இந்தியா: விமான விபத்தில் 158 பேர் பலி | |||||||||||
இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட விமான விபத்தில் குறைந்தது 158 பேர் உயிரிழந்துவிட்டார்கள். 8 பேர் உயிர் தப்பியிருக்கிறார்கள் துபையில் இருந்து வந்த ஏர் இந்தியா ஏக்ஸ்பிரஸ் போயிங் 737-800 விமானம், கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள விமான நிலையத்தில் காலை சுமார் 6.30 மணியளவில் இறங்கியபோது அந்த விபத்து ஏற்பட்டது. விமானம் ஓடுபாதையில் இறங்கியதும், திடீரென்று டயர் வெடித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பிறகு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அருகில் இருந்த 200 அடி பள்ளத்தாக்கில் விழுந்து வெடித்தது. அப்போது, விமானத்தில் தீப் பிடித்து, பல பாகங்களாக சிதறியது. விமான ஓடுபாதை, மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விபத்து ஏற்பட்ட நேரத்தில், சிலர் விமானத்தில் இருந்து கீழே குதித்து தப்ப முயன்றார்கள். அதில் 8 பேர் தப்பியிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் மங்களூர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அந்த விமானத்தில் மொத்தம் 160 பயணிகள் இருந்தனர். அதில், 4 கைக்குழந்தைகளும் அடங்குவர். அது தவிர பைலட், துணைப் பைலட் மற்றும் நான்கு விமானப் பணியாளர்கள் இருந்தனர். விமானம் தரையிறங்கிய நேரத்தில் பைலட்டிடமிருந்து எந்தவித எச்சரிக்கையும் வரவில்லை என்று கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்டதும், விமான நிலையத்தில் இருந்தும் மங்களூரில் இருந்தும் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புப்படை வாகனங்கள் அங்கு விரைந்தன. பெரும்பாலானவர்கள் இருக்கையில் அமர்ந்து பெல்ட் கட்டிய நிலையிலேயே கருகிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள். பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்குக் கருகிவிட்டன. விமானத்தில் இருந்து கீழே குதித்து தப்பிய ஒருவர் கூறும்போது, விமானம் தரையிறங்கியதும், பலத்த அதிர்வு ஏற்பட்டதாகவும், அதன்பிறகு அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து வெடித்ததாகவும் தெரிவித்தார். விமானம் வெடித்ததும், வெளியே மரங்கள் தெரிந்ததைப் பார்த்த தான், அங்கிருந்து கீழே குதித்து தப்பியதாகவும் தெரிவித்தார். அப்போது தீயினால் ஏற்பட்ட பாதிப்பில் அவரது முகம், கை உள்ளிட்ட பாகங்களில் தீ விபத்து ஏற்பட்தாதகவும் தெரிவித்தார். தனக்கு உடனடி உதவி கிடைக்காத நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உதவியுடன் மோட்டார் சைக்கிளிலேயே மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
விமானம் வெடித்து விபத்து ஏற்பட்டபோது, பல பாகங்களாக சிதறிய நேரத்தில், அந்த விமானத்திலிருந்து தான் தூக்கியெறியப்பட்டதாக உயிர் தப்பிய இன்னொருவர் தெரிவித்தார். அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். விமான நிலையம் அமைந்துள்ள பாஜ்பே என்ற இடம் மங்களூரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உளளது. அது கர்நாடக கேரள மாநில எல்லையில் உள்ளது. அந்த விமானத்தில் வந்தவர்களில் பெரும்பாலானவர்கள், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. விபத்து ஏற்பட்ட நேரத்தில், அங்கு லேசாக மழை பெய்துகொண்டிருந்தது. ஆனால், விமான ஓடுபாதை தெளிவாகவே இருந்ததாக அதிகாரிகள் கூறுகிறார்கள். அங்கு மீட்பு நடவடிக்கை நடைபெற்று வருகிறது. மலைப் பகுதியாக இருப்பதாலும், பெருமளவில் உள்ளூர் மக்கள் கூடிவிட்டதாலும் மீட்பு நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். காயமடைந்தவர்களும், உயிரிழந்தவர்களும் மங்களூர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர். அங்கு உறவினர்கள் பெருமளவில் கூடியுள்ளனர் source:bbc |
http://thamilislam.tk
No comments:
Post a Comment