Thursday, September 25, 2008

அமெரிக்க பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து-புஷ்

அமெரிக்க பொருளாதாரத்துக்கு பெரும் ஆபத்து-புஷ்
    

Bush
வாஷிங்டன்: அமெரிக்கப் பொருளாதாரம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு பெரும் ஆபத்தில் சிக்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார்.

அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் பங்கு வர்த்தக மையங்கள் தொடர்ந்து பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன லேஹ்மன் பிரதர்ஸ், மெர்ரில் லின்ஜ் சரிவைத் தொடர்ந்து அமெரிக்கப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ளது.

தொடர்ந்து மிகப் பெரிய காப்பீட்டு நிறுவனமான ஏஐஜியும் வீழச்சிக்குள்ளானது. இந்த வீழ்ச்சியிலிருந்து இந்நிறுவனத்தைக் காப்பாற்ற அமெரிக்க அரசு 85 பில்லின் டாலர்களைக் கடனாகத் தர முன்வந்துள்ளது.

மேலும் மார்கன் அண்ட் ஸ்டேன்லி மற்றும் கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனங்களும் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன. இவற்றைக் காப்பாற்றவும் பெரும் தொகையைக் கடனாகத் தர அமெரிக்க ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

மேலும் வால் ஸ்ட்ரீட் எனப்படும் அமெரிக்க சந்தையின் முக்கிய நிறுவனங்களைக் காப்பாற்ற 700 பில்லியன் டாலர் அளவுக்கு அரசு நிதியுதவி செய்ய வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் தங்களது வரிப் பணத்தைக் கொண்டு இந்த தனியார் நிறுவனங்களைக் காப்பாற்ற அமெரிக்க அரசு முயல்வதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது.

ஊதாரித்தனமான இந்த தனியார் நிறுவனங்களுக்கு மக்கள் வரிப் பணத்தைச் செலவிடுவதா என எதிர் பிரச்சாரத்தில் பல அமைப்புகள் இறங்கியுள்ளன.

அமெரிக்கப் பொருளாதாரத்தின் இந்த சரிவு, உலக பொருளாதாரத்தையே அசைத்துப் பார்த்துவிட்டது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று திடீரென்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அமெரிகாவின் அதிபர் பொறுப்பிலிருப்பவர்கள் பொதுவாக மிக அரிதாகத்தான் இப்படி உரை நிகழ்த்துவார்கள் என்பதால் உலக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையிலிருந்து நேரடியாக ஒளிபரப்பப்பட்ட இந்த உரையில் ஜார்ஜ் புஷ் கூறியதாவது:

அமெரிக்காவின் ஒட்டுமொத்த பொருளாதாரமே பெரும் ஆபத்தில் சிக்கித் தவிக்கிறது. கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியில் நாம் இன்று நிற்கிறோம்.

இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வர அமெரிக்க அரசு 700 பில்லியன் டாலர்களை வழங்க இருக்கிறது. மீண்டும் பணப் புழக்கத்தை சாதாரண நிலைக்கு வரவும், கடன் வழங்கல் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள்  சகஜ நிலைக்குத் திரும்பவும் இந்த உதவி வழங்கப்படுகிறது.

பிரச்சினைக்குள்ளாகியுள்ள அனைத்து நிதி நிறுவனங்களின் பிணைய சொத்துக்களும் மீட்கப்படும், நிலைமை சகஜமானபிறகு மீண்டும் அந்த நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்படும்.

இதை சில தனியார் நிதி நிறுவனங்களுக்கான உதவி என்ற கோணத்தில் மக்கள் பார்க்கக் கூடாது.

நமது நாட்டை பெரும் நெருக்கடியிலிருந்து மீட்டெடுத்து வர செய்யப்படும் அவசர நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் புஷ்.

மேலும் அமெரிக்க எதிர்கட்சிகள் மற்றும் அனைத்துப் பிரிவு மக்களும் இந்த பொருளாதார மீட்பு நடவடிக்கையை எதிர்ப்பின்றி ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails