போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து வரும் ரோம் நகரைச் சேர்ந்த 'பர்மனென்ட் பீப்பிள்ஸ் டிரிபியூனல்' அமைப்பு, இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து கடந்த ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில், அயர்லாந்தின் டப்ளின் நகரில் விசாரணை நடத்தியது. இதில் கலந்துகொண்டு சாட்சியம் அளித்துவிட்டு வந்திருக்கும், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரியும் பால் நியூமேன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரை சந்தித்தோம்.
''பர்மனென்ட் பீப்பிள்ஸ் டிரிபி யூனல் அமைப்புதான் (பி.பீ.டி) வியட்நாம் போரில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை முதன்முதலாக உலகுக்குத் தோலுரித்துக்காட்டியது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை யை விசாரிக்கும்படி இலங்கையை சேர்ந்த 'ஐரீஷ் ஃபோரம் ஃபார் பீஸ் இன் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், 'பி.பீ.டி' கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தியது. இவ்வளவுக்கும் இலங்கையைச் சேர்ந்த அந்த அமைப்பை நடத்துவதே நல்ல உள்ளம் கொண்ட சிங்களவர்கள்தான்!
விசாரணையில் சமூக ஆர்வலர்கள், சிங்களப் பத்திரிகை யாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சாட்சியங்களை முன்வைத்தனர். அமெரிக்க தமிழ் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலையை சாட்டிலைட் மூலம் படமெடுத்து, இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தனர். இலங்கையில் கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களின் படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 'அவர்களைச் சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகள்தான்...' என்று இலங்கை ராணுவம் மறுத்தது. ஆனால், சாட்டிலைட் படங்களுடன் ஒப்பிட்டு, கொலை நடந்த இடம், இலங்கை ராணுவத்தின் ஆளுகையில் இருந்தது என்று உறுதிசெய்து கொண்டது 'பி.பீ.டி.' அமைப்பு.
போரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியது உட்பட இலங்கை ராணுவம் செய்த பல்வேறு போர்க் குற்றங்களை நான் கூறினேன். இன்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தீப்பெட்டி, பிஸ்கெட் உள்ளிட்ட 54 வகையான பொருட்களுக்கு தடை உள்ளது. போரின்போது பிடித்துச் செல்லப்பட்ட சுமார் 12 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் கதி என்னவென்று தெரியவில்லை..! இதையெல்லாம் விரிவாக நான் அந்த குழுவினரிடம் பதிவு செய்தேன்.
விசாரணை நிலவரங்களை வைத்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் மற்றும் ரோஹித் போகோலாகாமா ஆகிய இரு நபர் சிறப்பு கமிஷனை ஐ.நா. நியமித்துள்ளது. ஆனால், வழக்கம் போல் இலங்கை அரசுடன் சேர்ந்துகொண்டு இந்திய அரசின் ஐ.நா. சபைக்கான பிரதிநிதியும், 'இந்த இரு நபர் கமிஷன் தேவையற்றது. இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் பிரச்னைதான்' என்று இந்த கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான் அநியாயம்!'' என்று முடித்தார் பேராசிரியர் பால் நியூமேன்.
யார் என்ன சொன்னால் என்ன..? அரக்கத்தனத்தை துளியும் அடக்கிக் கொள்ளாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறதே இலங்கை இனவெறி மிருகம்!
- டி.எல்.சஞ்சீவிகுமார்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment