|
|
ஈழத் தமிழரின் பேரவலம் கண்டு தம்முயிர்களை தற்கொடையாக்கி தீக்குளித்த வீரத் தமிழர்களுக்கான, சைவம் - கத்தோலிக்க கிறிஸ்தவம் இணைந்த சிறப்பு வழிபாடு யேர்மனியில் நடைபெற்றது. |
யேர்மனி றைனெ வெற்றிங்கன் நகரில் வாழும் சைவ - கத்தோலிக்க தமிழ் மக்கள் இணைந்து நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (08.03.2009) காலை 10:00 மணியளவில் இந்த சிறப்பு வழிபாட்டை நடத்தினர். முதலில் இறைனீச்சுரம் சிவன் கோவிலில் சைவ சமய வழிபாட்டு முறைகளுடன் தமிழ்மொழி மூலம் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை பூசகர் சபாநாத சர்மா சிறப்பாக நடத்தி வைத்து உரையாற்றினார். இந்த இறைனீச்சுரம் சிவன் கோவில் தாயகத்தில் வயல் வெளிகளின் நடுவே அமைதியான சூழலில் அமைந்துள்ள சைவக் கோயில்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. இக்கோயிலில் தமிழ்மொழி மூலம் திருமண நிகழ்வுகள், சடங்குகள், வழிபாடுகள் நடைபெறுவதுடன் யார் வேண்டுமானாலும் வழிபாட்டை நடத்தலாம் என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அதே கட்டடத்தின் மேல்மாடியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் அருட்திரு இமானுவேல் அடிகளாருடன், தமிழகத்தைச் சேர்ந்த தற்போது பெல்ஜியத்தில் பணிபுரியும் அருட்திரு ஜீவா லூர்துவும் இணைந்து இலங்கைத் தீவில் சமாதானம் வேண்டியும், தீயில் சங்கமித்தோருக்கான ஆன்ம இளைப்பாற்றிற்காகவும் பிரார்த்தனை செய்தனர். ஏறத்தாழ 100 பேர் வரை கலந்து கொண்ட இந்த வழிபாட்டில் உரையாற்றிய இமானுவேல் அடிகளார் இறை வழிபாட்டுடன் நின்று விடாமல் விடுதலைப் பயணத்தின் நீண்ட பாதையில் தமிழ் மக்கள் தொடர்ந்து தமது பங்கை ஆற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். "போதும் சகோதரரே உங்கள் தற்கொடை. திருப்பித்தர எம்மிடம் ஒன்றுமில்லை எம் பிரார்த்தனையைத்தவிர" என்பதாக அமைந்திருந்தது இந்நிகழ்வு. |
http://www.puthinam.com/full.php?2a27WRA4b331aIe04dcpOs3db0eI7CI34d3KVqH3e0dLYOrzce03f6d12cc4Uk06be
No comments:
Post a Comment