Sunday, October 17, 2010

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா

இலவசத்தை ஒழித்திடு, விழித்திடு தமிழா : நோட்டீஸ் வினியோகத்தால் பரபரப்பு


"மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி' என்ற பெயரில் விலாச மில்லாமல் வினியோகிக்கப்படும் நோட்டீசால் பரபரப்பு ஏற்பட்டது.


நகர பகுதிகளில் கடந்த இரு தினங்களாக "இன்றைய தமிழகம்' என்ற தலைப்பிட்டு முகவரியில்லாமல் சில மர்ம நபர்களால் நோட்டீஸ் வினியோகிக்கப்பட்டு வருகிறது. "ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்கும் என்னிடம் ஒருவர் கேட்டார், எதற்காக இத்தனை கஷ்டப்படுகிறாய்?' "நான் கேட்டேன், கஷ்டப்படாமல் எப்படி வாழ்க்கை ஓட்ட முடியும்?' அவர் சிரித்தபடி சொன்னார், "என்னை பார் ஒரு ரூபாய்க்கு அரிசி வாங்கி உண்டு விட்டு உறங்கி விடுவேன். போரடித்தால் வண்ணத் தொலைக்காட்சியில் திரைப் படம் பார்த்திடுவேன். உழைக்காமல் நோய் வந்தால் மருத்துவரிடம் ஓடுவேன். உயர் சிகிச்சை பெற்றிடுவேன், ராஜமரியாதையுடன். நான் யார் தெரியுமா? தமிழ் நாட்டு குடிமகன்!'


"என் நாட்டில் உணவுக்கு அரிசி ஒரு ரூபாய், சமைப்பதற்கு காஸ் அடுப்பு இலவசம், பொழுதுபோக்கிற்கு வண்ணத் தொலைகாட்சி மின்சாரத்துடன் இலவசம். எதற்காக உழைக்க வேண்டும்? மனைவி, பிள்ளை பெற்றால் 6,000 ரூபாய் இலவச சிகிச்சையுடன். குழந்தைக்கு சத்துணவு இலவசம் பாலர் பள்ளியில். படிப்பு, சீருடை, முட்டையுடன் மதிய உணவும் இலவசம். பாடப்புத்தகம் இலவசம். படிப்பும் இலவசம். பள்ளி செல்ல பஸ் பாஸ் இலவசம். தேவையென்றால் சைக்கிளும் இலவசம். "பெண் பருவமடைந்தால் திருமண உதவித் தொகை 25,000 ரூபாய் இலவசம், ஒரு சவரன் தாலியுடன், திருமண செலவும் இலவசம். தேவையென்றால் மாப்பிள்ளையுடன் பேப்பரில் விளம்பரமும் இலவசம். மகள் பிள்ளை பெற்றால் மீண்டும் அதே கதை தொடரும் அவள் வாழ்க்கை யிலும். நான் எதற்கு உழைக்க வேண்டும்!'


"இலவசம் என்பதற்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று கையூட்டு, மற்றொன்று பிச்சை. இதில் நீ எந்த வகை? எதை எடுத்து கொள்வது? உழைக்காமல் உண்டு சோம்பேறியாகிறாய். இலவசம் நின்று போனால் உன் நிலை? உழைப்பவர் சேமிப்பை களவாடத் தலைப்படுவாய்? இதே நிலை தொடர்ந்தால், இலவசம் வளர்ந்தால், அமைதிப் பூங்காவாம் தமிழகம், கள்வர் பூமியாய் மாறும் நிலை, இன்னும் வெகு தொலைவில் இல்லை. தமிழா விழித்தெழு, உழைத்திடு, இலவசத்தை வெறுத்திடு, அழித்திடு, தமிழகத்தை தரணியில் உயர்த்திடு. நாளைய தமிழகம் நம் கையில், உடன் பிறப்பே சிந்திப்பாயா? மனம் வெதும்பும் ஒரு தமிழனின் மனசாட்சி!' இவ்வாறு அந்த நோட்டீசில் அச்சிடப்பட்டுள்ளது

source:dinamalar

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails