Monday, March 9, 2009

அவசர அழைப்பு:ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உண்ணாநிலை போராட்டம்

உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு தயாராகுமாறு தமிழகம் சென்னையில் இருந்து தமிழக மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.

 
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய‌ இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக‌ இருக்கின்றனர்.

 
பச்சிளம்குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இள‌ம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த‌ அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
இந்திய அரசை கண்டித்தும் சர்வதேச சமுதாயத்தின் கண்களைத் திறப்பதற்கும் தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 
இதன்படி 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தியா, இலங்கையில் உள்ள‌ தாயகத் தமிழர்களும், 130 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களும் 12 மணி நேர உண்ணாநிலையை (இரு வேளைகள்) கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வீடுகளில் இருப்போரும், பணியிடங்களில் இருப்போரும் தத்தமது இடங்களில் உண்ணா நிலையை தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 
இந்த போராட்டத்தினால் பலன் இருக்காது என்று எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் அனைவரும் இந்த‌ மாபெரும் போராட்ட‌திற்கு ஒத்துழைப்பு ந‌ல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பணியிடங்களிலோ, மற்ற‌ இடங்களில் இருந்து கொண்டோ நீங்கள் நடத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் மற்றவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள், தொழிலாளர் நலச் சங்கங்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிறைகளில் இருக்கும் கைதிகள் மற்றும் திரளானோர் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.

 
ஆகவே, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்பினர் இந்த உண்ணாநிலைப் போரட்டத்தை தத்தமது நாடுகளில் உத்வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 
பார்வையற்றோர் 6 பேர் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களால் முடியும் போது நாம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது பெரிய காரியமில்லை.

கொத்துக் கொத்தாக மடியும் உறவுகளைக் காக்க
அனைவரும் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!

 
இவ‌ண்
தமிழக மாணவர் கூட்டமைப்பு
சென்னை.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails