மும்பை : உலகளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருப்பது ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
சைபர் குற்றங்கள் தொடர்பான ஆய்வை, "குளோபல் இ-செக்யூரிட்டி சொல்யூஷன்ஸ்' என்ற நிறுவனம் அண்மையில் நடத்தியது.அதன் ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகளவில், கம்ப்யூட்டர்கள் மற்றும் இணையதளங்கள் வாயிலாக செய்யப்படும் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.இணைதளங்கள் வாயிலாக, ஆன்-லைன் கிரெடிட் கார்டு மோசடிகள், வைரஸ் தாக்குதல், பாலியல் குற்றங்கள், லாட்டரி மோசடிகள், வங்கி கணக்கு மற்றும் பாஸ்வேர்டுகளை திருடுதல், இணையதளங்களை முடக்குவது, சமூக வலைதளங்களில் இருந்து அந்தரங்க விவரங்களை திருடுதல் உள்ளிட்ட சைபர் குற்றங்கள் ஏராளமாக அரங்கேறி வருகின்றன.உலகளவில் இணையதளம் பயன்படுத்துவோரில் 65 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில், சைபர் குற்றங்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது. இணையதளம் பயன்படுத்தும் இந்தியர்களில் 76 சதவீதம் பேர் சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்த நிலையில் சீனா உள்ளது.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டோரில் 58 சதவீதம் பேர் கோபம் கொள்கின்றனர். 51 சதவீதம் பேர் இதற்காக வருத்தப்படுகின்றனர். 46 சதவீதம் பேர் நிலைகுலைந்து போகின்றனர். 88 சதவீதம் பேர், இந்த குற்றங்கள் நடப்பதற்கு நாம் தானே இடம் கொடுத்தோம் என்று, தங்களையே நொந்து கொள்கின்றனர். 8 சதவீத இந்தியர்கள், தாங்கள் சைபர் குற்றங்களால் பாதிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.வெளிநாடுகளில் இருந்து இந்த குற்றங்களை செய்வதால், சைபர் குற்றவாளிகளை போலீசாரால் நீதியின் முன் நிறுத்தி உரிய தண்டனை பெற்றுத் தர முடியவில்லை என்று, பெரும்பாலான இந்தியர்கள் நம்புகின்றனர்.சைபர் குற்றங்களால் பாதிக்கப்படும் 59 சதவீத இந்தியர்கள், பாதிப்புக்கு பின்னர், இணையதள பயன்பாட்டில், தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்கின்றனர். தங்கள் பாதிப்புக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். ஆனால், 37 சதவீதம் பேர் மட்டுமே போலீசில் புகார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
source:dinamalar
--http://thamilislam.tk
No comments:
Post a Comment