Tuesday, March 3, 2009

அரசியல் தலைமைகள் விடும் ஒவ்வொரு தவறுக்கும் மக்கள் இரத்தத்தால் பதில் சொல்கிறார்கள்:

 


அரசியல் தலைமைகள் விடும் ஒவ்வொரு தவறுக்கும் மக்கள் இரத்தத்தால் பதில் சொல்லும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்பார்கள். விடுதலைப் புலிகளின் அரசியல் பார்வையிலும் அவர்களுடைய யுத்த மூலோபாய மற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளிலும் இருந்த தவறுகளுக்கு இன்று அவர்கள் மட்டுமல்ல தமிழ் மக்களும் இரத்தத்தால் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.


கடந்த இரண்டு மாதத்திலும் இதுவரை இரண்டாயிரத்திற்கு மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவயவங்களை இழந்தவர்களும்  படுகாயமடைந்தோரும் பல்லாயிரக்கணக்கானோர். வவுனியா மன்னார் திருமலை வைத்தியசாலைகள் போதாமையால் தற்போது பொலநறுவை அநுராதபுரம் என்று தனிச் சிங்களப் பிரதேசங்களிலுமுள்ள வைத்தியசாலைகளுக்கு காயமுற்றோர் எடுத்து வரப்படுகிற நிலை உருவாகியிருக்கிறது.


அது மட்டுமல்லாமல் வைத்தியசாலைகளிலும் கூட இடப் பற்றாக்குறை காரணமாக நோயாளர்கள் தரைகளிலேயே படுக்க வைக்கப்பட்டுள்ளனர். நோய் முற்றிலுமாகக் குணமடைய முன்னரே அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து முகாம்களுக்கு மாற்றப்பட்டு விடுகிறார்கள். மீளவும் காயங்களுக்கு மருந்து கட்டவோ மருந்து எடுக்கவோ வைத்தியசாலைகளுக்குச் செல்வதற்கு முகாம் பொறுப்பதிகாரியான இராணுவ அதிகாரியிடம் அனுமதி பெறுவதென்பது முயற்கொம்பு தான்.


இது முகாம்களுக்குள் நோய் பரவவும் காயமடைந்தவரை அபாய நிலைக்கு இட்டுச் செல்ல ஏதுவான சந்தர்ப்பங்களும் பல நடைபெற்றுள்ளதாகத் தெரிய வருகிறது.
இது தவிர அவர்களுடைய உணவு வசதியோ இருப்பிட வசதியோ அன்றாடத் தேவைகளுக்கான வசதியோ கூட எதுவும் சரியான வகiயில் பூர்த்தி செய்யப்படாமலே அவர்கள் முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருக்கிறார்கள்.  வாய்ப்புள்ளவர்களாவது வவுனியாவிலோ அல்லது மற்றும் இடங்களிலோ உள்ள குடும்பத்தவர்களுடன் இணையவோ தமக்கான வைத்தியத்தைதத் தாமே மேற்கொள்ளவோ அனுமதிக்கப்படுகிறார்களில்லை.


புலிகள் ஊடுருவி விடுவார்கள் என்ற ஒற்றைக்காரணம் மட்டுமே இந்த மக்களுடைய எல்லா அடிப்படை ஜனநாய உரிமைகளையும் மறுத்து விடவும் அவர்களைக் கைதிகள் போல இந்த முகாம்களுக்குள் தடுத்து வைத்து விடவும் போதுமானதாகி இருப்பது மிகப் பெரும் அவலம்.


தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் உள்ள மக்களை புலிகள் விடுவிக்க வேண்டும் என்று உள்நாட்டில் இருந்து குரல் எழுப்பும் ஜனநாயக சக்திகளான டக்ளஸ் தேவானந்தா முதல் புலிகளிலிருந்து அதன் பயங்கரவாதத்தை வெறுத்து ஜனநாயக வழிக்குத் திரும்பிய கருணா பிள்ளையான் வரை எவருமே புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்ததாக இவர்கள் சொல்லும் மக்களின் உரிமைகளைப் பற்றி வாய் திறக்கிறார்களில்லை.  


ஜனநாயகம் மற்றும் மோதல் தீர்வுக்காக  குரல் கொடுத்து யுனஸ்கோ விருது வாங்கிய ஆனந்தசங்கரியும் இதற்குள் அத்துப்படி என்பது அந்த விருதையே அவமதிப்பதாக ஆகியிருக்கிறது.


மறுபுறத்தில் புலம் பெயர்ந்த தேசத்திலிருந்தும் புலிகள் மக்களை விடுவிக்க வேண்டும் என்று கோருவதும் அவர்கள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் அது ஒன்று தான் மக்களின் நலனில் புலிகள் கொண்டுள்ள அக்கறையை வெளிப்படுத்தும் என்று அவ்வப்போது அறிக்கை விட்டுக் கொண்டிருக்கும் முன்னணிகளும் அமைப்புக்களும் ஏற்கெனவே புலிகளுடன் முரண்பட்டுக் கொண்டு நீ சுடுவதானால் சுடு என்று சூடு வாங்கிக் கொண்டும் படையினரின் கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்த இந்த மக்களுடைய அடிப்படை உரிமைகள் குறித்து வாய் திறப்பதாகவோ அதற்காகப் போராடுவதாகவோ காண முடியவில்லை.


அதுமட்டுமல்லாமல் சுத்திகரிப்பு அல்லது வடிககட்டல் என்ற போர்வையில் இவ்வாறு புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ளிருந்து தப்பி வரும் இளைஞர்களும் யுவதிகளும் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளன. தமிழ்க்குழுக்களையும் இந்த னநாயகவாதிகளையும் நம்பி வந்த அந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற தார்மீகப் பொறுப்புக் கூட இவர்களிடம் இல்லை என்பதை இவர்களுடைய நடவடிக்கைகளே அம்பலப்படுத்துகின்றன. 


இவற்றின் காரணமாக இவ்வளவு சிரமத்துள்ளும் இங்கு படும் அவஸ்தையை விட புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலேயே செல்லடிக்குள் இருந்திருக்கலாம் என்ற குரல்களும் இத்தகைய முகாம்களிலிருந்து எழ ஆரம்பித்து விட்டன என்கிற கசப்பான உண்மையையும் நாம்; ஏற்றுக் கொண்டாக வேண்டியிருக்கிறது.


வெளிப்படையாக மௌனம் சாதிக்கும் இவர்கள் தனிப்பட்ட உரையாடல்களின் போது யுத்த ழ்நிலையில் இவற்றிற்கெல்லாம் ஒன்றும் செய்ய முடியாது என்று வெறும் சால்ஜாப்பு சொல்வார்கள். யுத்த சூழ்நிலையில் கட்டாய ஆட்சேர்ப்பு அவசியம் என்றும்  யுத்தம் என்றால் இழப்பு இருக்கத் தான் செய்யும் என்றும் புலிகள் சொல்லும் காரணங்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்று இந்த னநாயகவாதிகள் விளக்கினால் தான் உண்டு.


சரி ஒரு வாதத்திற்காக இவர்கள் சொல்வது போல புலிகள் ஒழிக்கப்பட்டு வடக்கு விடுவிக்கப்பட்டு யுத்தம் முடிவடைந்தவுடன் தமிழ் மக்கள் மீதான இந்த ஒடுக்குமுறைகள் காற்றில் கரைந்து விடுமா?


கிழக்கின் உதாரணம் அவ்வாறு நம்புபவரை ஏமாளிகள் என்றும் சொல்பவரை தலையில் மிளகாய் அரைப்பவர்  என்றும் சொல்கிறது.


கிழக்கு விடுவிக்கப்பட்டு ஆண்டுகள் பல கடந்து விட்டன. ஜனநாயக ரீதியான தேர்தல் நடாத்தி ஜனநாயக ரீதியாக பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கிழக்குக்கான மாகாண சபையும் அமைக்கப்பட்டு விட்டது. கிழக்கிலிருநதும் புலிகள் ஒழிக்கப்பட்டு விட்டார்கள் வடக்கிலும் புலிகளின் கதை முடிவுக்கு வந்து விட்டது. ஆகவே இனி எமக்கு ஆயுதங்கள் தேவையில்லை என்று கிழக்கு மாகாண முதலமைச்சர் அறிக்கை விட்டு முதற்கட்ட ஆயுத ஒப்படைப்பும் செய்தாயிற்று. 


அதன்பிறகு...


கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மட்டக்களப்பு களவாஞ்சிக்குடி பகுதியை சுற்றிவளைத்து விசேட அதிரடிப்படையினர் தேடுதல் நடாத்தியுள்ளனர்.


இதன்போது வெல்லாவெளிப் பிரதேசத்திற்குச் சென்ற அதிரடிப்படையினர் ஒலிபெருக்கி மூலம் வீட்டிலிருந்த ஆண்கள் எல்லோரையும் ஆலயத்திற்கு செல்லுமாறு அறிவித்து விட்டு வீடு வீடாகச் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அவர்கள் சேகரித்த விபரம் வீட்டில் எத்தனை பெண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வயது என்ன என்பவை தாம்.


தாயும் மகளும் மட்டுமே இருந்த வெல்லாவெளியிலுள்ள ஒரு வீட்டினுள் புகுந்த அதிரடிப்படையினர் தாயைக் கட்டிப் போட்டு விட்டு மகளைத் தாயார் முன்னிலையிலேயே பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். ஐந்து பேர் கொண்ட இந்த அதிரடிப்படைக் குழுவில் நால்வர் காவலுக்கு நிற்க ஒருவர் இதில் டுபட்டிருக்கிறார்.


தெய்வேந்திரம் புனிதவதி என்ற இந்த 14 வயதுச் சிறுமி களவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் முதலில் அனுமதிக்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு வைத்தியசாலையில் 17வது வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


திங்கட்கிழமை மட்டக்களப்பு வைத்தியசாலைக்குச் சென்ற காவற்துறையினர் ஒன்றரை மணி நேரமாக அச்சிறுமியை மீளவும் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தியிருக்கின்றனர்.


விசாரணையின் போது இச்சிறுமியின் தாயார் தனது மகள் பருவமடைந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை என்றும் (வெறும் 25நாட்கள்) சுற்றி வளைப்பு என்ற பெயரில் சோதனைக்காக வந்த அதிரடிப்படையினரே தன்னைக் கட்டிப் போட்டு விட்டு தனது மகளை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாகவும் காவற்துறையினரிடம் தெரிவித்திருந்தார்.


இச்சம்பவம் குறித்து சிறுமியின் உறவினரும் அவரது வீட்டிற்கு அண்மையில் வசிப்பவரும் மகளிர் அமைப்பொன்றின் செயற்பாட்டாளருமான மகாதேவி சிவகுமார் (31வயது மூன்று பிள்ளைகளின் தாயார்) விசேட அதிரடிப்படையினருககு எதிராக நடவடிக்கை எடுப்பதற்காகத் தகவல்களைத் திரட்டியிருக்கிறார். இதையறிந்த விசேட அதிரடிப்படையினர் மறுநாளான திங்கள் இரவு இவரது வீட்டிற்குச் சென்று கணவரான சிவகுமாரைத் தாக்கிக் கட்டி வைத்து விட்டு மகாதேவியைத் தாக்கிக் கொலை செய்து அங்குள்ள கிணற்றில் வீசியுள்ளனர். வீட்டிலிருந்த மூன்று இலட்ச ரூபாய் பணமும் நகைகளும் அவர்களால் கொள்ளையிடப்பட்டிருக்கின்றன. இன்று செவ்வாய் காலை கிணற்றிலிருந்து கைகளும் வாயும் கட்டப்பட்ட நிலையில் மகாதேவியின் சடலம் மீட்கப்பட்டிருக்கிறது. இச்சம்பவங்களை வெல்லாவெளிப் பிரதேச சபைத் தலைவர் மகேந்திரன்  உறுதிப்படுத்தியுள்ளார்.


அன்றைய சுற்றி வளைப்பின் போது இந்தச் சிறுமி மட்டும் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகவில்லை. ஏறத்தாழ ஐந்து வீடுகளில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் நடைபெற்ற வீடுகளிலிருந்து அந்நேரம் கூக்குரல்களும் அழுகை ஓலங்களும் எழுந்த போது தாம் அவ்வீடுகளுக்குச் செல்ல முற்பட்ட போது சுற்றிவளைப்பில் டுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினரால் தடுக்கப்பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.


கிழக்கில் காலாதிகாலமாக படையினரால் கிராமங்களில் ஆண்கள் றையாடப்படுவதும் பெண்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாவதும் ஒன்றும் புதிய விடயமல்ல. கொக்கட்டிச்சோலையிலிருந்து மைலந்தனை ஈறாக அதற்கு ஒரு மிக நீண்ட பட்டியலே உண்டு. 


அண்மையில் கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னரும் கூட இவ்வாறு தமிழ்க்கிராமங்கள் இலக்கு வைத்து சூறையாடப்படுவதும் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாவதும் தொடர்ந்து கொண்டு தானிருக்கிறது. அவ்வாறான சம்பவங்கள் பற்றிய விடயங்கள் எழும் போதெல்லாம் இராணுவ அதிகாரியையும் அரச முகவர்களையும் தொடர்பு கொண்டு அவ்வாறு ஏதும் சம்பவங்கள் நடைபெறவில்லை என்று நிறுவுவதே இந்த ஜனநாயகவாதிகளின் முதற்கடமையாக இருக்கும்.


பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்ட பெண்ணோ அவருடைய உறவினர்களோ சாட்சியமளிக்கும் போது அவர்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் எவையேனும் அங்கு இருக்கின்றதா என்ற எந்தவித சொரணையும் இந்த னநாயகவாதிகளுக்கு இருப்பதில்லை. அதேபோல் அப்பெண்கள் தாம் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானோம் என்று வெளிப்படுத்துவதால்  எதிர்காலத்தில் தமது சமூகத்தில் எந்தவிதமான நெருக்கடிகளை எதிர்நோக்குவார்கள் என்கிற சமூகப்பார்வையும் இவர்களுக்கு இருப்பதில்லை.  


வடக்கில் இப்போது படையினர் மேற்கொண்டு வரும் மக்கள் மீதான செல் மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களையும் படுகொலைகளையும் பற்றிப் பேசும் போது வடக்கு என்றபடியால் இவை பேசப்படுகின்றன. கிழக்கில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் போது அவை பேசப்படுவதில்லை என்று ஜனநாயவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் கிழக்கிற்காக முதலைக் கண்ணீர் வடிக்கிறார்கள்.


ஆனால் கிழக்கில் ஏற்கெனவே இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்ற போதெல்லாம் இவர்களிடமிருந்து எந்த முணுமுணுப்பும் கூட வந்ததாக வரலாறில்லை.


மறுபுறத்தில் அவ்வாறு நடைபெறவில்லை என்று இத்தகைய ஒடுக்குமுறைகளை மூடிமறைத்து அவற்றிற்குத் துணைபோயிருப்பதையே வரலாற்றில் காணக்கூடியதாகவுள்ளது.


1997என்று நினைக்கிறேன். கிழக்கில் கோணேஸ்வரி என்ற பெண்மணி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட பின்னர் அவரது யோனியில் குண்டு வைத்துக் கொலை செய்த கொடுரம் நிகழ்ந்தது.


இது குறித்து அன்று கொழும்பிலிருந்து வெளியான சரிநிகர் அம்பலப்படுத்தியிருந்தது. அதுமட்டுமல்லாமல் சரிநிகரில் கலா என்கிற கவிஞை கோணேஸ்வரிகள் என்கிற தலைப்பில் ஒரு கவிதையும் எழுதியிருந்தார்.


சரிநிகரில் இவை வெளியான சமயம் பெண்ணிலைவாதிகள் மற்றும் னநாயகவாதிகள் என்று சொல்லப்பட்டோர்  இரண்டு விடயங்களைச் செய்திருந்தனர்.
முதலாவது அவ்வாறான சம்பவம் எதுவுமே நடைபெறவில்லை என்று நிறுவ முயன்றது.


இரண்டாவது கவிதை வெளிப்படையாக பெண் பால் உறுப்புக்கள் குறித்துப் பேசுவதால் அது அசிங்கமானது பிரசுரிக்கத்தகாதது. பெண்களுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்தது.


ஆனால்  இறுதியில் சம்பவம் உண்மையென நிரூபிக்கப்பட்டது மட்டுமன்றி 2000ஆம் ஆண்டிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் பெண் பாலியல் உணர்வு குறித்து வெளிப்படையாக குட்டி ரேவதி சல்மா மாலதி மைத்திரி என்று கவிஞைகள் எழுத ஆரம்பித்த செல்நெறி இன்று ஒரு போக்காகவே வளர்ந்து அங்கீகாரத்துக்கு உள்ளாள்ளாகியுள்ளது. 


இரண்டாவது சம்பவம் கிழக்கு விடுவிக்கப்பட்ட பின்னரும் அதாவது மாகாணசபை அமைக்கப்பட்டு பிள்ளையான் எனப்படுகின்ற சந்திரகாந்தன் முதலமைச்சரான பின்னரும் கிழக்கில் இத்தகைய ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பல வெளிவந்தன.


அப்போது மீளவும் இந்த ஜனநாயகவாதிகளும் பெண்ணியலாளர்கள் என்று சொல்லப்படுபவர்களும் இராணுவ அதிகாரி அரச முகவர்கள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விட்டு அவ்வாறு நடைபெறவில்லை என்று மூடி மறைக்கவே முயன்றார்கள். இவ்வாறு இவர்களே கிழக்கில் நடைபெறும் பல்வேறு ஒடுக்குமுறைச் சம்பவங்களை மூடிமறைத்துவிட்டு கிழக்கில் இத்தகைய சம்பவங்கள் நடைபெறும் போது யாரும் குரல் எழுப்புவதில்லை என்று இப்போது ஒப்பாரி வைப்பது வடக்கில் நடைபெறும் சம்பவங்கள் பற்றி எழும் குரல்களை மழுங்கடிக்கவே என்பது வெள்ளிடை மலையாகத் தெரிகின்றது.


