|
|
வறட்சி, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் உள்ளிட்ட காரணங்களால் ஆப்பிரிக்க நாடுகளில் சுமார் 30 லட்சம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயத்தில் இருப்பதாக யூனிசெப் தெரிவித்துள்ளது. இவர்களில் 14 லட்சம் பேர் எத்தியோப்பியா, சோமாலியா, உகாண்டா, கென்யா, ஜிபூடி நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த நாடுகளில் சிறார்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அங்கு வசிக்கும் மக்களில் பெரும்பாலோனோர் போதிய உணவு இன்றி வாடிவருகின்றனர். இது குறித்து அண்மையில் ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று வந்த ஐ.நா. அதிகாரி ஜான் ஹால்ம்ஸ் கூறியது: எத்தியோப்பியாவில் வறுமையின் பிடியில் சிக்கி போதிய உணவின்றி வாடுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் எத்தியோப்பியாவில் 325 மில்லியன் டாலர் செலவில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அங்கு கூடுதல் உதவி தேவைப்படுகிறது. சோமாலியாவிலும் வறுமை, நோயினால் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்குள்ள அரசுகளின் நிர்வாகக் குறைபாடுகள், தீவிரவாதக் குழுக்களின் அச்சுறுத்தல்கள் போன்ற காரணங்களால் ஐ.நா. உள்ளிட்ட அமைப்புகளில் பணியாளர்கள் அங்கு சென்று பணியாற்றுவதில் பிரச்னை உள்ளது என்றார். எனினும் ஆப்பிரிக்க நாடுகளில் அக்டோபர் மாதம் சிறுவர்களுக்கான உடல்நல முகாம்களை நடத்த யூனிசெப் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் 5 வயதுக்கு உள்பட்ட சுமார் 15 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, ஊட்டசத்துப் பொருள்கள் வழங்கப்படவுள்ளன. வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சில ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 8 மாதத்தில் உணவுப்பொருள்களில் விலை 200 சதவீதம் அதிகரித்துள்ளது. அங்குள்ள பல குடும்பங்கள் தேவையான அளவு உணவுப் பொருள்களை வாங்க முடியாமல் தவித்து வருகின்றன. |
No comments:
Post a Comment