Thursday, April 30, 2009

சென்னை ரயில்விபத்துக்கு காரணமான மர்மமனிதன்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

  
சென்னையில் நேற்று அதிகாலை மர்ம மனிதன் ஒருவன் மின்சார ரெயிலை கடத்தி சென்று சரக்கு ரெயில் மீது மோத செய்து நாசவேலையில் ஈடுபட்டான்.
 
இதில் அவனையும் சேர்த்து 4 பேர் உயிரிழந்தனர். 11 பயணிகள் காயம் அடைந்தனர்.
 
பலியான 4 பேரில் ஒருவர் வில்லிவாக்கம் ராஜமங்கலத்தை சேர்ந்த ஜோசப் அந்தோணிராஜ் (40) என்று தெரிய வந்தது. மற்றொருவர் ஈரோடு ரெயில்வே மருத்துவமனையில் பணிபுரியும் ஆரோக்கிய நாதன் என்று கண்டுபிடிக்கப்பட்டது. 3-வது நபர் ஆவடியைச் சேர்ந்த மோகன்ராஜ் என்று அவரது அடையாள அட்டை மூலம் தெரிந்தது.
 
4-வது நபர்தான் இன்னும் யார் என்று தெரியவில்லை. அவர்தான் ரெயிலை கடத்தி சென்று நாசவேலையில் ஈடுபட்ட தீவிரவாதியாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.


இந்த மர்ம ஆசாமி யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எதற்காக ரெயிலை கடத்தி நாசவேலை செய்தார்? என்பது போன்ற கேள்விகள் எதற்கும் இன்னமும் விடைகிடைக்கவில்லை.
 
நேற்றைய நாசவேலையில் 2 ரெயில் என்ஜின்களும் முழுமையாக நாசமாகி விட்டன. 4 ரெயில் பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தது. விபத்து நடந்த வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் குண்டுகள் வீசி தாக்கப்பட்டது போல உருக்குலைந்து போனது. இந்த சேதங்களின் மொத்த மதிப்பு 50 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
 
பெரம்பூர் ரெயில்வே போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் டி.ஜி.பி. கே.பி. ஜெயின் சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து பல்வேறு தனிப்படைகள் உருவாக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
 
அவர்களது முதல் கட்ட விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
 
கடத்தப்பட்ட ரெயில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது. இதை இயக்குவது சுலபமான காரியமல்ல. நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே ரெயிலை லாவகமாக ஓட்ட முடியும். ஒரே நேரத்தில் கால் மற்றும் கைகளை பயன்படுத்தி மிகவும் நுணுக்கமாக ஓட்டினால் மட்டுமே ரெயில் சீராக செல்லும். இல்லாவிட்டால் வேகம் குறைந்து தானாக நின்றுவிடும்.
 
நேற்று அதிகாலை 4.45 மணிக்கு ரெயில் டிரைவர் கருணாநிதி பிளாட்பாரத்தில் நின்றிருந்தார். அப்போது ரெயிலின் மற்றொரு வாசல் வழியாக ஏறிய மர்ம மனிதன் திடீரென ரெயிலை இயக்கி உள்ளான். எடுத்த எடுப்பிலேயே ரெயில் வேகம் பிடித்தவுடன் இது சதி வேலை என்பது உறுதியாகிவிட்டது.
 
ரெயில் பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை அனல் பறக்க கடந்து சென்றுள்ளது. பிளாட்பாரத்தில் நின்றிருந்தவர்கள் திகைத்து போயிருந்தனர். அதிகபட்ச வேகத்தில் ரெயில் சென்றது தெரிய வந்துள்ளது.


பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தை கடந்த சிறிது நேரத்தில் பெரிய வளைவு ஒன்று வரும் அதில், வேகமாக சென்றால் ரெயில் கவிழ்ந்து விடும் என்பதால் அங்கு மட்டும் ரெயில் சற்று வேகம் குறைக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த சில நொடிகளில் ராட்சத வேகம் பிடித்து ஓட தொடங்கி உள்ளது. ரயிலை ஓட்டி சென்ற மர்ம மனிதன் ரெயிலில் இருந்து குதிக்க வாய்ப்பில்லை. அப்படியே குதித்தாலும் உடல் சிதறி பலியாகி இருப்பான். எனவே, மர்ம மனிதனும் ரெயில் விபத்து தாக்குதலில் உயிரை விட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது.
 
இதற்கிடையே அடையாளம் தெரியாத அந்த வாலிபரின் பிணத்தின் படத்துடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் ஒரு பிரிவினர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் கடை வைத்துள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர்.
 
இதில், ஒரு எஸ்.டி.டி. பூத் வைத்திருக்கும் நபர் ஒருவர் அந்த வாலிபரை பார்த்ததாக கூறினார்.
 
மேலும் அந்த அடையாளம் தெரியாத வாலிபர் கடந்த ஒரு மாதமாக ரெயில் நிலையத்தில் சுற்றி திரிந்ததாகவும் தினந்தோறும் தனது கடைக்கு வந்து அதிகாலை வேளையில் சிலருடன் போனில் பேசுவார் என்று கூறினார். நேற்று அதிகாலை 4.15 மணிக்கு வந்து போனில் பேசினார். என்ன பேசினார்? யாருடன் பேசினார்? என்பது தெரியவில்லை. இங்கிருந்து சென்றுவிட்டார் என போலீசாரிடம் அந்த கடைக்காரர் தெரிவித்துள்ளார்.
 
கடைக்காரரின் தகவல் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு துருப்பு சீட்டாக கிடைத்துள்ளது. அடையாளம் தெரியாத நபர்தான் ரெயிலை ஓட்டிச் சென்ற மர்ம மனிதன் என்பதை உறுதி செய்துள்ளனர். அவர் யார் யாருடன் போனில் பேசினார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.


மர்ம மனிதன் தற்கொலை படை தாக்குதல் நடத்தும் ஏதாவது தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவனாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
 
சாதாரண நபர்கள் யாரும் இந்த அளவுக்கு ரெயிலை கடத்தி சாதுர்யமான தாக்குதலை நடத்த வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. அமெரிக்காவில் விமானத்தை கடத்தி இரட்டை கோபுரத்தில் மோதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்களே அதேபோல் ரெயிலை கடத்தி எக்ஸ்பிரஸ் ரெயிலில் மோதி அதிகாலை வேளையில் பெரும் சேதத்தை நிகழ்த்த திட்டமிட்டிருக்கலாம்.


 அது சரக்கு ரெயில் குறுக்கே வந்ததால் தவிர்க்கப்பட்டுள்ளது. உயிர் சேதமும் குறைந்துள்ளது. இதுவரை இந்த தாக்குதல் சம்பவத்துக்கு எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.
 
ஆனால் கடந்த ஒருவாரத்திற்கு முன்பே சென்டிரல் ரெயில் நிலையத்தின் மீதும் ரெயில்கள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை தென்னக ரெயில்வேயையும், ரெயில்வே போலீசாரையும், உஷார் படுத்தி உள்ளது. அப்படி இருந்தும் இந்த தாக்குதல் நடந்துள்ளது.

மும்பை தாக்குதலில் ஈடுபட்டு தப்பித்த தீவிரவாதிகள் யாராவது சென்னைக்குள் ஊடுருவி இந்த கொடூர தாக்குதலை திட்டமிட்டு நடத்தி உள்ளனரா? என்ற கோணத்திலும் விசாரித்து வருகின்றனர்.
 
சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்தில் ஒரு பிரிவு தடயங்களை சேகரித்து வருகிறது. ஐ.சி.எப். ரெயில்வே ஆஸ்பத்திரியில் உள்ள காயம் அடைந்த பயணிகளிடம் ஒரு பிரிவும், சென்னை அரசு மருத்துவமனையில் ஒரு பிரிவும், ரெயில் நிலையத்தில் கடை வைத்திருப்பவர்களிடம் ஒரு பிரிவும் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Related Posts with Thumbnails
Related Posts with Thumbnails