புதுக்குடியிருப்பிற்கான இறுதிச்சமரும் படையினரின் புதிய வியூகங்களும்
கடந்த செவ்வாய்கிழமை (24) சிறீலங்கா இராணுவத்தின் முதன்மையான மூன்று படையணிகள் புதுக்குடியிருப்பு நகரத்தை அண்மித்த போது கடுமையான சமர் மூண்டுள்ளது.
58-2 ஆவது பிரிகேட் லெப். கேணல் சன்சாயா வன்னியசிங்கா தலைமையில் மேற்கில் இருந்து கிழக்காக புதுக்குடியிருப்பு நோக்கியும், நடவடிக்கை படையணி எட்டு அதன் கட்டளை அதிகாரி கேணல் ரவிப்பிரியா தலைமையில் தெற்கில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கியும், 58-1 பிரிகேட் அதன் கட்டளை தளபதி லெப். கேணல் தேசபிரியா குணவர்த்தனா தலைமையில் வடக்கில் இருந்து தெற்காக புதுக்குடியிருப்பு நோக்கியும் நகர்வை விரைவாக்கிய போது தீவிர மோதல்கள் வெடித்துள்ளன. இராணுவத்தின் இந்த அணிகளுக்கு துணையாக லெப். கேணல் நிகால் சமரக்கோன் தலைமையில் 5 ஆவது கவசப்படையும், 53 ஆவது டிவிசனும் தாக்குதலை நடத்தி வருகின்றன.
விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு மண் அணைகளை உடைத்து கொண்டு புதுக்குடியிருப்பு நகருக்குள் நுழைய முயன்ற இந்த படையணிகள் மீது விடுதலைப்புலிகள் மூர்க்கத்தனமான தாக்குதல்களை நடத்தி வருவதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த பத்தி எழுதப்படும் போது இராணுவம் புதுக்குடியிருப்பு நகரத்தினை கைப்பற்றும் இறுதிக்கட்ட முயற்சிகளில் இறங்கியுள்ளது. மிகவும் அருகாமையில் இரு தரப்பும் மோதல்களில் ஈடுபட்டு வருவதுடன், விடுதலைப்புலிகள் ரீ-55 ரக டாங்கிகள் இரண்டையும் பயன்படுத்தி வருவதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து செவ்வாய்கிழமை வரையிலும் அங்கு நடைபெற்ற மோதல்களில் 1000 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன், 3,000 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும் கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற மோதல்களில் 400 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 900 பேர் படுகாயடைந்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment