Wednesday, September 24, 2008

டெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். மும்பையை தாக்கும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது

டெல்லி, ஆமதாபாத் குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் பிடிபட்டனர். மும்பையை தாக்கும் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது

மும்பை, செப்.25-

ஆமதாபாத், டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பில் 80-க்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். `இந்தியன் முஜாகிதீன்' என்ற இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள், இந்த தாக்குதலை நடத்தினார்கள்.

அதைத் தொடர்ந்து டெல்லியில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையின்போது, அதிக், சாஜித் ஆகிய இரு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2 பேர் தப்பி ஓடி விட்டனர். சயீப் உள்பட மேலும் சில தீவிரவாதிகள் டெல்லியில் பிடிபட்டனர்.

பிடிபட்ட தீவிரவாதிகளிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, ஆமதாபாத் தொடர் குண்டு வெடிப்பில் அவர்களுக்கு முக்கிய தொடர்பு இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. உத்தரப்பிரதேச மாநிலம், ஆசம்காட் பகுதியை சேர்ந்த தீவிரவாத கும்பல்தான் இந்த தொடர் குண்டு வெடிப்புக்கு `மூளை'யாக செயல்பட்டது தெரிய வந்தது.

அவர்களை கூண்டோடு பிடிக்க நாடு முழுவதும் வலை விரிக்கப்பட்டது. இந்த நிலையில், குண்டு வெடிப்பு சதியில் தொடர்புடைய 5 முக்கிய தீவிரவாதிகள் நேற்று மும்பையில் பிடிபட்டனர். அப்சல் முதாகிப் உஸ்மானி, முகமது சாதிக் ஷேக், முகமது ஆரிப் ஷேக், அகமத் ஜாகீர் ஷேக், ஷேக் முகமது அன்சாரி ஆகிய 5 தீவிரவாதிகளையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.

கடந்த 2005-ம் ஆண்டில் இருந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை உலுக்கிய அனைத்து குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இந்த 5 பேருக்கும் தொடர்பு இருந்த திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 10 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடி பொருட்கள், 15 டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் சர்கிïட்கள், இயந்திர துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகள், 38 தோட்டாக்கள் போன்ற ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 5 பேரில், உஸ்மானி மும்பை டிராம்பேயில் பிடிபட்டான். சாதிக், வட கிழக்கு மும்பையில் உள்ள நேரு நகரிலும், ஆரிப் குர்லாவிலும், அன்சார் செம்பூரிலும், ஜாகீர், மும்பையின் எல்லையில் உள்ள தானே மாவட்டம், பிவாண்டியிலும் போலீசாரின் பிடியில் சிக்கினார்கள். இது குறித்து நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போலீஸ் கமிஷனர் ஹசன் கபூர், குற்றப்பிரிவு இணை போலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா ஆகியோர் கூறியதாவது-

"உஸ்மானி, ஆமதாபாத் சிவில் ஆஸ்பத்திரியில் குண்டு வைத்தவன். அத்துடன் ஆமதாபாத் குண்டு வெடிப்பில் பயன்படுத்துவதற்காக, நவி மும்பையில் இருந்து 4 வாகனங்களையும் திருடிச் சென்று இருக்கிறான்.

சாதிக், இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவன். டெல்லி குண்டு வெடிப்பில் மூளையாக செயல்பட்ட அதீப்புடன் இணைந்து இவன் செயல்பட்டான். தனது சொந்த ஊரான ஆசம்காட்டில் இருந்து இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆமதாபாத், டெல்லி குண்டு வெடிப்புக்கு தயார்படுத்தியவன்.

உத்தரப்பிரதேச மாநிலம், காசியில் உள்ள சங்கத்மோச்சன் கோவில், மும்பை ரெயில்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பு, லக்னோ மற்றும் பைசாபாத் கோர்ட்டுகள், ஐதராபாத், பெங்களூர், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு மற்றும் சூரத்தில் வெடிக்காத குண்டுகளை வைத்த சம்பவத்திலும் இவர்கள் 5 பேருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

டெல்லியில் வைத்த குண்டுகளை தயாரித்தவர்களில் ஆரீப்பும் ஒருவன். இந்தியன் முஜாகிதீன் இயக்க நிறுவன உறுப்பினர்களில் ஒருவனான ரோஷன் கான், பாகிஸ்தானில் பதுங்கி இருந்து சதிகாரர்களுக்கு ஆலோசனை வழங்கி வந்தான். பிடிபட்டவர்களில் 3 பேர், பாகிஸ்தான் சென்று லஸ்கர் இ தொய்பா, ஹுஜி ஆகிய இயக்கங்களின் ஆதரவுடன் ஆயுத பயிற்சி பெற்றவர்கள்.

முதலில் சிமி இயக்கத்தில் செயல்பட்ட இவர்கள், பின்னர் இந்தியன் முஜாகிதீன் இயக்கத்தில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தனர். இந்த கும்பல் அடுத்த கட்டமாக மீண்டும் மும்பையை குறி வைத்து தாக்க திட்டமிட்டு இருந்தது. அதற்குள் பிடிபட்டதால் அவர்கள் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது''.

இவ்வாறு போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails