மும்பை தாக்குதல் வழக்கு : அஜ்மல் கசாப் குற்றவாளி என தீர்ப்பு; இந்தியர்கள் இருவர் விடுவிப்பு
மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியான வழக்கில், பயங்கரவாதி அஜ்மல் கசாப்பை குற்றவாளி என மும்பை தனி நீதிமன்றம் தனது தீர்ப்பில் இன்று (திங்கட்கிழமை) அறிவித்தது.
சதித்திட்டம் தீட்டம் தீட்டியது, இந்தியாவுக்கு எதிராக போர் தொடுத்தது முதலிய குற்றச்சாட்டுகள் கசாப்புக்கு எதிராக நிரூபிக்கப்பட்டன.
குற்றவாளி அஜ்மல் கசாப்புக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த விவரம் நாளை அறிவிக்கப்படவுள்ளது.
அதேநேரத்தில், மும்பைத் தாக்குதலுக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது (இந்தியர்கள்) ஆகிய இருவரும் குற்றமற்றவர்கள் என அவர்களை இவ்வழக்கில் இருந்து நீதிமன்றம் விடுவித்தது.
மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 10 பேர் கொடூரத் தாக்குதல்கள் நடத்தினர். இதில், 166 பேர் பலியானார்கள்.
இந்தத் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் 9 பேர், பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற ஒரே ஒரு பயங்கரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். இவன் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்.
கசாப் மீதும், மும்பை தாக்குதல் இலக்கு இடங்களை கண்டறிந்து, தாக்குதல்கள் நடத்துவதற்கு ஏதுவாக வரைபடங்கள் தயாரித்து அளித்த பயங்கரவாதிகள் பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது (இவ்விருவரும் இந்தியர்கள்) ஆகியோர் மீதும் 11 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க அஜ்மல் கசாப் உள்ளிட்ட மூன்று பயங்கரவாதிகளும் அடைக்கப்பட்டுள்ள உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள மும்பை ஆர்தர் ரோடு சிறை வளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. அதன் நீதிபதியாக கூடுதல் செசன்ஸ் நீதிபதி எம்.எல்.தஹில்யானி அமர்த்தப்பட்டார்.
கடந்த ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி மூவர் மீதும் அவர் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தார். அப்போது மூவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தனர். அதைத் தொடர்ந்து சாட்சி விசாரணை தொடங்கியது. இந்த வழக்கில் அரசு தரப்பில் நேரிலும், ஆவண ரீதியிலும் 653 சாட்சிகள் சாட்சியங்கள் அளித்துள்ளனர். இவர்களில் 30 பேர் சம்பவங்களை நேரில் கண்ட சாட்சிகள். வழக்கின் விசாரணை மார்ச் 31 ஆம் தேதி முடிந்தது.
இந்த நிலையில், மும்பைச் சம்பவம் நடந்து சுமார் 17 மாதங்கள் முடிந்துள்ள நிலையில் தனி நீதிமன்றம் இன்று (திங்கட்கிழமை) தனது தீர்ப்பை வழங்கியது.
அதில், இந்த வழக்கில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி அஜ்மல் கசாப் குற்றவாளி என மும்பை தனி நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹில்யானி தனது தீர்ப்பில் அறிவித்தார்.
அதேவேளையில், மும்பைத் தாக்குதலுக்கு உதவிதாக குற்றம்சாட்டப்பட்ட பாகீம் அன்சாரி, சபாபுதீன் அகமது ஆகிய இருவருக்கும் எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததால், அவ்விருவரையும் குற்றமற்றவர்கள் என நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, தீர்ப்புக்காக கசாப் உள்ளிட்ட மூவரும் இன்று தனிக்கோர்ட்டில் மிகுந்த பாதுகாப்புடன் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டனர்.
இதையொட்டி ஆர்தர் ரோடு சிறை வளாகத்திலும், அதன் சுற்றுப்புறத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன. முக்கிய இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
source:vikatan
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment