Wednesday, September 3, 2008

மல்லாவியை இராணுவத்தினர் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

மல்லாவியை இராணுவத்தினர் கைப்பற்றியதாக பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு : விடுதலைப் புலிகளுக்கு மிகவும் முக்கிய இடமாக விளங்கிய மல்லாவிப் பகுதியை இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.Image

மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் கட்டளையின் கீழ் செயற்படும் 573வது படைப்பிரிவின், 57வது படையணி நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு மல்லாவியை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.

விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து கடுமையான பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டபோதும், நேற்று பிற்பகல் அவர்கள் அங்கிருந்து பின்வாங்கிச் சென்றிருப்பதாக இராணுவத்தினரை மேற்கொள்காட்டி பாதுகாப்பு அமைச்சின் இணைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

துணுக்காய் பகுதியை ஒரு வாரகாலத்திற்கு முன்னர் கைப்பற்றியிருந்த இராணுவத்தினர் தற்பொழுது மல்லாவியையும் கைப்பற்றியிருப்பதாக அறிவித்துள்ளனர்.

மல்லாவியில் விடுதலைப் புலிகள் பாரிய பாதுகாப்பு அரண்களை அமைத்து இராணுவத்தினரின் தாக்குதல்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொண்டிருந்ததாகவும், தற்பொழுது விடுதலைப் புலிகளின் மல்லாவி, துணுக்காய்க்கு இடையிலான விநியோகப் பாதை தற்பொழுது முற்றாக நீக்கப்பட்டிருப்பதாக இராணுவத்தினர் கூறியுள்ளனர்.

மல்லாவிப் பகுதி இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் சென்றதையடுத்து காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையொன்றை விடுதலைப் புலிகள் இழந்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் நிர்வாகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட மிகவும் முக்கியமான மூன்றாவது நகரமாக மல்லாவி விளங்கியதாக இராணுவம் கூறுகிறது.

இதேவேளை, கிளிநொச்சி வன்னேரிப் பகுதியை கைப்பற்றும் நோக்கில் இராணுவத்தினர் மேற்கொண்ட முன்னேறல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறியடிப்புத் தாக்குதல்களில் 20 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன், 60 பேர் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

- நமது செய்தியாளர் பிரசாந்தன்
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails