பெங்களூரு: வாழும் கலை நிறுவனர் ரவிசங்கர் துப்பாக்கிச் சூட்டிலிருந்து உயிர் தப்பினார். கொலை செய்ய வந்தவன் யார், இதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசாரால் விசாரிக்கப்பட்டு வருகிறது. "இச்சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது' என்று ரவிசங்கர் தெரிவித்தார்.பெங்களூரு கனகபுரா ரோட்டில், வாழும் கலையின் ஆசிரமம் உள்ளது. இங்கு ஒன்பது நாட்களாக ஆன்மிக நிகழ்ச்சி ஒன்று நடந்தது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் : இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஒன்பதாவது நாளான நேற்று நிகழ்ச்சி முடிந்த பின், ரவிசங்கர் காரில் ஏறுவதற்காக வெளியில் வந்தார். அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ரவிசங்கரை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். இச்சம்பவத்தில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. தொடர்ந்து வந்த வினய் என்ற பக்தரின் கையில் துப்பாக்கி குண்டு காயம் ஏற்பட்டது.இதனால், ஆசிரமத்தில் பெரும் பரபரப்பும், பதட்டமும் காணப்பட்டது. பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டிலிருந்து ரவிசங்கர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
உடனடியாக, அவர் பாதுகாப்பாக காரில் அழைத்துச் செல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பக்தர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.ரவிசங்கர் மிக அருகில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது, பக்தர்களை பாதித்துள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவ இடத்திலிருந்து துப்பாக்கி குண்டை சுற்றியிருந்த கவர் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தையடுத்து, ஆசிரமத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
"நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம் : கர்நாடகா உள்துறை அமைச்சர் ஆச்சார்யா கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். ஆசிரமத்திற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. கர்நாடகா டி.ஜி.பி., அஜய்குமார் சிங் விரைந்துள்ளார்,'' என்றார்.இச்சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் கூறுகையில், ""நான் நன்றாக உள்ளேன்; பக்தர்கள் கவலைப்பட வேண்டாம். ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தீய சக்திகளுக்கு தொடர்புள்ளது. மீடியாவையும், பத்திரிகையாளர்களையும் இன்று சந்தித்து விளக்கமாகக் கூறுகிறேன்,'' என்றார்.
இது குறித்து ரவிசங்கரின் தனிச் செயலர் கிரிகோவிந்த் கூறுகையில், ""ரவிசங்கர் பத்திரமாக உள்ளார். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், பக்தர்கள் அதிர்ச்சியடைய வேண்டாம். இந்த சம்பவத்தில் மர்ம நபர், 0.22 ரைபிளை பயன்படுத்தியுள்ளார்,'' என்றார்.
ஏற்கனவே பாதுகாப்பில் உள்ளார் : சம்பவம் குறித்து ராமநகரம் டி.எஸ்.பி., தேவராஜ் கூறுகையில் ; இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம் முதலில் எதுவும் கூற முடியாது . சம்பவ இடத்தில் போலீஸ் மோப்ப நாயுடன் , தடயவியல் நிபுணர்கள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்திற்குள் அனுமதி இல்லாமல் யாரும் நுழைய முடியாது. சுவாமிக்கு எவ்வதி அச்சுறுத்தலும் இல்லை அதே நேரத்தில் ஏற்கனவே பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யார் வந்தது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
துப்பாக்கியால் சுட்டவன் யார் ? : ஆசிரமத்தில் நடந்து கொண்டிருந்த சஸ்தாங் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்பர். இந்த வளாகம் காம்பவுண்ட் சுவர் இல்லாதது. நிகழ்ச்சி முடிந்து வந்ததும் மர்ம மனிதன் சுட்டுள்ளான். துப்பாக்கியால் சுட்டவனை ஆசிரம பாதுகாவலர் மற்றும் பக்தர்கள் சேர்ந்து பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்தாகவும் ஆசிரம வட்டாரம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மர்ம மனிதன் குறித்து எவ்வித தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.
அமைதியை பரப்புவதே என் லட்சியம் : தாக்குதலை கண்டு பயப்பட மாட்டேன் ; ரவிசங்கர் சிறப்பு பேட்டி : துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவத்திற்கு பின்னர் ரவிசங்கர் நிருபர்களிடம் பேசினார். அவர் இன்று ( திங்கட்கிழமை ) பேட்டியின் போது கூறியதாவது ; நான் அமைதியையும், ஆன்மிகத்தையும் பரப்பி வருகிறேன் . இது தான் எனது இலட்சியம். எனக்கென எதிரிகள் யாரும் இல்லை. எனது ஆசிரமத்தில் நடந்த சஸ்தாங் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவர் தான் என் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என நினைக்கிறேன். இந்த தாக்குதலுக்கான காரணம் என்னவென்று எனக்கு தெரியவில்லை. மற்ற மத ரீதியிலான அமைப்பினர் யாரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டிருக்கவில்லை .
நான் என் மீது தாக்குதல் நடத்த வந்தவனை ஏற்கனவே மன்னித்து விட்டேன். தாக்குதல் நடத்த வந்தவனை என் ஆசிரமத்தில் சேர அழைக்கின்றேன். அஹிம்சையே எப்போதும் வெற்றி பெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும். சில மக்கள் என் மீது தாக்குதல் நடத்த நினைக்கின்றனர். பொது நிகழ்ச்சியில் பங்கேற்கும்போது கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மிரட்டல் மூலம் எனது ஆன்மிக பணியை நிறுத்தி விட முடியாது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பஜனை பாடல் பாடப்பட்டது. பின்னர் கையை அசைத்தபடி ஆசிரமத்திற்குள் புறப்பட்டு சென்றார்.
source:dinamaalr
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment