Wednesday, May 26, 2010

ஈழ விடுதலை கிடைக்கும் வரை ஓய்வில்லை ராம் நேர்காணல்

ஈழ விடுதலை கிடைக்கும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை
இயக்குநர் ராம் நேர்காணல்


 கற்று தமிழ் திரைப்படம் மூலமாக தமிழகத்தில் அறிமுகமான இயக்குநர் ராம் தன் படத்தில் தமிழ் படித்தால் என்ன நிலை என்பதை மக்களிடம் கொண்டு சென்றவர். சமீப காலமாக திரை நட்சத்திரங்களும் ஈழ விடுதலைக்காகவும் ஈழமக்களின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் சொல்லும் நபர்களாகவும் இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் தான் இப்போது கற்றது தமிழ் இயக்குநர் ராம்  ஈழ உணர்வாளர்களின் கூட்ட மேடைகளில் உணர்ச்சி கொந்தளிப்பாக காணப்பட்டு வருகிறார்.


 தஞ்சை செங்கிப்பட்டியில் ஈழ விடுதலைக்காகவும், ஈழ தமிழர்களை கொல்லப்படுவதை தடுக்க கோரியும் தீ குளித்து உயிர் நீத்த முத்துக்குமாருக்கு முதல் சிலை  அமைக்கும் இளந்தமிழர் இயக்கம் நடத்திய சிலை திறப்பு, முள்ளிவாய்க்கால் நினைவு தின பொது கூட்டத்தில் கலந்து கொண்டு ஈழத்தில் தமிழர்களுக்கு, தமிழ் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லி கூடியிருந்த கூட்டத்தினையும் கண்ணீர் சிந்த வைத்தார்.  இந்த உணர்ச்சிகள் அடங்கும் முன்பாக அவரை நக்கீரன் இணைய தளத்திற்காக சந்தித்தோம்.



 நக்கீரன் : உங்கள் திரைப்பணி எப்படி உள்ளது. அடுத்த திரைப்படப்பணி என்ன ?

 ராம் : என் திரைப்பணிகள் நன்றாக போகிறது. அடுத்து இரண்டு படங்களுக்கான வேலைகள் நடக்கிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் எடுக்கப்படும். மக்களிடம் நல்ல கருத்துக்களை  சொல்லக்கூடிய படமாகத்தான் அந்த படங்கள் இருக்கும். வசூல் அதிகமானால் வர்த்தக ரீதியாக படம்ன்னு சொல்றாங்க. ஆனா எல்லா படங்களுமே வர்த்தக நோக்கில் தான் எடுக்கப்படுகிறது.
 

 நக்கீரன் : திரைத் துறையில் உள்ளவர்கள் பலர் இப்போது மேடை ஏறி பேசத் தொடங்கிட்டாங்களே?   அந்த வரிசையில் தான் நீங்களுமா ?

 ராம் : திரைக் கலைஞர்களும் உணர்வுள்ள தமிழர்கள் தானே. அவர்களுக்குள்ளும் உணர்ச்சிகள் இல்லாமலா இருக்கும். அந்த வகையில் தான் நானும் என் ஈழ சொந்தங்களுக்காக பேச வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை நினைத்து மேடை ஏறியிருக்கிறேன் .என் சின்ன வயசுல இருந்தே ஈழ உணர்வாளன் நான்.  அப்போது அதை வெளிக்காட்ட முடியல உள்ளுக்குள்ளேயேயும், நண்பர்கள்கிட்டயும் பேசி வேதனைப்படத்தான் முடிந்தது. ஆனால் இப்ப இது போன்ற மேடைகள் கிடைக்காததால நமக்கு தெரிந்த உண்மைகளை மக்களிடம் சொல்றேன். நானும் தமிழன் தானே எனக்கும் உணர்வுகள்  இருக்கும் தானே. சகோதரர் முத்துக்குமார் தீக் குளித்தது தான் என்னை மேடை ஏற வைத்தது.

 நக்கீரன் : இப்படி சொல்லிக் கொண்டு திரையிலிருந்து வந்தவர்கள் பலரை இன்று காண முடியவில்லையே?

 ராம்: அவர்களின் சூழ்நிலை என்னவோ இப்போது வெளிவராமல் இருந்தாலும் அவர்களின் உணர்வுகள் வெளிவர வைக்கும். சூழ்நிலைக்காக அவர்கள் அமைதி காக்கலாம். அடுத்து தங்கள் பிழைப்பையும் பார்க்கனுமே.

 நக்கீரன் : வழக்கு என்று வந்தால் நீங்களும் மறைந்து விடுவீர்களா ?

 ராம் :  ஏன் என்மீது வழக்குகள் வரப்போகிறது. என் இன மக்களுக்காக நான் பேசும் போது ஏன் என் மீது வழக்கு வரும். நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லையே அதனால நான் வழக்கில் சிக்கி கைதாகமாட்டேன். அடுத்து நடக்கும் கொடுமைகளை நாட்டின் இறையான்மைக்கு உட்பட்டே தான் என் பேச்சுகள் இருக்கும். இதுவரை அப்படித்தான் பேசி வருகிறேன்.

 நக்கீரன் : முத்துக்குமார் சிலை திறக்க வந்தீர்கள். சிலை திறக்கவிட வில்லையே ?

 ராம் : ஆமாங்க ரொம்ப வேதனையா இருக்குது. ரொம்ப ஆர்வத்தோட வந்தேன். உலகின் முதல் சிலையை இளந்தமிழர் இயக்கம் திறக்குதுன்னு சொல்லித்தான் அதன் ஒருங்கிணைப்பாளர் நண்பர் செந்தமிழன், அருணபாரதி என்னை அழைத்தார்கள். வந்தேன் ஆனா கடைசி நேரத்துல இப்படி திறக்கவிடாம செஞ்சுட்டாங்க. ரொம்ப வேதனையா இருக்கு. அதே மேடையில வச்சு வீட்டுக்கொரு  சிலை கொடுப்போம்னு சொன்னது கொஞ்சம் ஆறுதலாவும் இருக்கு.

 நக்கீரன் : உங்களின் இந்த ஈழ உணர்வு பேச்சு எவ்வளவு நாள் வரை நீடிக்கும்?

 ராம் :  உணர்வுள்ள தமிழன் நான் என் இனம் ஈழ விடுதலை அடையும் வரை என் பேச்சுக்கு ஓய்வில்லை. நான் யாரையும் புண்படுத்தி பேசினால் தானே வழக்கு, புகார் வந்து தடைவரும் யாரையும் புண்படுத்தலயே ! புண்பட்ட என் இனத்திற்காகத்தானே பேசுறேன் என்று முடித்தார்.

        நேர்காணல்: இரா.பகத்சிங்


source:nakkheeran



--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails