Wednesday, April 22, 2009

ஓ இப்படிக்கூட திருடுவாங்களா?

சென்னை: இதுவரை இல்லாத வகையில் ஏடிஎம் இயந்திரத்தையே சிலர் வேனில் போட்டு திருடிச் சென்று விட்டனர். அந்த இயந்திரத்தில் ரூ. 80,000 பணம் இருந்தது.

இந்தியாவில் எங்குமே நடந்திராத இந்த துணிகர திருட்டு சென்னையில் நடந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் கார்டன் ஆர்ம்ஸ் ரோட்டில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இதற்கான ஏடிஎம் மையம் சற்று அருகில் உள்ளது.

வங்கிக்கும், ஏடிஎம் மையத்துக்கும் சேர்த்து ஒரே காவலாளிதான் பணியில் இருந்ததாகவும், ஏடிஎம் மையத்தில் காமிரா இயங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏடிஎம் மையத்துக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மர்ம நபர்கள் சிலர் வேனில் வந்து உள்ளனர். ஏடிஎம் மையத்துக்கு சென்ற அவர்கள் மையத்தில் பணம் நிரப்பவோ, பழுது பார்க்கவோ வந்தவர்களாக இருக்கலாம் என்று கருதியதால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை.

சிறிது நேரத்தில் இயந்திரத்தின் ஒவ்வொரு பாகத்தையும், அந்த நபர்கள் கழற்றி உள்ளனர்.

பின்னர் ஏடிஎம் பணப் பெட்டியை தாங்கள் வந்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு தப்பினர். காலையில் பணம் எடுக்க வந்தவர்கள், ஏடிஎம் மையத்தில் இயந்திரம் இல்லாமல் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

வங்கிக் கிளையை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏடிஎம் இயந்திரம் திருடு போனது குறித்து வங்கியின் கிளை மேலாளர் ஸ்ரீதரன், கீழ்ப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.

திருடப்பட்ட ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.80 ஆயிரம் இருந்ததாக தெரிகிறது.

வழக்கமாக போலி கார்டுகளைப் போட்டு ஏடிஎம்மில்லிருந்து பணம் திருடுவார்கள். அதிகபட்சமாக வங்கிக்குள் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

ஆனால் படு துணிச்சலாக ஏடிஎம் இயந்திரத்தையே தூக்கிச் சென்ற சம்பவம் இப்போதுதான் முதல் முறையாக நடந்திருப்பது வங்கிகளையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails