சென்னை : எவரெஸ்ட் சிகரம் ஏறிய முதல் தமிழக இளைஞர் என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(26); இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், சிங்கப்பூரில் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். சிறுவயதில் இருந்தே மலையேற்றத்தில் ஆர்வம் கொண்ட இவர், கடந்த இரு ஆண்டுகளில், மேற்கு ஐரோப்பாவில் உள்ள சோ ஓயோ(8,201 மீ), ஆப்ரிக்காவின் கிளிமன்ஜரோ (5,895 மீ) உள்ளிட்ட பல சிகரங்களில் ஏறியுள்ளார். இந்தியாவில் 53 சதவீதம் குழந்தைகள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். நாட்டின் முக்கிய பிரச்னையான இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சந்தோஷ்குமார் தமது ஐவர் குழுவுடன், நேற்று முன்தினம் காலை எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்துள்ளார். இந்த பயணத்தை அவர், கடந்த மார்ச் 29ம் தேதி சென்னையிலிருந்து துவக்கினார். தமிழகத்திலிருந்து எவரெஸ்ட் சிகரம் ஏறிய, சென்னையைச் சேர்ந்த முதல் இளைஞர் என்ற பெருமையை சந்தோஷ் குமார் பெற்றுள்ளார். எவரெஸ்ட் சிகரம் ஏறியவுடன் அங்கு, "தமிழ் வாழ்க' என்று எழுதப்பட்ட பதாகையை வைத்தார். தமது சாதனைப் பயணத்திற்கு நிதியுதவி அளித்த, "கார்ப்பரேட்' நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் புகைப்படங்கள் அடங்கிய பதாகைகளையும் எவரெஸ்ட் சிகரத்தின் பல இடங்களில் வைத்தார். சந்தோஷ் குமாரின் எவரெஸ்ட் சிகர பயண அனுபவங்கள் மற்றும் புகைப்படங்களை blog.climbeverestwithme.com என்ற வலைதளத்தில் பார்க்கலாம்.
source:dinamalar
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment