நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம். நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.
இப்படி நம் கம்ப்யூட்டரிலிருந்து பைல்கள், ஒரே பெயரிலோ, அல்லது வெவ்வேறு பெயர்களிலோ, கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனை எப்படி நீக்குவது? சில வேளைகளில் பெயர்களை மாற்றிவிட்டால், டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி? இதற்கென புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Duplicate Finder. இதன் மூலம் டூப்ளிகேட் போட்டோக்கள், டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள், எம்பி3 பாடல்கள் மற்றும் பலவகையான டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
இதனை http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல்; அளவும் சிறியதுதான். மேலும் விரைவாக இன்ஸ்டால் ஆகிறது. பின் இதனை இயக்கி பைல்களை அடையாளம் கண்டு அழிக்கலாம்.
1. இது மிகத் திறமையான தேடும் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. அதன் மூலம் பைல்களை அதன் பைட்களில் தேடுகிறது. இது பைனரி தேடல் என்பதால், விரைவாக பைல் கண்டறியப்படுகிறது. முழு பைலும் ஒரே மாதிரியான விஷயத்தைக் கொண்டிருக்கின்றனவா என்று கண்டறியப்படுகிறது.
2. பைல்களை அவற்றின் பெயர், அளவு போன்றவற்றின் மூலமும் கண்டறிகிறது.
3. குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களிலும் பைல்களைத் தேடி அறிகிறது.
4. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் பாதுகாக்கிறது. டூப்ளிகேட் பைல்களை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. அல்லது நம்முடைய செட்டிங்ஸ் படி நீக்குகிறது.
5. சில குறிப்பிட்ட டூப்ளிகேட் பைல்களை, பைல்களின் பெயர்களுக்கு முன் சிறிய எழுத்துக்களைச் சேர்த்து அமைக்கிறது. அதன்பின் எந்த பைலை டெலீட் செய்வது என்று நாம் ஒதுக்கலாம்.
6. இதனைப் பயன்படுத்த நல்ல வசதியான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
7. யூனிகோட் முறையில் எழுதி அமைக்கப்பட்ட பைல்களையும் கையாள்கிறது. இதனால் சீனம், தமிழ், அரபி மொழிகளில் யூனிகோட் எழுத்துருக்களில் அமைந்த பைல்களையும் கண்டறிகிறது.
இந்த புரோகிராம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. முதலில் நீங்கள் எந்த போல்டர்களை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதில் பைல்களின் துணைப் பெயர்களையும் (extensions) கீழ் விரி மெனுவில் காட்ட வேண்டும்.
இரண்டாவது நிலையில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தியவுடன், புரோகிராம் தான் கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைக் காட்டும். புரோகிராம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, எத்தனை பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டன என்பதனையும், எவை எல்லாம் டூப்ளிகேட் பைல்கள் என்றும், அவை ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும்.
மூன்றாவது நிலையில் நாம் அந்த பைல்களை என்ன செய்திட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பைல்களை அப்படியே விட்டுவிடுவது, வேறு பெயர் தருவது, இன்னொரு போல்டருக்கு அனுப்புவது, பைல்களைத் தேர்ந்தெடுத்து அழிப்பது ஆகிய செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த புரோகிராமின் சிறப்பம்சங்கள்:
1. ஒரே மேட்டர், ஒரே பெயரில் உள்ள பைல்களைக் கண்டுபிடிப்பது
2. ஒரே படம்; ஆனால் பைல் பார்மட் வேறு (எ.கா.jpg, gif) வீடியோ (avi, mpg) பாடல்கள்(mp3,mp4) என்பனவற்றுள் கண்டறிவது.
3. டூப்ளிகேட் பைல் கண்டறியும் புரோகிராம்களில் இதுவே மிக வேகமாக இயங்கக் கூடியது.
4. மிக மிக எளிதாக இயக்கவல்லது.
5. பிளாப்பி, யு.எஸ்.பி. போன்றவற்றில் வைத்தும் இயக்கலாம்.
6. பைல் பெயர்கள், பைலின் மேட்டர், பைட் / பைட் ஒப்பீடு போன்ற பல வழிகளில் கண்டறிகிறது.
7. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் உள்ள டூப்ளிகேட் பைல்களைச் சுட்டிக் காட்டும்.
8.முக்கியமான பைல்கள் இருந்தால், அவற்றை நீக்கி மற்றவற்றைத் தேடலாம்.
9. விண்டோஸ் மற்றும் நாம் குறிப்பிடும் போல்டர்களை பாதுகாப்பாகத் தன் தேடல்களிலிருந்து ஒதுக்குகிறது.
10. தேடல் முடிவுகளைப் பதிந்து வைத்து, பின் நாட்களில் தேடும்போது உதவுகிறது.
இதன் மூலம் நாம், 1) தேவையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்க் இடத்தை கண்டறிந்து பயன்படுத்தலாம். 2) இதற்கென அதிக நேரம் செலவழிக்க தேவையில்லை. இதனால் நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லா தவர்கள் இதனைப் பயன்படுத்தும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் பைலை அழித்துவிடக் கட்டளை கொடுத்துவிடக்கூடாது. இந்த பைல் விண்டோஸ் 95 முதல் அண்மையில் வந்த விண்டோஸ் 7 வரையிலும் உள்ள சிஸ்டங்களில் இயங்குகிறது. இதற்கான ராம் மெமரி 128 எம்பி இருந்தால் போதுமானது. ஹார்ட் டிரைவில் ஐந்து எம்பி இடம் இருக்க வேண்டும்.
source:dinamaalr
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment