Tuesday, September 2, 2008

சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்தில் 2 பேர் பலி

   

Imageதி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடை தீப்பிடித்து எரிந்ததில் உள்ளே மாட்டிக்கொண்ட 2 ஊழியர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். சென்னையை உலுக்கிய இந்த பயங்கர தீ விபத்து காரணமாக ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அனைத்தும் இன்று 2வது நாளாக மூடப்பட்டதை அடுத்து எப்போதும் பரபரப்பாக காணப்படும் ரங்கநாதன் தெரு இன்று வெறிச்சோடி காணப்பட்டது.

Imageநள்ளிரவு வரை பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் தி. நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள மிகப் பெரிய பாத்திரக்கடையான சரவணா ஸ்டோர்ஸில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தில் பாத்திரங்கள், பிளாஸ்ட்டிக் பொருட்கள், டிவி, பிரிட்ஜ், சோபா, கட்டில் போன்ற பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலாயின. தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் உள்ளே பொருட்களில் கனன்று கொண்டிருந்த தீ மீண்டும் இரவு 10.30 மணியளவில் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

அங்கேயே காத்திருந்த தீயணைப்பு படையினர் அதனை உடனடியாக அணைத்தனர். மீண்டும் நள்ளிரவு 12 மணியளவில், காட்போர்ட் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த பகுதியில் தீப்பிடித்தது.

புகைமூட்டம் மிகவும் அதிகமாக இருந்ததை அடுத்து மக்கள் பீதி அடையக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு தீயை அணைத்த தீயணைப்பு படையினர் தண்ணீரை லாரி லாரியாக பீய்ச்சி அடித்து கட்டிடம் முழுவதும் குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மழை போல தண்ணீர் கொட்டிக்கொண்டிருந்த போதிலும், மீண்டும் மீண்டும் தீ எரிந்து, தீயணைப்பு படையினருக்கு இரவு முழுவதும் வேலை கொடுத்துக்கொண்டே இருந்தது.

அந்த பகுதி முழுவதும் இருட்டாக இருந்தபடியால், கட்டிடத்திற்குள் உள்ளே தீயணைப்பு வீரர்களால் செல்ல இயல வில்லை. இன்று காலை 6 மணிக்கு மேல் காவல்துறையினரும், தீயணைப்பு படை யினரும் கட்டிடத்திற்குள் நுழைந்தனர்.

4வது, 5வது மாடிக்கு உள்ள ஒரே ஷட்டரை உடைத்து திறந்து உள்ளே சென்ற அவர்கள், அலங்கோலமாக எரிந்து சாம்பலான பொருட்களிடையே 2 பேர் உடல் கருகிய நிலையில் பிணமாகக் கிடந்ததைக் கண்டனர். அதில் ஒருவரது உடல் முழுவதுமாக எரிந்து சாம்பலாகிக் கிடந்தது. மண்டை ஓடும், சில எலும்புகளும் மட்டுமே மிச்சமாக கிடந்தன.

மற்றவரது உடல் இடுப்பு பகுதியில் மட்டும் எரியாமல் மற்ற பகுதி அனைத்தும் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக கிடந்தது. அந்த உடலில் வெள்ளி அரைஞாண் கயிறு காணப்பட்டது.

இறந்து போன இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த 2 பேரும் இரவு நேரத்தில் 5வது மாடியில் படுத்துக் கொள்வது வழக்கமாகும். 4வது மாடியில் உள்ள குளியல் அறையில் அவர்கள் பயன்படுத்தி கொள்வது வழக்கம்.

4வது மாடியில் ஷட்டரை பூட்டி அதற்கு ஒரு காவலாளி காவல் இருப்பது வழக்கம். காலை 6 மணிக்கு ஷட்டர் திறந்த பின்பு, உள்ளே தூங்கும் இருவரும் வெளியே வருவார்களாம். நேற்று அதிகாலையிலேயே தீ பிடித்து எரிந்ததை அடுத்து வெளியே காவலுக்கு இருந்த தீபக் என்ற காவலாளி ஷட்டரை திறக்காமல் தப்பித்து ஓடியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாகத்தான், உள்ளே அகப்பட்டுக் கொண்ட கோட்டைச்சாமி, ராமஜெயம் உயிர் இழக்க நேர்ந்தது என்று கூறப்படுகிறது. அந்த இருவரில் ஒருவர் மீது பெரிய பலகை ஒன்று விழுந்ததால், அந்த பகுதி மட்டும் எரியாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதனிடையே இன்று காலை தீப்பிடித்த கடையை மாநகராட்சி, பொதுப்பணித்துறை, போலீஸ், தடை அறிவியல் துறை, மின்சார வாரியம் ஆகியவற்றின் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பயங்கர தீ விபத்துக் காரணமாக 5மாடி கட்டிடத்தின் சுவர்கள் விரிசல் அடைந்து நிற்பதால் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்று 2வது நாளாக ரங்கநாதன் தெரு வியாபாரிகள் கடைகளை திறக்க போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. தீ விபத்தால், கருகிய பொருட்கள் மற்றும் தீயணைப்பு துறை பீய்ச்சி அடித்த தண்ணீர் ஆகியவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ரங்கநாதன் தெருவை இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் சிலர் கீழ்ப்பகுதியில் எரியாமல் தப்பித்த பொருட்களை பத்திரமாக எடுத்துச் சென்றனர். இதனிடையே கடந்த 2 நாட்களாக ரங்கநாதன் தெருவில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டதால் தங்களுக்கு மிகவும் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ரங்கநாதன் தெரு வியாபாரிகள் சங்க தலைவர் கான்பாய், துணை தலைவர் சுரேஷ், செயலாளர் சுகுமார் ஆகியோர் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வலியுறுத்தினார்கள்.

அந்த பகுதியே பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதால், ஆய்வு செய்து அதிகாரிகள் அறிவிக்கும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்று போலீசார் அவர்களிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அதனை ஏற்க வியாபாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. வேண்டுமானால் சரவணா ஸ்டோர்ஸ் பகுதியில் மட்டும் ஒரு தடுப்பு அமைத்து பொது மக்கள் அப்பகுதிக்கு செல்லாதவாறு பார்த்துக் கொள்ளலாம் என்று யோசனை தெரிவித்த வியாபாரிகள், கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இதனை அடுத்து நடந்த பேச்சுவார்த்தையில் பகல் 1 மணிக்குமேல் கடைகளை திறக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

சென்னையில் தீவிபத்து நடைபெற்ற சரவணா ஸ்டோர்ஸ் உள்பட விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பரிதிஇளம்வழுதி தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் இது பற்றி கூறிய அவர், கட்டிடங்களை வரைமுறைப் படுத்தவும், விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டிடங்களை இடிப்பது தொடர்பாகவும் நீதிபதி மோகன் தலைமையில் கமிஷன் அமைக்கப் பட்டுள்ளது. இந்த கமிஷனின் அறிக்கை கிடைத்ததும் அதிகாரிகளை கலந்து பேசி என்ன நடவடிக்கை எடுப்பது என்பது பற்றி அரசு முடிவு செய்யும் என்றார்.

கட்டிடம் கட்டுவோர், அரசு வகுத்து தந்துள்ள விதிமுறைகளை ஒழுங்காக கடைபிடித்து கட்ட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

 
 

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails