வாஷிங்டன் : கணவரின் வீட்டை விட்டு வெளியேறிய குற்றத்துக்காக, இளம் பெண் ஒருவரின் மூக்கு மற்றும் காது, தலிபான்களால் துண்டிக்கப்பட்ட கொடூரம் ஆப்கனில் நிகழ்ந்துள்ளது.
ஆப்கானிஸ்தான். காந்தாரக் கலைகளுக்கும், உலர் பழ விளைச்சலுக்கும் ஒருகாலத்தில் புகழ் பெற்ற தேசம் இது. இப்போது நிலைமை தலைகீழாகி விட்டது. குண்டு வெடிப்பும், துப்பாக்கிச் சத்தமும் ஆப்கன் மக்களின் ஒரு அங்கமாகவே ஆகிவிட்டது. திரும்பிய இடமெல்லாம், குண்டு வெடிப்பால் சிதைந்த கட்டடங்கள், இறுக்கமான முகங்களுடன் துப்பாக்கிகளுடன் நடமாடும் ராணுவ வீரர்கள். பீதி அகலாத கண்களுடனும், விரக்தி அடைந்த மனதுடனும் நடமாடும் மக்கள். இதுதான் இன்றைய ஆப்கானிஸ்தானின் அடையாளங்கள். அழகு மிகுந்த அந்த தேசம், தற்போது உருக்குலைந்து போய் கிடக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தலிபான் அமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்தது, ஆப்கானிஸ்தான். அப்போது அவர்கள் வைத்தது தான், அங்கு சட்டம். பெண்கள் பள்ளிக்கு போகக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகள் அங்கு அரங்கேறின. கடந்த 2001ல் அமெரிக்காவின் நியூயார்க் இரட்டை கோபுரத்தின் மீது, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பின், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ராணுவம், ஆப்கனில் குவிக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின், தலிபான்களின் பிடியில் இருந்து ஆப்கன் விடுவிக்கப்பட்டது. இருந்தாலும், தலிபான்களின் ஆதிக்கம் இன்னும் அங்கு கொடிகட்டி பறக்கிறது. தலிபான்களின் கொடூரத்துக்கு ஆளான ஆப்கன் இளம்பெண் ஒருவரை பற்றிய விஷயம் தான், தற்போது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையைச் சேர்ந்த குழு, ஆப்கனுக்கு சென்று, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுத்து, அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.
அது குறித்த விவரம்:
பீபி ஆயிஷா: அந்த இளம்பெண்ணின் பெயர் பீபி ஆயிஷா. தற்போது அவருக்கு 18 வயதாகிறது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர். பத்து வயதாகும்போதே, தலிபான் அமைப்பைச் சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்து, ஆயிஷாவை பணத்துக்காக விற்பனை செய்து விட்டார், அவரது தந்தை. அதற்கு பின், இரண்டு ஆண்டுகளுக்கு நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு கொடுமைகளை சந்தித்தார், ஆயிஷா. கணவரின் தந்தை, சகோதரர்கள் உள்ளிட்டோர் ஆயிஷாவை தினமும் கொடுமைப் படுத்தி வந்தனர்.
வீட்டை விட்டு வெளியேறினார்: ஒரு கட்டத்தில், இங்கிருந்து எப்படியாவது வெளியேறி விடவேண்டும் என்று முடிவெடுத்தார். அங்கிருந்து தப்பிச் சென்றார். ஆனால், இந்த நிம்மதி அவருக்கு நீண்ட நாள் நீடிக்கவில்லை. கடந்தாண்டு அவரது கணவர், ஆயிஷாவை கண்டு பிடித்து விட்டார். ஒருஜ்கான் என்ற இடத்தில் செயல்பட்டு வந்த தலிபான் கோர்ட் முன், ஆயிஷா நிறுத்தப்பட்டார். வீட்டை விட்டு ஓடிப்போன குற்றத்துக்காக ஆயிஷாவின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தலிபான் கோர்ட், கடுமையான தண்டனை விதித்தது.
மூக்கு வெட்டப்பட்டது: உயரமான மலைப் பகுதிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். ஆயிஷாவின் கணவரின் சகோதரரும், மற்றவர்களும் அவரை கீழே படுக்க வைத்து, அசையவிடாமல் பிடித்துக் கொண்டனர். பின், அவரது கணவர் கத்தியுடன் வந் தார். முதலில் ஆயிஷாவின் காதை கத்தியால் வெட்டினார். இதன்பின், அவரது மூக்கையும் துண் டித்தார். வலியால் கதறித் துடித்தார், ஆயிஷா. இறந்து விடுவார் என, நினைத்து அவரை மலைப் பகுதியிலேயே விட்டு, விட்டு போய்விட்டனர்.
இதன்பின், எப்படியோ அங்கிருந்து தப்பிச் சென்றார். காபூலில் பெண்களுக்காக தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் நடத்தப்படும் அகதிகள் முகாமில், ஆயிஷா தஞ்சம் அடைந்தார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் சேதமான உறுப்புகளுடன் தற்போது உயிர் வாழ்கிறார். கடந்த சில மாதங்களாக அங்கு தான் அவர் தங்கியுள்ளார். அகதிகள் முகாமுக்கு ஏராளமான மீடியாக்காரர்கள் வந்து சென்றனர். அவர்களுக்கு, ஆயிஷாவின் பரிதாப நிலை குறித்து தெரியவந்தது. இதற்கு பின், அமெரிக்காவின் "டைம்' பத்திரிகையில், சிதைந்த முகத்துடன் ஆயிஷா விரக்தியுடன் காட்சி தரும் புகைப்படங்கள் வெளியாயின. இந்த பரிதாப காட்சியை பார்த்த மக்கள், அதிர்ச்சியில் உறைந்து விட்டனர்.
மறுவாழ்வு: இதுகுறித்த தகவல், அமெரிக்காவில் உள்ள பல்வேறு அமைப்புகளுக்கும் தெரியவந்தது. நல்ல உள்ளம் கொண்ட சிலர், ஆயிஷாவின் சிதைந்த மூக்கு மற்றும் காதை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முன்வந்தனர். இதற்கு ஆயிஷாவும் சம்மதித்தார். இதற்காக அவர் விரைவில் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார். பயங்கரவாதத்துக்கு தன் முகத்தையே விலையாக கொடுத்த ஆயிஷா, "டைம்' பத்திரிகை குழுவிடம் கூறுகையில், "தலிபான் அமைப்புடன் சில ஒப்பந்தங்களை செய்து கொள்ள முடிவு செய்துள்ளாக அதிபர் கர்சாய் தெரிவித்துள்ளார். ஆனால், மிகக்கொடூரமாக நடந்து கொள்வோரிடம் எப்படி இணக்கமாக வாழ முடியும். என்னை அந்த நிலைக்கு ஆளாக்கியவர்கள் அவர் கள் தானே' என, தனது சிதைந்த முகத்தை விரல்களால் தொட்டுக் காட்டி விரக்தியுடன் பேசினார்.
http://thamilislam.tk
No comments:
Post a Comment