கரூர்: மூன்று நிமிடத்தில் 200 நாட்டின் தேசியக்கொடியை தடையின்றி சுட்டிக்காட்டும் 3 வயது சுட்டிக்குழந்தை கரூரில் சாதிக்க துவங்கியுள்ளது.
கரூர் வையாபுரி நகரில் வசிக்கும் சக்திவேல், செல்வி தம்பதியரின் மகள் இனியா(3); ப்ரி கே.ஜி., வகுப்பு மாணவி. வீட்டு சுவற்றில் ஒட்டியிருந்த தேசிய தலைவர்களின் படங்களை அடையாளம் காட்டுவதில், ஆர்வம் காண்பித்த இனியாவின் முயற்சியை கண்டு, அவர் தாயார் செல்வி பல்வேறு பயிற்சி அளித்தார். ஏற்கனவே துவக்கப்பள்ளி ஆசிரியராக பணி புரிந்த அனுபவம் உள்ள செல்வி, மகள் இனியாவுக்காக உலக நாடுகளின் கொடி, தலைவர், அறிஞர், உலக அதிசயம் என படங்களை சேகரிக்க துவங்கினார். இரண்டு வயதில் துவங்கிய பயிற்சியின் விளைவாக, தற்போது இனியாவின் நினைவில் உலகில் உள்ள 231 நாடுகளின் கொடிகளும் அத்துப்படி. எந்த நாட்டுக்கொடியை காண்பித்தாலும், தடுமாறாமல் அடையாளம் காட்டுகிறார். 100க்கும் மேற்பட்ட நாடுகளையும், உலக வரைபடத்தில் சரியாக சுட்டிக்காட்டுகிறார். கிரகாம்பெல் முதல் அப்துல்கலாம் வரை அறிவியல் விஞ்ஞானிகள், ரவீந்திரநாத் தாகூர் முதல் தெரசா வரை நோபல் பரிசு வென்றவர்கள், சுதந்திர போராட்ட வீரர்கள், நாட்டின் பிரதமர்கள், ஜனாதிபதிகள், தமிழக முதல்வர்கள், கவிஞர்கள், சாதனை படைத்த பெண்கள், விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீரர்கள் என அனைவரையும் சரியாக பெயர் உச்சரித்து அடையாளம் காட்டுகிறார்.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் உமாமகேஸ்வரி முன் தன்னுடைய திறனை வெளிப்படுத்தி முதல் பாராட்டை அவரிடம் பெற்றார். தொடர்ந்து, கரூரில் நடந்த உலக செம்மொழி மாநாடு சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் தன்னுடைய நினைவு திறனை நிரூபித்து, முன்னாள் எம்.பி., பழனிசாமியின் பாராட்டையும் பெற்றார். தற்போது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற, வீடியோ "சிடி'யுடன் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
தாயார் செல்வி கூறியதாவது: குழந்தைகளுக்கு தமிழ் உச்சரிப்பு இன்றைய காலகட்டத்தில் சரிவர தெரியவில்லை. இதனால், குழந்தை பருவத்தில் தமிழ் எழுத்துகளை முதலில் அடையாளம் காண்பிக்க பயிற்சி அளிக்க வேண்டும். இத்தகைய பயிற்சியின் போது எழுத்து மட்டுமல்லாது படங்களையும் இனியா சரியாக அடையாளம் காண்பித்ததால், நாடு, கொடி மற்றும் தலைவர் படங்களை சேகரித்து பயிற்சி அளித்தேன். தற்போது "செஸ்' விளையாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. வருங்காலத்தில் சிறந்த "செஸ்' வீராங்கணையாக இனியா வரவேண்டும் என்பது எங்கள் ஆவல். மகன் சிபி(11) "செஸ்' விளையாட்டில் மாவட்ட அளவில் வெற்றிபெற்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment