யாழ்ப்பாணம் பளை, கிளாலி, மற்றும் முகமாலை முன்னரங்க நிலைகளிலுள்ள படை முகாம்களை நோக்கி நீண்ட இடைவெளியின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்டிலறித் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
ஏ-9 வீதியை இலக்குவைத்து நேற்றிரவு ஆரம்பித்த எறிகணைத் தாக்குதல்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) நண்பகல்வரை நீடித்திருந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன.
விடுதலைப் புலிகள் வீசிய எறிகணைகளில் பல சிறீலங்கா படையினரது முகாம்களிலும், முகாம்களிற்கு அருகிலும் வீழ்ந்து வெடித்துள்ளன. விடுதலைப் புலிகள் எறிகணை வீசியபோது சிறீலங்கா படையினரை ஏற்றிய 25 வரையிலான பேரூந்துகள் யாழ் குடாநாட்டிற்கு ஏ-9 பாதையூடாக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதால், விடுதலைப் புலிகளின் இலக்கு இந்தப் பேரூந்துகளாக இருக்கலாம் என படைத்தரப்பு எண்ணுகின்றது.
ஏனெனில் உணவுப் பொருள்கள் அடங்கிய பாரவூர்திகள் தென்மராட்சியைச் சென்றடைய முன்னர், படையினரை ஏற்றிய 25 பேரூந்துகளும் தென் பகுதியில் இருந்து அங்கு வந்து சேர்ந்து விட்டதாக கூறப்படுகின்றது.
விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலைத் தொடர்ந்து கிளாலி முன்னரங்க நிலைகளுக்கு அண்மையாக இருந்த மக்கள், மற்றும் விடத்தல்பளை, உசன் போன்ற பிரதேச மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்ட போதிலும், பொதுமக்கள் அற்ற படையினரது முகாம்கள் அமைந்துள்ள பகுதிகள் நோக்கியே விடுதலைப் புலிகள் எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
முன்னரும் பல தடவைகள் தென்மராட்சியிலுள்ள மிருசுவில், வரணி, மற்றும் பலாலி படைத்தளங்கள் நோக்கி துல்லியமான எணிகணைத் தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்டிருந்தனர்.
ஏ-9 நெடுஞ்சாலை ஊடாக யாழ் குடாநாட்டிற்கான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட இருப்பதாக அறிவித்த சிறீலங்கா அரசும், அதன் படைகளும், அந்த உணவுப் பாரவூர்திகளின் கவசத்துடன், யாழ் குடாநாட்டிற்கான படையினர், மற்றும் படைத்துறை வழங்கலை மேற்கொண்டுள்ளனர்.
இந்தத் தகவல் விடுதலைப் புலிகளுக்கு எவ்வாறு தெரிய வந்தது என்றும் விடுதலைப் புலிகள் இலக்கு வைத்து நீண்ட தூரம் ஆட்டிலெறித் தாக்கதலை நடத்துவது எவ்வாறு என்று குழப்பத்திலும் சிறீலங்கா படைத்தரப்பு தற்பொழுது இருப்பதாக கொழும்புத் தகவல்கள் கூறுகின்றன.
No comments:
Post a Comment