பெண்குழந்தை பிறப்பு விகிதம் இந்தியாவில் குறைகிறது: இளம்பெண்கள் மாநாட்டில் ஷாஜிதா.
இந்தியாவில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை ஆண்களை விட மிகக் குறைந்து வருகிறது. இதற்கு வறுமையும், ஆணாதிக்கச் சிந்தனையும் தான் காரணமாக உள்ளது என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்கள் துணைக்குழுவின் அகில இந்திய அமைப்பாளர் ஷாஜிதா கூறினார்.
மதுரையில்இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இளம்பெண்கள் 5-வது மாநில சிறப்பு மாநாட்டை சனிக்கிழமையன்று அவர் துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் 1 கோடியே 75 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட வாலிபர் சங்கம், வேலை வேண்டும், கல்வி வேண்டும் என்ற முழக்கத்துடன் போராடி வருகிறது. இளைஞர்களை அரசியலற்றவர்களாக்கும் போக்கிற்கு எதிராகவும், அவர்கள் சமூகம் குறித்த அக்கறை பெற வேண்டுமானால் அரசியலுக்கு அவர்கள் வரவேண்டும் என்றும் நாம் வாதிடுகிறோம்.
சுதந்திர இந்தியாவில் வேலையற்றவர்களின் எண்ணிக்கை 4 கோடியாக இருந்தது. தற்போது அது 20 கோடியை எட்டிவிட்டது. இந்நிலையில் பிரதமரும், நிதி அமைச்சரும் இந்தியா வேகமாக வளர்ந்து வருவதாகக் கூறுகிறார்கள். இந்தியாவில் 87 கோடி மக்கள் ஒருநாள் வருமானமாக 20 ரூபாய் பெற்றுவரும் நிலையில் மறுபக்கம் சிலர் மட்டும் மேலும் பணக்காரர் களாக மாறிக்கொண்டிருக்கிறார்கள். இது எப்படி வளர்ச்சிப் போக்காக இருக்க முடியும். போதிய உணவு இல்லாமல் ஒரிசாவில் 3 ஆயிரம் ஆதிவாசி குழந்தைகள் இறந்து போய் உள்ளனர். உணவுக்காகவும், வேலைக்காகவும் நாம் நடத்தும் போராட்டங்கள் அதிக அளவு பெண்களுக்கு நிவாரணத்தைப் பெற்றுத்தரும்.
குஜராத்திலும், ஒரிசாவிலும் இந்து மதவெறியர்களினால் ஏராளமான பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் மதத்தின் பெயரால் நடக்கும் கொடுமைகளால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். மூடநம்பிக்கையும் பெண்களை மேலும் புதைகுழியில் தள்ளுகிறது.
இந்தியாவில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. ஆயிரம் ஆண்களுக்கு 933 பெண்கள் என்ற நிலையில் பிறப்பு விகிதம் தற்போது மாறியுள்ளது. இதற்கு வறுமையும், ஆணாதிக்கச் சிந்தனையும்தான் காரணமாக உள்ளது என்று அவர் கூறினார்.
புதிய நிர்வாகிகள்
ஞாயிறன்று இரண்டாவது நாளாக நடைபெற்ற இம்மாநாட்டில் பெண்கள் இயக்க வரலாறு குறித்து, தமுஎகச மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் சுந்தரவள்ளி கருத்துரையாற்றினார். திண்டுக்கல் சட்ட மன்ற உறுப்பினர் கே.பாலபாரதி வாழ்த்துரை வழங்கினார். வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் எஸ். கண்ணன் மாநாட்டினை நிறைவு செய்து வைத்து உரையாற்றினார். ஆர்.பத்மகுமாரி நன்றி கூறினார்.
மாநாட்டில் இளம் பெண்கள் உபகுழு மாநில அமைப்பாளராக டி.வி. மீனாட்சி, துணை அமைப் பாளர்களாக என்.கல்பனா, பி.குணசுந்தரி உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment