Thursday, September 18, 2008

ஒலிம்பிக் சில உண்மைகள்

 

 

« ஒலிம்பிக் என்றதும் நம் நினைவுக்கு வருவது ஒன்றுக்குள் ஒன்றாய்ப் பின்னிப் பிணைந்த அய்ந்து வண்ண வளையங்கள் தான். நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு ஆகிய அய்ந்து வண்ணங்களும் அய்ந்து கண்டங்களைக் குறிப்பதாகும்.

« இதை வடிவமைத்தவர் நவீன ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கிய பியர்ஸ் டி கோபர்டின் அவர்களாவார்கள். 1913ஆம் ஆண்டு வடிவ மைக்கப்பட்ட இக்கொடி 1914ஆம் ஆண்டு ஏற்கப்பட்டு, 1920ஆம் ஆண்டு பெல்ஜியத்தின் ஆன்ட்வெர்ப் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் முதல் பயன்படுத்தப்படுகிறது.

« குறிப்பாக இவ்வைந்து நிறங்கள் தேர்ந்தெடுக்கப்படக் காரணம் என்ன தெரியுமா? அன்றைக்கு உலகில் இருந்த நாடுகளின் கொடியில் இந்த அய்ந்து நிறங்களில் ஏதேனும் ஒன்று நிச்சயம் இடம்பிடித்திருக்கும் என்பது தானாம்.

« ஒலிம்பிக் போட்டியின் நோக்கங்கள் லத்தீன் வார்த்தைகளில் சைட்டியஸ், ஆல்டியஸ், போர்டியஸ் எனப்படும். அதாவது வேகமாக, உயரமாக, உறுதியாக என்று பொருள்படும்.

« வீரர்களுக்கான ஒலிம்பிக் உறுதிமொழி 1920ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. நடுவர்களுக்கான உறுதிமொழி 1972ஆம் ஆண்டு சப்போராவில் நடைபெற்ற ஒலிம்பிக் முதல் ஏற்கப்பட்டது.

« ஒலிம்பிக் கீதம் முதல் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கப்பட்ட 1896 முதல் இசைக்கப்படுகிறது. அதன்பின் ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இசைக் கலைஞர்களை வைத்து அதை உருவாக்கியது. 1958இல் கூடி பன்னாட்டு ஒலிம்பிக் கமிட்டி, 1689இல் பாடப்பெற்ற ஸ்பைரோஸ்சமரஸ்ன் இசையிலும் கோஸ்டிஸ் பாலமாஸ்ன் கிரேக்க வரிகளிலும் இடம்பெற்ற பாடலையே ஒலிம்பிக் கீதமாக அறிவித்தது. 1964 டோக்கியோ ஒலிம்பிக் முதல் இப்பாடலே பாடப்பெறுகிறது. ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் ஒவ்வொரு மொழியில் பாடப்படுகிறது.

« பண்டைய கிரேக்க ஒலிம்பிக்கில் ஏற்றப்பட்ட சுடர் போன்று நவீன ஒலிம்பிக் போட்டிகளிலும் ஒலிம்பிக் சுடர் ஏற்றும் முறை 1928 ஆம்ஸ்டர்டாம் ஒலிம்பிக் முதல் நடைபெற்று வருகிறது. 1936ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக் சுடர் தொடர் ஓட்டம் நடைபெற்று வருகிறது.

« தொடக்க விழா என்பது முதன் முறையாக 1908 லண்டன் ஒலிம்பிக்கில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

« முதல் ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. 1900இல் நடைபெற்ற ஒலிம்பிக்கில் தான் பெண்கள் பங்கேற்றனர்.

« முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் காரணமாக 1916, 1940 மற்றும் 1944ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன.

« 1924ஆம் ஆண்டுவரை ஒலிம்பிக்கில் இடம் பெற்றிருந்த டென்னிஸ் அதன் பிறகு தடை செய்யப்பட்டு, மீண்டும் 1988இல் தான் இடம் பெற்றது.

« 1908, 1912ஆம் ஆண்டுகளில் சில ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றிருந்தாலும், மீண்டும் 1952ஆம் ஆண்டு தான் ரஷ்யா ஒலிம்பிக்கில் பங்கேற்றது.

« 1908ஆம் ஆண்டு ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ விளையாட்டாக விசைப்படகுப் போட்டி இருந்தது.

« 1924ஆம் ஆண்டு முதல் பனி விளையாட்டுக்களுக்கென உருவாக்கப்பட்ட குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக் நடைபெறும் ஆண்டு களிலேயே நடைபெற்ற இப்போட்டிகள் 1992க்குப் பிறகு, 1994 முதல் இரண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு நடுவில் அதாவது ஒலிம்பிக் நடைபெற்ற இரண்டாண்டுகளுக்குப் பிறகு நடத்தப் படும் நடைமுறை வந்தது. அதன் படி 1994, 1998, 2002, 2006 ஆகிய ஆண்டுகளில் நடத்தப்பட்டது. 2010இல் 21ஆவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கனடாவில் நடைபெற உள்ளது.

« கிரிக்கெட் விளையாட்டும் ஒலிம்பிக் போட்டிகளில் இடம் பிடித்திருக்கிறது. ஆனால் 1900ஆம் ஆண்டு மட்டும்தான். அதன் பிறகு கிரிக்கெட்டுக்கு கெட்அவுட் சொல்லிவிட்டது ஒலிம்பிக். இப்போது மீண்டும் சேர்க்கச் சொல்லி கோரிக்கை எழுந்திருக்கிறது.

 

http://periyarpinju.com/200808/page13.html

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails