Wednesday, May 5, 2010

உறையவைக்கும் உலக உதாரணங்கள்

அமெரிக்காவிலிருந்து பிரகாஷ் எம்.ஸ்வாமி
உறையவைக்கும் உலக உதாரணங்கள்

ஊரெல்லாம் உளவாளிகள்!

பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ. ஏஜென்ட்டான ராணா என்பவருக்கு இந்திய ரகசியங்களை உளவுபார்த்துக் கொடுத்ததாக, பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரி மாதுரி குப்தா கைது செய்யப்பட்டார். இந்த பரபரப்பைத் தொடர்ந்து, 'வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களின் நிலை எந்த அளவில் இருக்கிறது?' என்ற ஒரு கேள்வி எழ... அதைப்பற்றிய ஓர் அலசல் இங்கே.

தங்கள் பெயர் வெளியிட விரும்பாமல் தூதரகங்கள் சம்பந்தப்பட்ட சிலர், நம்மிடம் சொன்ன தகவல்கள் அனைத்துமே அதிர்ச்சி ரகம்!

''அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் உள்ள தூதரகங்களுக்கு

அதிகாரிகளாகச் செல்வது உயர் வானது. ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா செல்வது தாழ்வானது, சிங்கப்பூர், மலேசியா, துபாய் போன்ற நாடுகளுக்குச் செல்வது சுமார் என அதிகாரிகளால் பிரித்துப் பார்க்கப்படுகிறது. தூதரகங்களில் நல்ல போஸ்ட்டிங் கிடைக்க மலையாளியாக இருக்க வேண்டும் அல்லது மாமூல் வெட்ட வேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போஸ்ட்டிங் போட சில கோடிகள். கனடா என்றால் 50 லட்சம் வரை மாமூல் என கப்பம் கட்டுவார்கள். இதைக் கொடுத்தவர்கள் திரும்ப எடுப்பது எப்படி? விதிமுறைகளை மீறி ஒரு விசா வழங்க, 5,000 டாலர் கள் வாங்குகிறார்கள்.. புதிய பாஸ்போர்ட் பெற 2,000 டாலர்கள் என்று மேலைநாடுகளில் வசூல் வேட்டை நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருப்பவர்களும் புதிய பாஸ்போர்ட் பெற முடியும். வாஷிங்டனில் உள்ள தூதரகத்தில் வேலை செய்த கன்னட இளைஞர் ஒருவர், இரண்டே வருடங்களில் சுமார் ஒரு லட்சம் டாலர்களை சுருட்டி இருக்கிறார். அமெரிக்க உளவுத் துறையும் இந்தியத் தூதரகமும் கூட்டாகச் சேர்ந்து அவரைக் கைது செய்வதற்கு முன்பு சென்னைக்கு தப்பி வந்து, வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். அனைவரும் இப்படி அயோக்கியர்கள் அல்ல. ஒரு சிலர்தான் இப்படி இருக்கிறார்கள்.

மேலைநாடுகளில் இருக்கும் இந்தியத் தூதரக அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகள் செலவு வைப் பார்கள். இந்தியாவில் இருந்து வரும் அமைச்சர்கள், அதிகாரிகள், ஊர் சுற்றிப் பார்க்க சொகுசு கார், ஸ்பெஷல் சாப்பாடு, ஏராளமான பரிசுப் பொருட்கள், விலை உயர்ந்த விஸ்கி என்று 10 ஆயிரம் டாலர்கள் வரை செலவு வைத்தால், அந்த தூதரக அதிகாரி எங்கேதான் போவார்?

இதில் பல அமைச்சர்கள், தங்கள் தோழிகளையும் கூடவே ரகசியமாக அழைத்து வந்து வெளிநாடுகளில் 'அரசுமுறைப் பயணத்தில்' லூட்டி அடிப்பார்கள். அரசாங்கக் கணக்கில் காட்ட முடியாததால் தூதரக அதிகாரிகளே ஹோட்டல் ரூம் முதல், அவர்களின் மேக்கப் செலவு வரை அழுதாக வேண்டும். இல்லா விட்டால், 'அடுத்த போஸ்ட்டிங் ஆப்பிரிக்க நாடுதான்' என்று மிதமான மிரட்டல் வரும்!

குடும்பத்துடன் மேற்கத்திய நாடுகளுக்கு போஸ்ட் டிங் போகிறவர்கள், மூன்று வருடம் பணி முடித்து வேறு நாட்டுக்கு மாற்றலாகிச் செல்லும்போது தங்கள் மனைவி, குழந்தைகளை, அமெரிக்காவிலோ, இங்கிலாந்திலோ விட்டுவிட்டுத்தான் போகிறார்கள். அவர்கள் குடும்பம் மெள்ள மெள்ள அங்கே செட்டில் ஆகிவிட்ட பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரியும் ஓய்வு அல்லது வி.ஆர்.எஸ்ஸில், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என்று செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் மாற்ற லாகிப் போனாலும் அவர்கள் குடும்பம் மேல் நாட்டில் வாழ்வதற்கு வசதி செய்து கொடுப்பது எது? வேலை செய்யும்போதே பல்வேறு ரகசியங்களைக் கூறுவதால் தங்க அனுமதி கொடுத்து பணமும் கொடுக்கிறதா அயல்நாட்டு அரசாங்கங்கள்? அல்லது பாஸ்போர்ட், விசா வழங் குவதற்கு பெறப்படும் லஞ்சமா?'' என்று கேள்வி எழுப்பியவர்கள், தொடர்ந்தனர்.

''மூன்று வருடங்களுக்குள் எவ்வளவு சுருட்ட முடியுமோ... அவ்வளவும் சுருட்டுகிறார்கள். கடந்த ஓர் ஆண்டாக மத்திய அரசு எடுக்கும் வலுவான நடவடிக் கைகளால் இவர்கள் ஆட்டம் சற்றே அடங்கி இருக்கிறது. மும்பை குண்டு வெடிப்பு சதிகாரன் ஹேட்லிக்கு சிகாகோ துணைத் தூதரகம் விசா வழங்கிய பிறகு ஒவ்வொரு வழக்கும் அலசி ஆராயப்படுகிறது. மேலைநாடுகளில் இந்தியத் தூதரகம் மற்றும் துணை தூதரகங்களில் வேலை செய்பவர்கள் அனை வரும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுவது இல்லை. லோக் கலாகவும் வேலைக்கு ஆட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆனால், சம்பளம் இந்திய ரூபாய் மதிப்பில் தரப்படும். ஆயிரம் டாலர்கள் மாதச் சம்பளம் பெறும் உள்ளூர் கிளார்க்குகள், விசா மற்றும் பாஸ்போர்ட் ஊழியர்கள் பாடு மிக திண்டாட்டம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாத சம்பளத்தில் வேலை செய்யும் உள்ளூர் ஊழியர்கள் சிலர், வார விடுமுறை நாட்களில் அலுவலகம் வந்து தகுதியற்றவர்களுக்கு பணத்தைப் பெற்றுக்கொண்டு விசா, பாஸ்போர்ட் கொடுத்ததையும் மத்திய அரசு கண்டுபிடித்தது.

ஒவ்வொரு தூதரகம் மற்றும் துணைத் தூதரங்களிலும் உளவுத் துறையாக 'ரா' அமைப்பின் அதிகாரி ஒருவர் மஃப்டியில் வேலை செய்வார். உளவு பார்ப்பதற்காக அவருக்குத் தனியாக ஒரு தொகை ஒதுக்கப்படும். இந்தத் தொகையை அந்த அதிகாரி தனக்கு செய்தி தருபவர்களுக்குக் கொடுப்பார். அமெரிக்காவில் மிகப் பிரபலமான நகரில் இருந்த 'ரா' உயர் அதிகாரி ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன்பு தன் அலுவலகத்தில் வேலை செய்த பெண் ஊழியர் ஒருவருக்கு வைர வளையல், புடவைகள், விலை உயர்ந்த ஆடைகள் வாங்கிக் கொடுத்து அதை 'சோர்ஸ்'க்கு கொடுத்ததாகக் கணக்கில் காட்டினார். 'தூதரகங்களில் வேலை செய் பவர்கள் அந்த நாட்டில் உள்ள பெண்களிடம் அதிகம் பழகக் கூடாது. அதன் மூலமாக அரசாங்க ரகசியங்கள் வெளியேற வாய்ப்பு உண்டு' என்று புதிய அரசு 'சர்க்குலர்' அனுப்பியும் வெள்ளைக்கார அழகிகளுடன் சுற்றும் இந்திய உயர் அதிகாரிகள் உண்டு. இதன் மூலம்தான் அரசு ரகசியங்கள் 'லீக்' ஆவதாக பலமான பேச்சு உண்டு.

அமெரிக்காவில் ஒரு பெரிய நகரத்தில் வேலை செய்த இந்தியச் செய்தி நிறுவனத்தின் தலைமை நிருபர், பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் உளவாளியாக இருந்தார். பிளவுபடாத பாகிஸ்தானில் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்த அவர், தன்னை பாகிஸ்தானி என்றே சக நிருபர்களிடம் கூறி வருவார். இந்திய அமைச்சர்கள் இங்கு வரும்போது சென்சிட்டிவ்வான கேள்விகளுக்குப் பதில் பெற்று அந்த டேப்பை அப்படியே அருகில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் சேர்ப்பித்துவிடுவார். அவர் இறக்கும் வரை தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. காரணம், அரசியல் பிரஷர்தான். இவருக்கு பாகிஸ்தான் அரசியல்வாதிகள் அனைவரும் நல்ல நண்பர்கள்!'' என்று முடித்தனர்.

'தாய் மண்ணே வணக்கம்' என்று நல்ல நாட்டுப் பற்றுடன் இருப்பவர்களை சரியாக அலசித் தேர்ந்தெடுத்து, வெளிநாட்டு தூதரகங்களுக்கு அனுப்புவதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரே தீர்வு!



source:vikatan

--
http://thamilislam.tk

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails