கைக்கு எதிரான மனிதர்களின் செயல் தான் இந்த பேரழிவுக்கு காரணம். மனித சமுதாயம் விழித்து கொள்ளாவிட்டால் இயற்கை வளங்களோடு, மனித வளமும் மறைந்து போகும். இவ்வாறு, கருத்துகள் கூறப்பட்டன. கல்லூரி பேராசிரியை சுஜாதா நன்றி கூறினார்
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment