ஆடி மாதம் என்றாலே நம்ம ஊரில் அம்மன் கோவில்கள் களை கட்டும். இங்கு மட்டுமல்ல, இலங்கையிலும் இந்த நடைமுறை உண்டு என்பது தான் ஆச்சர்யமான விஷயம். நம்ம ஊரில் ஆடி முடிந்ததும், அம்மன் கோவில்களில் விசேஷம் முடிந்து விடும். இலங்கையில் ஆடியைத் தாண்டி, ஆவணியிலும் காளி கோவில்களில் ஒரே திருவிழா மயம் தான். காளி கோவில்களில் மிருகங்கள் பலியிடுவதற்கு கடந்த மூன்று ஆண்டுகளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு அதைப் பொருட்படுத்தாமல், கொழும்பு, சின்லா பகுதியில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் மிருகங்களை பலிகொடுக்கப்போவதாக அறிவித்துள்ளனர். அங்குள்ள தமிழர்களால், இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. தமிழர்கள் இலங்கையில் சிறுபான்மையினர். மேலும், அங்கு நீண்ட காலமாக நடந்து வந்த உள்நாட்டு போர் நடந்து முடிந்த நிலையில், சர்வதேச நாடுகளின் கவனம் இலங்கை பக்கம் திரும்பியுள்ளது. தமிழர்களுக்கான நிவாரணப் பணிகள் முறையாக நடக்கின்றனவா என, கேள்வி எழுப்பப்படுகிறது.
எனவே, காளி கோவில் திருவிழாக்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த துவங்கி விட்டனர், இலங்கை அரசியல்வாதிகள். துன்பத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் காளி கோவில்களில் மனம் உருக வழிபாடு நடத்துகின்றனர். தமிழர்களுக்காக எதையும் செய்யவில்லை என, புகார் கூறும் அரசியல் எதிரிகளின் வாயை அடக்குவதற்காக, காளி கோவில்களுக்கு படை எடுக்க துவங்கி விட்டனர். இதில், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பேதம் இல்லை. இதற்கு அதிபர் ராஜபக்ஷேவும் விதி விலக்கு அல்ல. சமீபத்தில் கொழும்பில் உள்ள மயூர்பதி பத்ரகாளி அம்மன் கோவிலுக்கு வந்தார், ராஜபக்ஷே.
கண்களை மூடிய நிலையில், கைகளை கூப்பிக் கொண்டு காளி அம்மன் சிலை முன், பக்தி பரவசத்துடன் மனம் உருக வேண்டினார். தனது நெற்றியில் வைக்கப்பட்ட குங்குமத்தையும் தலையை குணிந்து, அடக்கத்துடன் ஏற்றுக் கொண்டார். ராஜபக்ஷேவின் அரசியல் எதிரியான, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி பொன்சேகாவின் மனைவி அனோமாவும், அடுத்த சில நாட்களில் மாதேரோவில் உள்ள பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆஜராகி விட்டார். தேங்காய் உடைத்து, பக்தி பரவசத்துடன் காளி அம்மனை வேண்டிக் கொண்டார். தொடர்ந்து காளி அம்மன் கோவில்களை நோக்கி, இலங்கை அரசியல்வாதிகள் படையெடுத்து வருகின்றனர்.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment