கோவை : கோவை அருகே, நண்பர்களுடன் அணையில் விளையாடிய கல்லூரி மாணவன், நீரில் மூழ்கி இறந்தார். இவர், வீட்டில் பராமரித்து வந்த நடனக்குதிரை, மறுநாளே உயிரைவிட்டது. இவ்விரு நிகழ்வுகளும், மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் கிழக்கு பகுதியில் வசிப்பவர் செந்தில்முருகன்; மில் தொழிலாளி. இவரது இளைய மகன் மணிகண்ணன் (21); வி.எல்.பி., கல்லூரியில் பி.காம்., இரண்டாமாண்டு படித்து வந்தார். கடந்த 2ம் தேதி தனது கல்லூரி நண்பர்களுடன், தமிழக - கேரள எல்லையிலுள்ள வாளையார் அணையில் குளிக்கச் சென்றார். ஒவ்வொருவரும் போட்டி போட்டு அணையில் குளித்துக்கொண்டிருந்தபோது, மணிகண்ணன் மட்டும் வெகுநேரம் வரை வெளியே வரவில்லை. அதிர்ச்சியடைந்த நண்பர்கள், அருகிலிருந்த வாளையார் போலீசுக்கு தகவல் தெரிவிக்க, தீயணைப்பு துறையினர் வந்து மணிகண்ணனின் உடலை மீட்டனர். கல்லூரிக்குச் சென்ற மகன் பிணமாக மறுநாள் வீட்டுக்கு திரும்பியது கண்டு அதிர்ச்சியில் நிலைகுலைந்தனர் பெற்றோர்.
உற்றார், உறவினர் கூடி அன்று மாலையில் உடல் அடக்க சடங்குகளை முடித்து வீட்டுக்கு திரும்பியபோது, அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. மணிகண்ணன் கடந்த ஐந்து ஆண்டுகளாக பராமரித்து வந்த, நடனக் குதிரை மயங்கி கிடந்தது. கால்நடை டாக்டரை அழைத்து வந்து காண்பித்த போது, அதுவும் உயிரை விட்டிருந்தது. "தனது எஜமானன் உயிரிழந்ததை அறிந்து, இந்த குதிரையும் உயிரை விட்டுவிட்டதாகவே' பலரும் கருதி பரிதாபத்துடன் வேடிக்கை பார்த்துச் சென்றனர்.
இது குறித்து, மணிகண்ணனின் தந்தை செந்தில்முருகன் கூறியதாவது:நீரில் மூழ்கி இறந்த எனது மகன், படிப் பில் அக்கறை கொண்டவன். அதே வேளை யில், குதிரை வளர்ப்பிலும் ஆர்வம் கொண்டவன். அவனது விருப்பத்தின்படி ஐந்து ஆண்டுகளுக்கு முன் குதிரை வாங்கினோம். அதற்கு "புயல் ராணி' என பெயரிட்ட அவன், நடனமாடும் பயிற்சியையும் அளித்தான். கடந்த 2009ல் கேரள மாநிலம், கொல்லத்தில் நடந்த "டான்சிங் ஹார்ஸ்' (நடனக் குதிரை) போட்டியில் பங்கேற்ற எங்களது குதிரை, சிறப்பு பரிசு பெற்றது. அதே போன்று, முந்தைய ஆண்டுகளில் நடந்த போட்டியிலும் பல பரிசுகளை பெற்றது. குதிரை மீது மிகுந்த பாசம் வைத்து, பராமரித்து வந்தான். நீரில் மூழ்கி இறந்த மகனின் உடலை வீட்டுக்கு எடுத்து வந்து வாசலில் வைத்திருந்தோம் (அருகில் குதிரை இருந்தது). நீண்ட நேரத்துக்கு பின் எடுத்துச் சென்று உடலை அடக்கம் செய்துவிட்டு திரும்பியபோது, வீட்டில் இருந்த குதிரையும் இறந்துவிட்டது. நல்ல திடகாத்திரமான நிலையில் இருந்த குதிரை திடீரென இறக்க வாய்ப்பே இல்லை. எது எப்படியோ, மகனின் இறப்புக்கும், குதிரையின் இறப்புக்கும் தொடர்பு இருப்பதாகவே கருதுகிறோம்.இவ்வாறு, செந்தில்முருகன் தெரிவித்தார்.
--
http://thamilislam.tk
No comments:
Post a Comment