Friday, October 15, 2010

பரவி வரும், "கட்டிப்பிடி' கலாசாரம்

 

தமிழகத்தில் பொது இடங்களில் பரவி வரும், "கட்டிப்பிடி' கலாசாரம் இளைய சமுதாயத்தை பாழாக்கி வருகிறது.

கலாசாரத்தில் தோய்ந்த நம் பண்பாட்டை சீரழிக்கும் விதமாக, சென்னை போன்ற பெரு நகரங்களில் பெருகி வரும் பைக் காதல், பீச், பார்க் மறைவிட காதல்களால், மாணவ, மாணவியர் தவறான பாதைக்கு செல்லக் கூடிய அபாயகரமான சூழல் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெருநகரங்களில் இது போன்ற நிலை அதிகம் இருப்பதால், எங்கே தங்கள் மகனும், மகளும் இதே போன்றதொரு நிலைக்கு
சென்று விடுவார்களோ என பெற்றோர் அஞ்சுகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை, சாலைகளில் செல்லும் போது, சிலர் துப்பட்டாவால் முகம் முழுவதையும் மூடிக் கொண்டும், சிலர் ஹெல்மட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டும், சிலர் வெளிப்படையாகவும், முன்னே ஓட்டிச் செல்லும் இளைஞரை இறுக்கி அணைத்தபடியும், அசிங்கமாக சேட்டைகள் செய்தபடியும் செல்கின்றனர்.

இதே போல், தினமும், சென்னை மெரீனா, பெசன்ட் நகர் பீச்களில், இரவு வேளைகளில் மட்டுமல்லாது, மாலை வேளைகளிலும், பகலிலும் மொட்டை வெயிலில் அமர்ந்து கொண்டு பலர், காதலர்கள் என்ற போர்வையில், பட்டவர்த்தனமாக, மற்றவர்களின் பார்வையில் படும்படி ஆபாச செய்கைகளில் ஈடுபடுவதை காணலாம். போதா குறைக்கும், இது போன்ற (கள்ள)காதலர்களின் அட்டகாசம் உயிரியல் பூங்கா, சிறுவர் பூங்கா போன்ற பூங்காக்கள்,
நினைவு மண்டபங்கள், ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடங்கள், புதர் மறைவுகளிலும் அதிகம் காணப்படுகிறது.

இது போன்ற அசிங்கங்களில் ஈடுபடுவோருக்கு தங்களைப் பற்றியும் கவலை இல்லை. தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்களைப் பற்றியும் கவலை இல்லை. இது போன்ற அசிங்கங்களை போலீசாரும் அவ்வளவாக கண்டு கொள்வதில்லை. மற்றவர்கள் தங்களைப் பார்க்கும் போது, அவர்கள் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்படுமே என்பதையும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், இளைய சமுதாயத்தினர் மன ரீதியாக
பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மாணவ, மாணவர்கள் மத்தியில் இது போன்ற நிகழ்வுகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதை பார்க்கும் அவர்கள், தாங்களும் இதே போன்று நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தவறு செய்ய நேரிடுகிறது. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு, இனியேனும் பொது இடங்களில் வரம்பு மீறி நடந்து கொள்பவர்களுக்கு அரசும், போலீசாரும் உரிய கட்டுப்பாடுகளை விதிக்க
வேண்டும். இல்லையெனில், ஏற்கனவே "டிவி', சினிமா, ஆபாச புத்தகங்களால் பாதிக்கப்பட்டுள்ள இளைய தலைமுறையினர் தடம்மாறிப் போக வாய்ப்பு ஏற்பட்டு விடும்.

source:dinamalar



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails