திபெத் ஆன்மிகத் தலைவரான தலாய் லாமா முதல் தடவையாக சீனாவில் உள்ள சாமானிய மக்களுடன் டுவிட்டர் குறுந்தகவல் பரிமாற்ற சேவை மூலமாக உரையாடியிருக்கின்றார். டுவிட்டர் இணையதளத்துக்கும் தகவல் பரிமாற்ற சேவைக்கும் சீனாவின் கம்யூனிஸ்ட் அதிகாரிகள் தடைவிதித்துள்ளனர் என்றாலும் சீனர்கள் பல்லாயிரக்கணக்கானோர் குறுக்கு வழிகளில் டுவிட்டரைப் பயன்படுத்தி வருகிறார்கள். நாடு கடந்த நிலையில் வாழ்ந்துவரும் திபெத் தலைவர் தலாய் லாமா தற்போது அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுவருகிறார். நியூயார்க் நகர விடுதியில் ஒன்றில் இருந்தபடி சீன மொழிபெயர்ப்பாளர் ஒருவரின் உதவியுடன் அவர் ஒரு மணி நேரம் டுவிட்டரில் குறுந்தகவல்களை பரிமாறிக்கொண்டுள்ளார். இந்த ஒரு மணி நேரத்தில் சுமார் முன்னூறு கேள்விகளுக்கு தலாய் லாமா பதில் அளித்துள்ளார். லாமாவின் பதில்கள் திபெத் தொடர்பில் சீன அரசாங்கம் கடைப்பிடித்துவரும் கொள்கையை அவர் விமர்சித்துள்ளார். திபெத் பகுதிகளில் பதற்றம் உருவாக திபெத் மக்கள் காரணமல்ல சீன அரசாங்கமே காரணம் என்று அவர் கூறியுள்ளார். சீனாவின் ஹன் இன மக்கள் திபெத்தில் பெருமளவில் குடியேறி வருவதால் திபெத்தின் மொழி கலாச்சாரம் போன்றவை பெரும் நெருக்கடிக்குள்ளாவதாக தலாய் லாமா டுவிட்டர் மூலமாகத் தெரிவித்துள்ளார். சீனா நிலைப்பாடு திபெத்துக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்துவதன் காரணமாக சீனாவின் இறையாண்மைக்குள் தலாய்லாமா தலையிடுவதாக சீன அரசு கூறுகிறது. ஆனால் திபெத் பகுதிக்கு அர்த்தமுள்ள ஒரு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்றுதான் தான் பாடுபடுவதாக தலாய் லாமா கூறுகிறார். source:bbc |
http://thamilislam.tk
No comments:
Post a Comment