கடந்த ஞாயிறன்று நடைபெற்ற சம்பவம் குறித்து கிழக்கின் முதலமைச்சர் சந்திரகாந்தனிடம் அப்பகுதிமக்கள் முறையிட்ட பொழுது இதற்காகத்தான் தான் காவற்துறை அதிகாரம் கோரியதாகவும் ஆனால் கருணா அதனைக் குழப்பி விட்டார். இப்போது தனது கைகள் கட்டப்பட்டுள்ளன. நீங்கள் கருணாவிடமே போய்க் கேளுங்கள் என்று பொறுப்பை கருணா மீது திருப்பி விட்டிருக்கிறார்.


மக்களால் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சாரனதாகக் கூறி;க்கொள்ளும் நீங்கள் அந்த மக்களைப் பாதுகாக்க முடியாவிட்டால் ஏன் முதலமைச்சராக இருக்கிறீர்கள் என்று தன்னை நோக்கிக் கேட்கும் துணிவு யாருக்கும் இல்லை என்பது அவருடைய நம்பிக்கை.


ஆக விடுவிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வடக்கிலும் மக்கள் படுகொலை நடைபெற்றுக் கொண்டு தானிருக்கிறது. ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட கிழக்கிலும் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொண்டு தானிருக்கிறார்கள்.


ஆனால் இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலை அல்ல பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று இலங்கை அரசு சொல்வதைப் போல இந்த முன்னணிகளும் அமைப்புக்களும் அதன் பிரகிருதிகளும் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.  அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் விடுதலைப் புலிகளும் கொலை செய்கிறார்கள் என்பது தான்.


விடுதலைப்புலிகளின் கொலைகள் ஏற்றுக் கொள்ளக் கூடிவையல்ல. அவை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியவை. பயங்கரவாதத் தன்மை கொண்டவை என்பதில் யாருக்கும் சந்தேகம் எழ வேண்டிய அவசியமில்லை. ஆனால் அவையெல்லாம் இலங்கை அரசின் திட்டமிட்ட இன ஒடுக்குமுறையை இனஅழிப்பை இனப்படுகொலையை இல்லாமலாக்கி விடுமா? அல்லது நியாயப்படுத்தி விடுமா? அல்லது அது இனப்படுகொலை என்று சொல்லப்பட இதுவரை கொடுத்த உயிர்கள் போதாது இன்னமும் கொடுக்கப்பட வேண்டுமா? வெறும் எண்ணிக்கையா அல்லது பண்பா இனப்படுகொலை என்பதைத் தீர்மானிப்பது?


விடுதலைப் புலிகள் உருவாவதற்கு முன்னரிருந்தே இலங்கையின் ஏனைய இன மக்களான தமிழர்கள் முஸ்லிம்கள் மலையகத் தமிழர்கள் இனரீதியாக பாரபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளனர். வருகின்றனர். அது பண்பு ரீதியாக மாறிவிட்டதா? ஒற்றையாட்சியிலிருந்தும் பௌத்த நாடென்பதிலிருந்தும் அது பன்மைத்துவத்திற்கு பண்பு மாற்றம் பெற்று விட்டதா?


இவற்றிற்கெல்லாம் ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படுபவர்களிடம் எந்தப் பதிலும் இருப்பதாகத் தெரியவில்லை.


பதிலைத் தேடுவதற்கு குறைந்த பட்சம் நேர்மையும் நாணயமும் சமூகப் பொறுப்பும் அர்ப்பணிப்பும் தேவையல்லவா?


நான் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்டது போல அரசியல் தலைமைகள் விடும் ஒவ்வொரு தவறுக்கும் மக்கள் தான் இரத்ததத்தால் பதில் சொல்லத் தள்ளப்படுவார்கள். அது புலி என்கிற அரசியல் தலைமையின் தவறுக்கு மட்டுமல்ல. தம்மை ஜனநாயக சக்திகளாகக்  காட்டிக் கொண்டிருக்கும் இந்த முன்னணிகளுடையதும் அமைப்புக்களுடையதும் அரசியல் தலைமைக்கும் அது பொருந்தும்.


ஆம் இவர்களுடைய இந்த வரலாற்றுத் தவறுக்கும் மக்கள் தான் பலியாகிறார்கள். இன்னமும் பலியாகப் போகிறார்கள். இரத்தக்கறை புலிகளுடைய கைகளில் மட்டுமுல்ல. இவர்களுடைய கைகளிலும் தான். 
 
இந்தக் கட்டுரை GTN ற்காக சங்கரன் சித்தார்த்தன் எழுதியது. 
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails