|
ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான். ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது. ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது. இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று ராஜபக்ச கணக்கு போட்டார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது. புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை ராஜபக்ச ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கணணி கூட திணறும் போலிருக்கிறதே? இ ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்? இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்? . பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரஸ் அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும். இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள். வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். ராஜிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது. ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை. தமிழ்நாட்டிலிருந்து அதிபதி. |
No comments:
Post a Comment