Monday, March 9, 2009

பீகார் சர்ச்சில் குண்டுவீச்சு - பாதிரியார் உட்பட 5 பேர் படுகாயம்

       
 
ரோதாஸ், மார்ச் 9- பீகார் மாநிலத்தில் தேவாலயம் மீது குண்டுவீசப்பட்டது. தப்பியோட முயன்ற பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பாதிரியார் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் நசாரிகன்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாதியா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இது 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு நேற்று மாலை வினோத்குமார் ஜேம்ஸ் என்ற பாதிரியார் 70க்கும் மேற்பட்ட கிராமமக்களுடன் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் ஜன்னல் வழியாக நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது.
குண்டுவெடிப்பில் தப்பிய பாதிரியாரும் மற்றவர்களும் வாசல் வழியே தப்ப முயன்றனர். அப்போது வாயிலில் கையில் துப்பாக்கியுடன் தயாராக இருந்த வாலிபர் சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டார். இதில் பாதிரியாரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துப்பாக்கியில் குண்டு தீர்ந்தவுடன் அந்த இடத்திலிருந்து வாலிபர் தப்ப முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

காயமடைந்த பாதிரியார் மற்றும் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதிரியாரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இதற்கிடையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் பட்டதாரி என்பதும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக இந்த நடவடிக்கையில் இறங்கியதாகவும், துப்பாக்கியில் குண்டு தீர்ந்திருக்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என போலீசாரிடம் வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். 
 
http://sangamamlive.in/index.php?option=com_content&task=view&id=818

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails